[X] Close

‘வெள்ளிக்கிழமை நாயகன்’ ஜெய்சங்கர்...‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் பிறந்தநாள் இன்று!


  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jul, 2019 12:29 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

வீட்டு பீரோவில் கத்தைகத்தையாக பணம் வைத்திருப்பார்கள். ஆனால், அவர் வீட்டு பீரோவில், காசோலைகள் கட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். எல்லாமே ‘பெளண்ஸ்’ ஆனவை. அதாவது, அவையெல்லாம் ‘பாஸ்’ ஆகாத காசோலைகள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் எப்போதுமே கவலைப்பட்டதே இல்லை. ‘இவ்வளவு சம்பளம் வேணும்’ என்று ஒருபோதும் கறார் காட்டியதில்லை. பணமின்றி திரும்பி வந்த காசோலைகளைப் போலவே, வராத சம்பளப் பாக்கிகளைக் கணக்கிட்டாலே, சென்னை தி.நகர் மாதிரி ஏரியாவில், பெரிய பங்களா வாங்கியிருக்கலாம் என்பார்கள். இப்பேர்ப்பட்ட ஒருவர், நம் தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வந்திருக்கிறார். இன்றைக்கும் நம் மனங்களில் நின்று கொண்டிருக்கிறார். அவர்... ஜெய்சங்கர். ’மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர்.

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்சங்கர். படிப்பில் கெட்டி. இறுக்கிப்பிடித்திருந்தால் வக்கீலுக்கு படித்து வாதாடியிருந்திருப்பார். ஆனால், படிக்கும் போதே நடிப்பதில் ஆர்வம். ’உன் நடை நல்லாருக்கு. சிரிப்பு செமயா இருக்கு. பேச்சு ஸ்டைலா இருக்கு. நடிக்கலாமே...’ என்று நண்பர்கள் உசுப்பிவிட, வாய்ப்புக்காக அலைந்தார்.

நடிகர் சோவின் ‘விவேகா பைன் ஆர்ட்ஸ்’ நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார். சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்தான். ஆனாலும் தனித்துத் தெரிந்தார் ஜெய்சங்கர். பின்னர், கல்கி ஆர்ட்ஸில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். ‘அமரதாரா’ எனும் நாடகம், இவரை எல்லோரும் பேசும்படி செய்தது.

இதனிடையே சினிமா வாய்ப்பு தேடி, நடையாய் அலைந்தார். வாய்ப்பு உடனே கிடைத்துவிடவில்லை. இவரின் முகம், நடை, பேச்சு, வெள்ளந்தியான சிரிப்பு என்றெல்லாம் பார்த்த இயக்குநர் ஜோஸப் தளியத், ‘இந்தப் பையன்கிட்ட என்னவோ இருக்கு’ என்று அழைத்தார். வாய்ப்பளித்தார். தமிழ் சினிமாவில் நடிகராக, நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் ‘இரவும் பகலும்’.

அதன் பிறகு இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்; நடித்தார். அப்போதுதான் அப்படியொரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஏவிஎம் தயாரிப்பில், ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் நாயகனானார் ஜெய்சங்கர். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். ‘அன்புள்ள மான்விழியே... ஆசையில் ஓர் கடிதம்’ என்ற பாடல், இன்று வரைக்கும் இனிக்கும் காதல் பாடல்களில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துவைத்திருக்கிறது.

jai1.jpg 

இதன் பிறகு வரிசையாகப் படங்கள். எல்லாமே சுமாரான வெற்றியை, சூப்பரான வெற்றியைத் தந்தன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். என்று கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. ஸ்டைலீஷான ரவிச்சந்திரன் ஒருபக்கமும் சிவாஜியை இமிடேட் செய்யும் ஏவிஎம்.ராஜனும் வந்துவிட்டிருந்த காலகட்டம். ஆனால், எவர் மாதிரியாகவும் நடிக்காமல், புதுமாதிரியாக நடித்தார் ஜெய்சங்கர். இவரின் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் மாதச் சம்பளத்துக்கு அவரை வைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக படங்கள் பண்ணியது. ‘வல்லவன் ஒருவன்’, திரைப்படமும் ‘சிஐடி.சங்கர்’ படமும் அவரை வசூல் சக்கரவர்த்தியாக்கிற்று. கத்திச்சண்டை போட்டு வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர். பின்னாளில்,  எம்ஜிஆர் ’ரகசிய போலீஸ் 115’, சிவாஜி ’தங்கச்சுரங்கம்’ மாதிரியான படங்கள் பண்ணுவதற்கு, இவரின் படங்களே ஆசையை வளர்த்தன என்பார்கள்.

ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், இன்னொரு பக்கம், ’பஞ்சவர்ணக்கிளி’ மாதிரியான குடும்பக் கதைப் படங்கள், நடுவே ’பொம்மலாட்டம்’, ’வரவேற்பு’, ’பூவா தலையா’ என காமெடி படங்கள் என ரவுண்டு கட்டி வலம் வந்தார் ஜெய்சங்கர்.

ஒருகட்டத்தில் சிறிய தயாரிப்பாளர்களெல்லாம் ஜெய்சங்கரை டிக் அடித்தார்கள். குறைந்த சம்பளத்தில், எந்த டார்ச்சரும் செய்யாமல், ஈகோ எதுவும் பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார். மிகுந்த லாபத்துடன், தயாரிப்பாளர்கள் மகிழ்ந்து நெகிழ்ந்த காலம் அது. கேட்கும் சம்பளமும் குறைவு. அந்தக் குறைவான சம்பளத்திலும் பாக்கி வைத்தால் அதைக் கேட்பதுமில்லை. ‘அவங்ககிட்ட இல்லேன்னுதான்  நமக்குத் தரமுடியாம இருக்காங்க. அவங்களுக்குக் கிடைக்கும் போது தரட்டும். கிடைச்சும் தரலையா... பரவாயில்ல’ என்று அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாராம் ஜெய்சங்கர்.

jai (1).jpg 

வாணிஸ்ரீ, சிஐடி சகுந்தலா, எல்.விஜயலட்சுமி, ஜமுனா என்று வரிசையாக பலருடனும் நடித்தார். ஜெயலலிதாவை, அந்தக் காலத்தில் இவருக்கு ஏற்ற ஜோடி என்றார்கள் ரசிகர்கள். ‘நீ’, யார் நீ’, ‘வந்தாளே மகராசி,’ ’வைரம்’ என்று வரிசையாக படங்கள் இந்த ஜோடிக்கு ஹிட்டைக் கொடுத்தன.

வாராவாரம் வெள்ளிக்கிழமையில் படங்கள் ரிலீசாவது அப்போதும் உண்டு. அந்த வெள்ளிக்கிழமையில் ஜெய்சங்கர் படம் நிச்சயமாக ரிலீசாகும். வாராவாரம் வெள்ளிக்கிழமையன்று இவரின் படம் ரிலீசாவதால், ஜெய்சங்கருக்கு, ‘ஃப்ரைடே ஹீரோ’, ‘வெள்ளிக்கிழமை நாயகன்’ என்றெல்லாம் இவரைக் கொண்டாடினார்கள். தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் என எல்லோருக்கும் பிடித்தவராக ஒரு நடிகர் இருப்பது எட்டாவது அதிசயம். ஜெய்சங்கர் அப்படியொரு அதிசயப் பிறவி.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, அந்தக் காலத்தில், முதலாளி, தெய்வமே, கடவுளே, தலைவரே என்றெல்லாம் நடிகர்களை உயரத்தில் வைத்துக் கூப்பிடுவார்கள், சினிமாவில். ஆனால்,  ஜெய்சங்கர்  அப்படி  அழைப்பதை விரும்பவில்லை. எல்லோரையும் தோழமையுடன் பார்த்தார். மேற்கத்திய ஸ்டைலில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் உலா வந்தது போல, மிகப்பெரிய தயாரிப்பாளர் முதல் லைட்மேன் வரை யாரைப் பார்த்தாலும் ‘ஹாய்’ ‘ஹாய்’ என்று அன்புடன் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இதில் இன்னும் அவரிடம் நெருங்கினார்கள். மனசுக்கு நெருக்கமாக்கிக் கொண்டார்கள்.

ஒருகட்டத்தில், வில்லனாக நடிக்கக் கேட்டபோது, அதற்கும் சம்மதித்தார். ‘முரட்டுக்காளை’ படத்தில் வில்லனாக நடித்தார். அதைத் தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர கேரக்டரிலும் ஏகப்பட்ட படங்கள் செய்தார்.

மக்கள் கலைஞர், தென்னக ஜேம்ஸ்பாண்ட், வெள்ளிக்கிழமை நாயகன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஜெய்சங்கருக்கு இன்று 12.7.19 பிறந்தநாள். நல்ல நடிகரை, சிறந்த மனிதரை... கொண்டாடுவோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close