[X] Close

அப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ் மருத்துவமனையில்?


aiims-madurai

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அழகிய தோற்றம். (கோப்புப் படம்)

  • kamadenu
  • Posted: 09 Jul, 2018 13:23 pm
  • அ+ அ-

1947-ல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு விதவிதமான பிரச்சினைகளை சந்திக்கத் தொடங்கியது. கட்டுமானத்தில் தொடங்கி மருத்துவம் வரை பின்தங்கி இருந்தது. மக்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பது அதிகரித்தது. அப்போது, சிறந்த பொறியாளர்களை உருவாக்க (Indian institute of technology) ஐஐடி-யும், மிகச் சிறந்த மருத்துவர்களையும், சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி வடிவத்தில் மருத்துவ வசதியை தருவதற்காக ‘எய்ம்ஸ்’ (All India Institute Of Medical Science) என்ற அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையும் உருவாக்கப்பட்டது. 

அதற்காக அப்போது பிரதமராக இருந்த நேரு, நியூசிலாந்து அரசின் நிதியுதவியுடன் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை டெல்லியில் 1956-ல் உருவாக்கினார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய சுகாதாரத் துறையின் கீழ், அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவக் கல்வியையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

மருத்துவர்களுக்கு இதுபோன்ற உயர்ந்த இடத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற ஆவலும், நோயாளிகளுக்கு இம் மருத்துவமனையில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சையை பெற வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. அது தற்போது தென் மாவட்ட மக்களுக்கு சாத்தியமாகப் போகிறது.

எப்படி இருக்கும்?

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் அமையும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை எப்படியிருக்கும் என்கிற எண்ணமும், ஆவலும் மக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த கண் மருத்துவரும், மதுரை மீனாட்சி மிஷன் கண் மருத்துவப் பிரிவு தலைமை மருத்துவருமான என். சிரிஷ்குமார் கூறியதாவது:

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது முதல் மருத்துவர்களை உருவாக்குவது வரை, அதன் தரம் மிக உயர்வாக இருக்கும். பயிற்சியில் இருக்கும் மருத்துவர்களும், அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மருத்துவர்களும் வெளியே சிகிச்சை செய்ய முடியாது. ஆனால், அதற்கான ஊதியம் அவர்களுக்கு கிடைத்துவிடும். 

அவர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதிலும், அடுத்த நாள் கலந்தாய்வு, நோயாளிகள் சிகிச்சை, மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு தயாராவதற்காகவே இந்த ஏற்பாடு.

கட்டுக்கோப்பான நிர்வாகம்

எய்ம்ஸ் மருத்துவமனையில் அதன் இயக்குநரே அனைத்து அதிகாரமும் பெற்றவராக இருப்பார். ஒருவரை பணியில் இருந்து நீக்கவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் இருப்பதால் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கட்டுக்கோப்பாக நடக்கும். 

அனைத்து துறைகளிலும் இந்த மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய மருத்துவம், வசதிகள் மேம்பட்டவையாக இருக்கும். ஆய்வகங்களும், அறுவை சிகிச்சை அரங்குகளும் சிறப்பாகவும், அதி நவீன வசதிகளுடனும் இருக்கும். சிறப்பு வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் இருப்பார்கள். பணக்காரர்கள் மட்டுமின்றி எளிய மக்களும் இங்கு உயர் சிகிச்சை பெறலாம். இலவச சிகிச்சை, மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட சலுகைக் கட்டண அடிப்படையிலான சிகிச்சை எனப் பலதரப்பட்ட சிகிச்சைகள் இங்கே வழங்கப்படும்.

வெளிநோயாளிகள் பிரிவில் வருவோரை பரிசோதனை செய்து, அவர்களுடைய நோய், உடல் ஆரோக்கியம் அடிப்படையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவார்கள். 

இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவர்கள் சிறப்பு கவனத்துடன் சிகிச்சை அளிப்பார்கள். அதில் கற்றுக்கொள்கிற பாடத்தை கோர்வையாக தொகுத்து ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவார்கள். 

புதுவித நோயால் பாதிக்கப்பட்ட, சிக்கலான மருத்துவ தொந்தரவுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அவர்களுக்கு மருந்துகளை கொடுக்கும்போது இந்த பலன்களை கண்டோம் என்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவார்கள். இதன் மூலம் ஒரு மருத்துவரின் அனுபவத்தை மற்ற மருத்துவர்கள் எளிதாக பயன்படுத்தி அந்த வகை நோய்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடியும்.


சிரிஷ்குமார்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை போல் நோயாளிகளை ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கு அங்கே போங்கள், இங்கே போங்கள் என்று அலைக்கழிக்காமல் ஒரே இடத்தில் எல்லா வசதிகளும் கிடைக்கும். எதுவுமே இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு மருத்துவ வசதிகள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைந்திருக்கும். 

தரமான சிகிச்சை

மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் பற்றாக்குறை, தண்ணீர் தீர்ந்துவிட்டால் உடனே தீர்வு காணப்படும். அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மிகப்பெரிய அளவில் நோயாளிகளுக்கு உடனடியாக தரமான சிகிச்சை கிடைக்கும் ஏற்பாடுதான் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை. ஒவ்வொரு நோய்க்கான அடிப்படை காரணமும், அதற்கான தீர்வும் கண்டறியப்படும்.

தீர்வு காண முடியாவிட்டாலும் அதற்கான முயற்சிகள் என்பது இருந்து கொண்டே இருக்கும். சர்வதேச மருத்துவ நுட்பங்கள், நவீன உபகரணங்கள் வந்தால் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துவிடும். 

நோயாளிகளுடைய எல்லா மருத்துவ சிகிச்சைகளும் ஆவணமாக்கப்படும். எல்லா மருத்துவ சிகிச்சைகளும் ஆராய்ச்சி வடிவில் நடக்கும். 

2013-14-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வளர்ச்சிக்கு ரூ. 1,340 கோடி பட்ஜெட்டும், தற்போது ரூ. 1,500 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஒரு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இந்த மருத்துவமனை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:

200 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. கூடுதலாக 200 எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகள் உருவாகும். 60 செவிலியர் பயிற்சி இடங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சிப் படிப்புகள், முதுநிலைப் படிப்புகள் வர உள்ளன. டெல்லியில் அமைந்துள்ளதைப் போன்று தோப்பூரிலும் தரமான மருத்துவமனையும், ஆய்வுக்கூடமும் அமைவதில் எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை. 

மருத்துவர்கள் பற்றாக்குறை

ஆனால், இந்த மருத்துவமனைக்கு தேவையான தரமான மருத்துவர்களை தேர்வு செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் படித்த மருத்துவர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை உள்ளது. 

இதைவிட அதிகமான தகுதி உடைய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், உயர்ந்த தகுதியை பெற்ற மருத்துவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்கும். 

அதனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மருத்துவப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. 

தற்போது முதற்கட்டமாக 250 மருத்துவர்கள், 300 செவிலியர்கள், 100 லேப் டெக்னிஷியன்கள், 75 மருந்தாளுநர்கள், 300 சுகாதாரப் பணியாளர்கள், 100 அலுவலகப் பணியாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

மருத்துவத்தில் எவ்வளவு உயரத்தை எட்டிப்பிடிக்க முடியுமோ, எவ்வளவு தரத்தைத் தொட முடியுமோ அதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அடைந்துள்ளது. அதே தரத்துடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஹைடெக் குடியிருப்புகள்

 எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெறும் மருத்துவர்கள், பணிபுரியும் மருத்துவர்கள் அங்கேயே தங்கியிருக்கும் வகையில் ஹைடெக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். அதனால், பயிற்சி மருத்துவர்களை ஜுனியர் ரெசிடன்ஸ், பணிபுரியும் மருத்துவர்களை சீனியர் ரெசிடன்ஸ் என்றே அழைப்பார்கள். 

எம்பிபிஎஸ் படித்தவர்கள், மற்றொரு முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்தால் அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகிவிடலாம். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் அப்படியில்லை. பிஜி முடித்த பிறகும் 3 ஆண்டு சீனியர் ரெசிடன்ஸ் மருத்துவராகப் பணிபுரிந்தால் மட்டுமே உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய முடியும்.

இங்குள்ள எல்லா மருத்துவப் பிரிவுகளுமே சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக செயல்படும் எனக் கூற முடியாது. இந்த மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு மருத்துவத் துறையை பொறுத்து, ஸ்பெஷாலிட்டியாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டியாகவும் செயல்படும். 

ஒவ்வொரு உறுப்பு சார்ந்த சிகிச்சைப் பிரிவும் தனி துறையாக செயல்படவும் வாய்ப்புள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டியும், பொதுமருத்துவமும் சேர்ந்தே எய்ம்ஸ் மருத்துவமனையில் அமையும். 


டாக்டர் செந்தில்

எய்ம்ஸ் இயக்குநர் நியமனம் எவ்வாறு? 

மருத்துவத் துறையில் பணிபுரிந்தவரே இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்படுவார். அவரை தேர்ந்தெடுக்க தேர்வு கமிட்டி ஒன்று உள்ளது. அந்த கமிட்டி, இயக்குநரை தேர்வு செய்து அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யும். அவரை அமைச்கக் கமிட்டி நியமனம் செய்யும்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தருக்கு ஆலோசனை கூற செனட் கமிட்டி உள்ளது போன்று, எய்ம்ஸ் மருத்துவமனையில் அதன் இயக்குநரை வழிநடத்த கவர்னிங் (Governing) கமிட்டி உள்ளது. 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஒரு சுகாதாரத் துறை இணை இயக்குநர், நிதி, இணை இயக்குநர், 2 எம்.பி.க்கள் மற்றும் இதர சில அதிகாரிகள் இந்த கவர்னிங் கமிட்டியில் இடம்பெறுவார்கள்.

சுகாதாரத் துறை அமைச்சர் இந்த கமிட்டியின் சேர்மனாக இருப்பார். 6 மாதத்திற்கு ஒரு முறை கூடுவார்கள். இந்த கமிட்டியில் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் சரியான பிரதிநிதித்துவம் இருக்கும்.

கவர்னிங் கமிட்டியில் இரு துணைவேந்தர்களில் ஒருவராக காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரும், மற்றொருவராக தமிழகத்தைச் சேர்ந்த வேறொரு பல்கலைக்கழகத் துணைவேந்தரும் இடம்பெற வாய்ப்புள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிய பணியிடங்களை உருவாக்குவது, பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது போன்ற தீர்மானங்களை இந்த கமிட்டி நிறைவேற்றிக் கொடுக்கும். 

சாதாரண மருத்துவக் கல்லூரிகளில் ‘டீன்’ அனுப்பும் திட்டங்கள், கோரிக்கைகள் சுகாதாரத் துறை செயலருக்கு நேரடியாக செல்லாது. அவரது அலுவலக கீழ்நிலை அலுவலர்களுக்குச் செல்லும். படிப்படியாக சுகாதாரத் துறை செயலருக்கு செல்லும். அதன் பிறகு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்து நிதி ஒதுக்க தாமதமாகிவிடும். 

ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் ரூ.1,000 கோடி வரையிலான திட்டங்களை கையாளும் அதிகாரம் அதன் இயக்குநருக்கும், கவர்னிங் கமிட்டிக்கும் உள்ளது. அதனால், இயக்குநர் சர்வ அதிகாரம் படைத்தவராக செயல்படுவார். 


தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் ஒரு பகுதியில் இந்தியன் ஆயில் குழாய்கள் பதிக்கப் பட்டுள்ள இடத்தை குறிக்கும் எச்சரிக்கைப் பலகை.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close