[X] Close

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு தனி மவுசு!


tanjore-bommai

தஞ்சாவூர் பொம்மைகள்

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Jul, 2018 16:03 pm
  • அ+ அ-

மனைவி சொன்னதையெல்லாம் கேட்பவர்களை, ‘அவன் சரியான தலையாட்டி பொம்மைப்பா’ என்று கேலியாய் சொல்லுவார்கள். ஆனால் மனைவி சொன்னதைக் கேட்கிற கணவன்மார்கள்... கேலிக்கு உரியவர்களோ கிண்டலுக்கு உரியவர்களோ இல்லை. அந்த தலையாட்டி பொம்மையும் ஏப்பைசோப்பையானது அல்ல!

’ஆமாம் சொந்த ஊர் என்ன என்று கேட்டால், நாம் நம்முடைய சொந்த ஊரைச் சொல்லுவோம்தானே. அதேபோல் தலையாட்டி பொம்மைகளுக்கு மட்டும் வாய் இருந்து, எந்த ஊர் என்று நீங்கள் கேட்டால், ‘தஞ்சாவூர்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும்!

ஆமாம்... சோழ தேசத்தில், தஞ்சாவூரில் பெரியகோயில் எப்படிப் பிரசித்தி பெற்றதோ அதேபோல், தலையாட்டி பொம்மைகளும் பிரபலமானவை. இன்றைக்கு கரடி பொம்மைகளும் பார்பி பொம்மைகளும் பெருகித்தான் விட்டன. மேலும் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணங்களிலெல்லாம் கரடிகளும் பூனைகளும் குவிந்துகிடக்கின்றன. இந்த ஆளுயர கரடி பொம்மைகளை டெடிபேர் என்கிறார்கள். இவற்றை குழந்தைகள் என்ன... இளம் வயது நடுத்தர வயதுப் பெண்கள் கூட ‘ஐ லவ் டெடிபேர்’ என்று கட்டிக்கொள்கிறார்கள் (பொம்மையைத்தான்!).

ஆனால், போன தலைமுறை வரை, குழந்தை பிறந்ததென்றால், அது கும்பகோணமாக இருந்தாலும் சரி, கும்மிடிப்பூண்டியாக இருந்தாலும் சரி, ‘வீட்ல குழந்தை பொறந்திருக்கு. தஞ்சாவூர் போனீங்கன்னா தலையாட்டி பொம்மை வாங்கிட்டு வாங்க’ என்று சொல்வது வழக்கமாகவே இருந்தது.

திருநெல்வேலி போனவர்களிடம் அல்வா கேட்பதும் தூத்துக்குடி போய்விட்டு வந்தால், மஹ்ரூன் கேட்பதும் கோவில்பட்டி போய்விட்டு வந்தால், கடலைமிட்டாய் இல்லையா என்று கேட்பதுமான பேச்சுக்கள் நிரவிக்கிடக்கிற உலகில், தஞ்சாவூர் பொம்மையைத்தான் பிறந்த குழந்தைகளுக்கு முதன்முதலாகத் தருவார்கள். அதாவது குழந்தைக்கு எதிரே வைத்துவிட்டு பொம்மையைத் தட்டினால் போதும்... அது சலாம் போடுவதற்குக் குனிவது போல் குனிந்து மீண்டும் நிமிர்ந்து நின்றுகொள்ளும், அழகே அழகு!

தஞ்சாவூரில் மூன்று விஷயங்கள். ஒன்று தஞ்சாவூரை அடுத்துள்ள திருவையாறில் அசோகா எனும் அல்வா பிரபலம். அங்கே உள்ள ஆண்டவர் ஸ்வீட் ஸ்டாலில், பரம்பரைபரம்பரையாக அசோகா தயாரித்து, வெளியூர், வெளிநாடு என ஏற்றுமதி செய்கிறார்கள். மேலும் மாலை வேளை என்றில்லாமல், எப்போது போனாலும் சுடச்சுட அசோகாவை அள்ளிச் சாப்பிடலாம்.

அடுத்து... தலையாட்டி பொம்மைகள். இந்த பொம்மைகள், குழந்தைகள் கையில் வைத்திருந்தாலும் எந்த கெமிக்கல் தொற்றும் ஏற்படாது. ஏன்? அதில் கெமிக்கல் எதுவும் கலப்பதில்லை. முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் இவை. வேலைப்பாடுகள் அத்தனை நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கும்; அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அடுத்து... தஞ்சாவூர்த் தட்டு என்பது மிகவும் பிரபலம். ஒரு தட்டுதானே என்றெல்லாம் ஒரு தட்டு தட்டி, செய்திருக்கமாட்டார்கள். அவற்றில் அவ்வளவு வேலைப்பாடுகள். அத்தனை நேர்த்தி. தட்டின் நடுப்பகுதியில் கலைநயத்துடன் ஏதேனும் படங்களும் செய்யப்பட்டிருக்கும். மலர்கள் வரையப்பட்டிருக்கும்.

ஆக, அசோகா, தஞ்சாவூர்த் தட்டு, தலையாட்டி பொம்மைகள் என மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? மூன்றுமே தஞ்சாவூரை ஆட்சி செய்த சரபோஜி மன்னர்களால் கொண்டுவரப்பட்டது. இன்னொரு விஷயமும் உண்டு... அது தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ். தஞ்சை ஓவியங்கள். இதுகுறித்தெல்லாம் தனித்தனியே பார்ப்போம்.

வடக்கிருந்து வந்தவைதான் என்றாலும் கூட, ஒவ்வொன்றும் நம்மை வெகுவாகவே கவர்ந்துவிடும்.

ராஜாராணி பொம்மைகள், நடனமாடும் பொம்மைகள், நடனமாடும் பெண்ணின் தலை மட்டும் ஆடுகிற பொம்மைகள், தலையும் காலுமாக ஆடுகிற பொம்மைகள், தாத்தா பாட்டி பொம்மைகள் என பலப்பல வண்ணங்களில் கண்ணையும் மனசையும் கவருகின்றன.

தஞ்சையை கெளரவப்படுத்துகிற விஷயங்களில் தனியிடம் பிடித்த தலையாட்டி பொம்மைகளை, மனைவி சொல் கேட்கும் தலையாட்டி பொம்மை என்றெல்லாம் சொல்லாதீர்கள் இனி!

நானூறு வருடப் பழமை வாய்ந்த தலையாட்டி பொம்மைகளை வீட்டுக்கு ஒன்று வைத்துக்கொள்ளலாம். லயமாகவும் நயமாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் மனசுக்கு மருந்தாகவும் இருக்கும்!

தஞ்சைத்தரணி இருக்கும் வரை தலையாட்டி பொம்மைகளும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்!

 

திருவையாறு அசோகா கட்டுரைக்கு

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close