[X] Close

ஃபார்மலின் கலப்பு கடைசி மீனவனையும் பாதிக்கும்: மீனவர் சங்கத் தலைவர் வேதனை


meenavar-sanga-thalaivar-on-formalin

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jul, 2018 14:55 pm
  • அ+ அ-

மீன்களில் ஃபார்மலின் கலந்து பதப்படுத்துவது குறித்து தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி வேதனை தெரிவித்திருக்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர்களை யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இது கடைசி மீனவனையும் பாதிக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் இருந்து..

மீன்களில் ஃபார்மலின் சேர்த்து பதப்படுத்துவதாக செய்தி வந்திருக்கிறதே?
ஆமாம் படித்தேன். அதிர்ச்சியாக இருக்கிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. 

ஆனால், அரசு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் ஃபார்மலின் கலப்பை உறுதிப்படுத்தியிருக்கிறதே?
அதனால்தான் அதிர்ச்சியாக இருக்கிறது என்கிறேன். காசிமேடு போன்ற துறைமுகங்களில் தினமும் மீன்கள் வருகின்றன. பிடித்துவரப்படும் மீன்களை வாங்கவும் கூட்டம் இருக்கிறது. அப்படி அன்றாடம் விற்பனையாகும் பொருளில் ஏன் இப்படி கொடிய ரசாயனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இது ஒரு கிரிமினல் குற்றம். இதை உடனடியாகத் தடுக்க வேண்டும்.

அப்படி என்றால் யாரோ சிலர் இதைப் பயன்படுத்துகிறார்கள் என ஒப்புக்கொள்கிறீர்களா?
யாரோ சிலர் பயன்படுத்துவதால்தானே சோதனையில் பாசிடிவ் என வந்திருக்கிறது. சாதாரண சில்லறை வியாபாரிக்கு இந்த ரசாயனப் பொருள் பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் சென்று வாங்கப்போவதும் இல்லை. அந்தப் பின்னணி எதுவென்பதை அரசாங்கம் தான் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும்.

கேரள அரசு தமிழ்நாட்டு மீனுக்கு தடை விதித்துள்ளதே..
ஆமாம். வேதனையான விஷயம். கேரளாவில் இப்போது மீன்பிடி தடைக்காலம். அதனால்தான் இங்கிருந்து அவர்கள் மீன்களை வாங்குகின்றனர். அப்படி இங்கிருந்து மீனை அனுப்பினாலும்கூட ஒரேநாளில் அது கேரளா சென்றுவிடும். ஒன்றிரண்டு நாட்கள் ஐஸ்ஸில் வைத்து பதப்படுத்துவதால் எந்தக் கேடும் இருக்காது. ஒன்றிரண்டு நாட்களுக்காகவா இப்படி ஃபார்மலின் தெளித்து அனுப்பினார்கள் என்பதும் சந்தேகமாக இருக்கிறது?
அதேபோல் ஃபார்மலின் சாதாரண நபர்களால் வாங்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?
ஆமாம், இதற்கு பின்னணியில் லாப நோக்கத்தோடு செயல்படும் ஏதாவது நிறுவனம் இருக்க வேண்டும். அதை அரசாங்கம்தான் கண்டறிய வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்களை யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இது கடைசி மீனவனையும் பாதிக்கும் .
முதற்கட்டமாக அரசு மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். ஃபார்மலின் தீங்குகள் பற்றி அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஃபார்மலின் என்றால் என்ன?
ஃபார்மலின் என்பது 40% ஃபார்மால்டிஹைடு கொண்ட வேதிப் பொருள். பார்ப்பதற்கு தண்ணீர் போன்றும் ஆனால் அதைவிட அடர்த்தியாகவும் இருக்கும். அதில் லேசான மருந்து நெடி இருக்கும்.  இந்த நெடியை சாதாரண மக்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதுவும் மீன் போன்ற பொருட்களில் சேர்த்தால் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியாது.

மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலேயேயும் மட்டும்தான் இந்த ஃபார்மலின் பயன்படுத்தப்படுகிறது. சவங்களைப் பதப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. அதுதவிர சோதனைக்காக சதை திசுக்களை எடுத்து அனுப்பும்போது அந்த திசுக்கள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை ஃபார்மலினில் போடுகின்றனர்.

சாதாரண நபர்களால் ரீட்டெய்ல் கடைகளில் வாங்கும் பொருள் அல்ல. மருந்து சப்ளை நிறுவனங்களில் மட்டுமே இது கிடைக்கும். உணவில் கலந்தல் ஃபார்மலின் நிச்சயம் கேன்சரை ஏற்படுத்தும் என்று மருத்துவமனை தரப்பு தெரிவிக்கின்றது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close