[X] Close

இது டிஜிட்டல் மொட்டை கடுதாசி!


anonymous-chatting-apps

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jul, 2018 12:36 pm
  • அ+ அ-

பாமா விஜயம் என்றொரு படம். அது படம் அல்ல பாடம் அந்தளவுக்கு குடும்ப அக்கறை அந்தப் படத்திலிருக்கும். பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடனில் மூழ்கி சிக்கித்தவிக்கும் மகன், மருமகள்களை நேர்வழிப்படுத்த பாலையா ஒரு மொட்டைக் கடுதாசி அனுப்புவார். படத்தின் திருப்புமுனையே அந்த மொட்டைக் கடுதாசிதான்.

இப்படி மொட்டைக் கடுதாசிகளால், திரையிலும் நிஜத்திலும் நன்மைகள் நடந்திருக்கின்றன. சில நேரங்களில் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.

அப்படி ஒரு மொட்டைக் கடுதாசி வகையறாதான் இப்போது இணைய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக் முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது 'ட்ரிக்கி சாட்'. இணையவழியில் இப்படி மொட்டைக் கடுதாசிகள் வருவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக 'அனானிம்ஸ்' சாட், 'ஸ்டிரேஞ்சர்' சாட், 'சராஹா' சாட் போன்ற சாட்டிங் செயலிகள் வந்திருக்கின்றன. அவற்றின் பரிணாம வளர்ச்சி வரிசையில் லேட்டஸ்ட்தான் ட்ரிக்கி சாட், ஃபீட்நோலி சாட்டிங் செயலிகள்.

சேட், ஷேர், போஸ்ட் அனானிமஸ்லி, (Chat, Share, Post Anonimously) இதுதான் ட்ரிக்கி சாட்டின் தூண்டு மந்திரம். உங்களை யார் என்பதை அடையாளம் காட்டிக் கொள்ளாமலேயே பேசிக் கொள்ளத் தூண்டுகிறது.

மொட்டைக் கடுதாசி எழுதுபவர்கள் டீஃபால்ட்டாக "இதைப் படித்தவுடன் கிழித்துவிடவும்"  என எழுதுவார்கள். ஆனால், இங்கு அப்படி எழுத முடியாது. காரணம் அந்தக் கேள்விகளை எல்லாம் ஊரே படிக்கும். அப்புறம் கிழித்தால் என்ன? அழித்தால்தான் என்ன?

ஏன் அடையாளத்தை மறைக்க வேண்டும்!


இந்த இளந்தலைமுறையினர் சாட்டர் பாக்ஸ்களாகத்தான் இருக்கின்றனர். ஃபேஸ்புக்கில் சேட், வாட்ஸ் அப்பில் சாட், ஸ்கைப்பில் சாட் இதெல்லாம் பத்தாது என்றே இந்த மொட்டைக் கடுதாசி சேட். நேருக்கு நேராக நண்பர்களிடமோ தெரிந்தவர்களிடமோ பேச இயலாதவர்கள் இப்படி மொட்டைக் கடுதாசி போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் என்னைப் பற்றி இந்த மொட்டைக் கடுதாசி வாயிலாக ஏதாவாது சொல்லுங்களேன் என வான்டடாக வேண்டுகிறார்கள்.

இப்படித்தான் சராஹாவில் கோபம், காமம், காழ்ப்புணர்ச்சி என பல உணர்ச்சிகளை முகம் தெரியாது என்பதால் அவிழ்த்தவிட்ட வாடிக்கையாளர்களை ஒரு புரளி பதறவைத்தது. சராஹாவில் இதுவரை குறுந்தகவல்களை அனுப்பியவர்களின் அடையாளம் வெளியிடப்படும் என்று ஒரு தகவல் பரவியது.

அந்தத் தகவலால் ஆடிப்போன இணையவாசிகள் அது புரளி என்பது உறுதியான பின்னர்தான் இயல்புநிலைக்குத் திரும்பினர். 

இப்போது ட்ரிக்கசாட் வந்திருக்கிறது. இது என்னவெல்லால் செய்யப்போகிறதோ. ட்ரிக்கி சாட்டில் அக்கவுண்ட் ஆரம்பித்தவுடன் http://r-------n---p.trickychat.com/ (இது ஒருவருடைய ட்ரிக்கி சாட் கணக்கின் முகவரி) இப்படி ஒரு அட்ரஸ் உருவாக்கித்தரப்படும். அப்புறம் என்ன இந்த முகவரியை நீங்கள் ஃபேஸ்புக் வாலில் பகிர்ந்தால் போதும். ஏடாகூடமான கேள்விகள் எல்லாம் வந்து சேரும். உங்கள் முன்னாள் காதலி பெயர் இதுதானே.. என்று யாராவது சொல்லி வைக்க குடும்பத்தில் வேட்டு வெடிக்கும். 

எந்த விலங்குகளுக்கும் இல்லாத வரம் மனிதர்களுக்கு இருக்கிறது. அதுதான் பேசும் திறன். மனதில் நினைப்பதை வார்த்தைகளாக்கி பேச முடியும். பேசுவதற்கு ஒரு மொழி மட்டுமல்ல பல நூறு மொழிகளும் இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு மெசேஜில் பேசும் அவலம் எல்லாம் இந்த இணைய உலகில் இருக்கும்போது முகம் தெரியாமல் வேறு பேச வேண்டுமா?!

இத்தகைய அநாமதேய பேச்சுக்கள் பிளாக் மெயிலில்கூட சென்று முடியலாம். இவை அவசியம்தானா?

விளையாட்டாகவே இருக்கலாம். ஆனால், விளையாட்டுகளுக்கு எல்லை வேண்டும் அல்லவா? 

முகம் தெரியாமல் அல்ல மனம் விட்டு பேசுவோம். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராகப் பேசுவோம். ஏனெனில் நாம் மனிதர்கள். 

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close