[X] Close

முகிலன் விவகாரத்தில் உண்மை வெளிவராமல் தடுப்பதே போலீஸ்தான்- ‘மக்கள் கண்காணிப்பகம்' ஹென்றி டிபேன் பேட்டி


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 09:29 am
  • அ+ அ-

-கே.கே.மகேஷ்

சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் 141 நாட்களுக்குப் பிறகு வெளியே வந்திருக்கிறார். இதுவரை, “முகிலன் எங்கே?” என்று கேட்டவர்கள், இப்போது, “அவரை யாரேனும் கடத்தினார்களா அல்லது பாலியல் புகார் காரணமாக அவரே தலைமறைவானாரா?” என்றெல்லாம் கேட்கிறார்கள். இந்த நிலையில், இப்பிரச்சினையை ஆரம்பத்திலிருந்து உன்னிப்பாகக் கவனித்துவருபவரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ‘மக்கள் கண்காணிப்பகம்’ நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேனிடம் பேசினேன்.

முகிலன் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?

முதலில் அவரைப் போராளி என்று சொல்வதைவிட மனித உரிமைக் காப்பாளர் என்றே சொல்ல வேண்டும். ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட பதம் அது. மனித உரிமைக் காப்பாளர்களின் உரிமைகள், அரசின் கடமைகள் என்று ஐநா சபையின் பிரகடனமே இருக்கிறது. இந்திய அரசு இதை ஏற்றுக்கொண்டிருந்தாலும் அதற்கு முழுமையான அங்கீகாரம் கொடுக்கவில்லை. பாவம், தமிழக அரசுக்கு இந்தப் பதமே தெரியாது. தெரிந்திருந்தால் அவர்களை இப்படிக் குற்றவாளிகளாக நடத்த மாட்டார்கள், பொய் வழக்குகளைப் போட மாட்டார்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடும் ஜெயராமனைக் கஞ்சா கடத்தல்காரனைப் போல நடத்துவதும், முகிலனைப் பாலியல் குற்றவாளியாகச் சித்தரிப்பதும் தவறு. இந்த மாதிரியான இழிவான நடவடிக்கைகளை மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மீதல்ல, யார் மீதும் ஏவாதீர்கள்.

சரி, முகிலன் கடத்தப்பட்டார் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பிப்ரவரி 15-ல் வெளியிட்டார் முகிலன். அன்று மாலையே சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் புறப்பட்டவர், வழியிலேயே காணாமல் போய்விட்டார். உடனே உஷாராகி, விசாரணையில் இறங்கினோம். அவரைக் கடத்திவிட்டார்கள் என்று தெரியவந்தது. பிப்ரவரி 18-ல் நான் மலேசியா செல்ல வேண்டிய நெருக்கடியிலும், சென்னைக்கு ஆள் அனுப்பி மறுநாள் சென்னை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டோம். தன்னுடைய பாதுகாப்பில் முகிலன் இத்தனை அஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாது.

முகிலன் மீது பாலியல் புகார் பதிவுசெய்யப்படுவதற்கு முன்பே, அந்த விவகாரம் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

தகவல் தெரிந்ததும் இது பற்றி நானும் விசாரிக்கத் தொடங்கினேன். மதுரைக்கு அவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு வரும்போது எங்கே தங்குவார்கள் என்றெல்லாம் விசாரித்தேன். இருவரும் தனித்தனியேதான் வருவார்கள் என்றும், இருவரும் வெவ்வேறு தோழர்கள் வீட்டில்தான் தங்குவார்கள் என்றும் சொன்னார்கள். பிப்ரவரி மாதம் 18 முதல் மார்ச் 30 வரை இரு முறை அந்தப் பெண்ணைச் சந்தித்தோம். முகிலனைப் பற்றி ஊடகங்களிலும், ஃபேஸ்புக்கிலும் அவர் புகார் சொல்ல ஆரம்பித்திருந்த நேரம் என்பதால், அதைப் பற்றி வெளிப்படையாகவே கேட்டோம். “அண்ணே, நாங்களும் முகிலனைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. என்னை உருவாக்கியவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்றுதான் நானும் கவலைப்படுகிறேன். முதலில், என்னுடைய பெற்றோர்கள்தான் இதைச் செய்திருப்பார்களோ என்றுகூடக் கருதினேன்” என்று எங்களிடம் சொன்னார். திடீரென்று மார்ச் 31-ல், அவரே போலீஸில் புகார் கொடுத்ததாகச் சொன்னார்கள். ஆறு வாரங்கள் பேசாத அந்தப் பெண், எப்படித் திடீரென புகார் செய்தார் என்ற சந்தேகம் எழுந்தது. அந்தப் புகாருக்கு போலீஸார் கொடுத்த அதீத முக்கியத்துவம் அந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.

முகிலன் விவகாரத்தில் கவிஞர் தாமரை தெரிவித்த கருத்தையும், அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களையும் பார்த்தீர்களா?

தாமரைக்கும் தியாகுவுக்கும் என்ன உறவு என்பது பற்றிப் பேச அவர்கள் இருவருக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதேதான் முகிலனுக்கும். இப்படித்தான் எல்லோரும் என்று பொதுமைப்படுத்தாதீர்கள். இந்த விஷயத்தில் உண்மை தெரியாமல் முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பவில்லை. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பெண்கள் சார்ந்த விஷயங்களில் நேர்மையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், எல்லோருமே மனிதர்கள்தான். யாருமே ஒன்றிரண்டு தவறுகளை செய்திருக்கலாம். அரசு இதைப் பயன்படுத்திக்கொண்டு, பொது விஷயங்களுக்காகப் பேசுபவர்களைப் போக்கிரிகளாக, அசிங்கமான நபர்களாகச் சித்தரிப்பதற்கும், தெருவில் இறங்கிப் போராடுவதே தவறானது என்ற கருத்தைப் பரப்புவதற்கும் எந்த உரிமையும் கிடையாது.

முகிலன் காணாமல்போன செய்தியும், கிடைத்துவிட்ட செய்தியும் முதலில் உங்களுக்கே கிடைக்கிறது. இது எப்படி என்று சிலர் சந்தேகம் கிளப்புகிறார்களே?

திருப்பதியில் முகிலன் இருக்கும் தகவல், ராஜமுந்திரிக்குப் போய்க்கொண்டிருந்த சண்முகம் மூலம் சனிக்கிழமை இரவு 7.45 மணிக்கு எனக்குக் கிடைத்தது. தகவல் வந்தவுடனேயே நான் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆந்திர பத்திரிகையாளர்களிடம் போனிலும், வாட்ஸ்அப்பிலும் எங்கள் அலுவலகத்தினர் தொடர்புகொண்டனர். தகவலை உறுதிசெய்துவிட்டு இரவு 9 மணிக்கு, ‘முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருக்கிறார்’ என்று ட்வீட் செய்தேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் செய்தி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் வந்தது. முதலில் அவர் ஆந்திர போலீஸ் கஸ்டடியில் இருப்பதாகத்தான் நினைத்தோம். ரயில்வே போலீஸ் என்றதும் சந்தேகம் வந்தது. இவ்வளவு நாளாக யார் கண்ணிலும் படாத முகிலன், திடீரென எப்படி திருப்பதி ரயில் நிலையம் வந்தார் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஆனால், உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்று போலீஸ் தரப்பில் மும்முரம் காட்டுகிறார்கள்.

முகிலன் பேச மறுப்பதாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். பிறகெப்படி உண்மையை வெளிக்கொண்டு வருவது?

தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காவல் துறையினர் கொடுமைப்படுத்தியதாக நீதிமன்றம் செல்லும் வழியில் பத்திரிகையாளர்களிடம் முகிலன் சொல்லியிருக்கிறார். முதலில் அவருக்குச் சிகிச்சையளித்து, அவரது மனநிலையைச் சகஜ நிலைக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், அவசர அவசரமாகப் பாலியல் வழக்கில் கைதுசெய்து, சிறையில் அடைத்துவிட்டார்கள். சட்டப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். தனக்கு என்ன நடந்தது என்பதை அவர் நிச்சயம் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் சொல்லியிருப்பார். முகிலனையே குற்றவாளியாக்கிவிட்ட நிலையில், உண்மை எப்படி வெளிவரும்? இந்தப் பிரச்சினையில் இதுதான் சரி, இது தவறு என்று எந்த முன்முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்கிறோம். அதற்குள்ளாக வீண் பழியையும் அவதூறையும் பரப்பாதீர்கள் என்கிறோம். அவ்வளவுதான்!

ஒருவேளை முகிலன் மீதான பாலியல் வழக்கு புனையப்பட்டது என்றால், அப்படி ஒன்று புனையப்பட வேண்டிய தேவை என்ன?

பியூஷ் மானஸ் தொடங்கி முகிலன் வரையில் பல செயல்பாட்டாளர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள் என்றால், அதற்கு மக்கள் மத்தியில் அவர்கள் மேல் இருக்கிற மரியாதையும், அன்பும்தான் காரணம். இல்லையென்றால், இந்த அரசு இயந்திரமும் பெருநிறுவனக் கொடுங்கரங்களும் அவர்களை என்றோ கொன்று செரித்திருக்கும். அந்த அன்புக்கு அடிப்படையான அவர்கள் மீதான நல்லெண்ணத்தை அழித்தொழிப்பதற்காகத்தான் இதுபோன்ற இழிவான வழக்குகளில் அவர்களைச் சிக்க வைக்கிறார்கள்; தவறாகச் சித்தரிக்கிறார்கள். தமிழக மக்களை நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். முகிலன் பாலியல்ரீதியாகத் தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையைச் சட்டமும், அவரது மனைவியும் அவருக்குத் தரட்டும்; இன்றைக்கு அவர் ஆளாகியிருக்கும் சூழலுக்கு அவர் எடுத்துக்கொண்ட பொதுப் பிரச்சினைகள்தான் காரணம். ஆகையால், இந்தப் பிரச்சினையில் இருந்து அவர் மீளும் வரையில் நமக்காகப் போராடிய அவரை நம் மக்கள் கைவிட்டுவிடக் கூடாது.

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close