[X] Close

பயணங்களும் பாதைகளும் 14: 'வள்வள்’ சொல்லாத நாய்கள்!


payanangalum-paadhaikalum-14

  • kamadenu
  • Posted: 05 Jul, 2018 11:18 am
  • அ+ அ-

ஜெர்மனியில் ஒரு நாள்...

இன்று வெளியே செல்ல மிகவும் உகந்த நாள். சூரியன் தலையைக் காட்டும். குளிர்க் காற்று வீசும். அவ்வப்போது .தூறலும் வரலாம். ஆனாலும் வெளியே செல்லக்கூடிய நாள்!

அலெக்சாவின் காலை அறிவிப்பு இது. வயிற்றில் ஜில் பால் வார்த்தது அந்த ஒருநாள் காலைப்பொழுது வெதர் ரிப்போர்ட் .

இங்கே மழை வரும் நேரமாகட்டும், யூ பான், பேருந்து, ட்ரெயின் எதுவாக இருந்தாலும் நேரம் தவறுவது மிக அதிசயமே. எதை வைத்து மழை, ஐஸ்கட்டி மழை , வெயில் வரும் நேரத்தை மிகத் துல்லியமாக சொல்ல முடிகிறதோ என்பது வியப்புதான்.

ஆக, இங்கே எல்லாம் ப்ளான் பண்ணவேண்டும்.  பண்ணியாயிற்று. இஸார் நதிக்கரை ஓரம். கால்கள் நனைந்தபடி ஒரு லாங் வாக் போவது என  முடிவு செய்யப்பட்டது.

இனி வாக்கிட்டபோது பார்த்தது....பார்த்ததும் தோன்றியது.... உங்களுடன் இப்போது டாக்கிட்டபடி........

காலை உணவு. குண்டுகுண்டாக விதம்விதமாக பிரட் பன். கடித்துக் கடித்து கன்னம் குண்டாக.....வேண்டாம் இந்த ரிஸ்க்...அதனால் வீட்டில் சாம்பார் தச்சி மம்மம். சாப்பிட்டுக் கிளம்பியபோது மணி ஒன்று.

சே ...நல்ல வெயில் வீணாகிவிட்டதே என்று தோன்றியது. . நிலைமையை பார்த்தீர்களா. வெயில் வீணாவதைப் பற்றி இப்போது கவலை. இந்தியாவில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. இந்த இசார் நதியை ஊரில் எங்கிருந்தும் பார்க்கமுடியும். நம்மூர் காவிரி போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்! நாம் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள நதிக்கரையைத் தேர்ந்தெடுத்துப்போகலாம். நாங்கள் போன இடம் அவ்வளவாக ஆழம் இல்லாத பகுதி. வீக் டே. மதியம் கூட்டம் இருக்காது என்று நினைத்தால்... நம்மை விட வேலை வெட்டி இல்லாதவர்கள் மிக அதிகம் போல!  

நான் கவனித்தவரை, இங்கு யாரிடமும் பரபரப்பு தென்படுவதில்லை. Slow motionல் காட்டப்படும் திரைப்படக் காட்சி போல், எல்லாவற்றிலும் மிக நிதானம் . இவர்களின் BP rate percentage மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

சரி..வெயில்... சன் பாத்துக்காக வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால்... எல்லோர் கைகளிலும் இரண்டு அல்லது மூன்று நாய்கள். இதில் நாயுடன் தனியே வந்தவர்கள் அதிகம் . மணலில் அமர்ந்து விட்டு நாயைத் தனியே விட்டு விடுகிறார்கள்.

ஒரு விஷயம் புரியவில்லை. நம் நாய்கள் ஏரியா கண்ட்ரோல் செய்வது போல், இங்கு ஏன் செய்வதில்லை. தெருவில் வேறு ஒரு நாய் சென்றால் கூட வீட்டினுள்ளே ள் கட்டப்பட்டிருக்கும் நம்மூர் நாய் என்ன கூச்சல் போடும். இங்கே ஒரு சத்தம் கூட இல்லை.

சோஷியலிசம் ... நாய் வழி!  

மற்றும் ஒரு கண்டுபிடிப்பு ....

நாய்கள் தண்ணீர் கண்டு பயப்படுகின்றன. வீட்டில் குளிக்க வைப்பது பெரும் பாடு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே, நேர் எதிர். மண்ணில் இறங்கிய கையோடு தண்ணீரில் தானாகவே சென்று ஒரு தொபுக்கடீர் குதியல் .

ஒருவேளை... மனிதர்கள் இங்குக் குளிக்க அஞ்சுவார்கள் போல! காதைக் கொண்டு வாருங்கள்.....மற்றுமொரு முக்கிய செய்தி.....இங்கே எங்கெங்கு காணினும் கருப்பு சட்டைதான்! மென் அண்ட் விமன்...இன் ப்ளாக்! கருப்பு இந்நாட்டின் தேசிய நிறம் போல!  

சரி, நாய்கள் பற்றிய மற்றும் ஒரு செய்தி...

இங்கே எல்லா இடங்களிலும் நாய்க்குப் பேப்பர் டிஸ்பென்சர் வைக்கப்பட்டுள்ளது . கக்கா போய்விட்டால் நாம் நம் குழந்தைகளுக்குச் செய்வதை விட அருமையாய் அவற்றை வாரி டஸ்ட் பின்னில் போடுகிறார்கள்.

கூடிய விரைவில் டாகி போகோ மாம்..... மார்கெட்டில் வெளி வந்தால் ஆச்சரியப்படவேண்டாம் . சீட் காப்பிடல் முதலீடு க்கு இதை மனதிலும் இந்தியா கொள்ளலாம்.

அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமான வித்தியாசம் ஒன்றைப் பார்த்தேன். அமெரிக்கர்களிடம் இந்த நாய் வளர்ப்பு பழக்கம் அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆனால் ஐரோப்பியாவில் நாய் இல்லாத வீடுகளைப் பார்க்கவே முடியாது. நாய் என்று ஒற்றைப்படையில் சொல்லக்கூடாது. ஏனென்றால் இரண்டு மூன்றும் அதற்கும் அதிகமாகவும் என்ற கணக்கில் நாய்கள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன.

இவற்றைக் காலையிலும் மாலையிலும் எப்பேர்ப்பட்ட குளிரிலும் வாக் அழைத்துச்செல்வதை அவர்கள் தயங்குவதில்லை. முழங்கால் புதைய கீழே கொட்டிக்கிடக்கும் பனிக்குவியலிலும் டக் வாக்காக டாக் வாக். நாய் இங்கே செல்லப்பிராணியாக மட்டும் பார்க்கப் படுவதில்லை. ஒரு குழந்தையைப்போல் நினைக்கிறார்கள்  நடத்துகிறார்கள். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வண்டிகள் அனைத்திலும் இவர்களுடன் இந்தச் செல்லைப் பிராணிகளையும் பார்க்கலாம். ரயில் பெட்டிகளிலும்  பேருந்துகளிலும் குழந்தைகளின் ப்ராம் வண்டிக்கு ஒரு தனி இடம் போல் நாய்களைக்கட்டி வைக்க ஒரு இடம்.

இதில் ஆச்சர்யம், இந்த நாய்கள் நம்மை விடச் சாதுவாக வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான்.

லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close