[X] Close

டிங்குவிடம் கேளுங்கள்: மண்புழு தூங்குமா?


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 11:33 am
  • அ+ அ-

தைராய்டு பிரச்சினையால் மறதி ஏற்படும் என்கிறார் மருத்துவர். பாடங்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வேன் என்று  பயமாக இருக்கிறது, டிங்கு?

– வெ. ரூபாவதி, விருதுநகர்.

மருத்துவர் சொன்னதை முழுமையாகக் கேட்டீர்களா, ரூபாவதி? மருந்து எடுத்துக்கொள்ளாவிட்டால் நாளடைவில் மறதி வரலாம் என்று சொல்லி இருப்பார். நீங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையைத் தினமும் எடுத்துக்கொள்ளுங்கள். மறதி உட்பட எந்தப் பிரச்சினையும் வராது. எனக்குக்கூட நீண்ட காலமாகத் தைராய்டு பிரச்சினை இருக்கிறது.

தினமும் மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய ஞாபக சக்தியை, யானையின் ஞாபக சக்திக்கு ஒப்பிட்டுப் பேசுவார்கள், நண்பர்கள். அதனால் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ’ஞாபக மறதி வந்துவிடுமோ’ என்ற எண்ணத்தை மட்டும் மறந்துவிடுங்கள். பாடங்களைப் படிப்பதிலும் தேர்வுகளை எழுதுவதிலும் பிரச்சினை வராது.

10.jpg 

தீக்குச்சியைப் பற்ற வைக்கும்போது ஏன் தீ மேல்நோக்கி எரிகிறது, டிங்கு?

– வெ. முகுந்த், 9-ம் வகுப்பு,

சமரிடன் பப்ளிக் பள்ளி, சீர்காழி.

தீக்குச்சியிலிருந்து வெளிவரும் வெப்பக் காற்று, வெளியில் உள்ள குளிர்ந்த காற்றைவிட எடை குறைவாக இருக்கிறது. அதனால் தீ மேல்நோக்கி எரிகிறது. இந்தத் தத்துவத்தில்தான் மனிதர்கள் செல்லும் வெப்பக்காற்று பலூன் மேல்நோக்கிப் பறக்கிறது, முகுந்த்.

புராணங்கள், வரலாறுகள் உண்மையா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம், டிங்கு?

- ஜெ. கோபிகா, 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சற்குணேஸ்வரபுரம், திருவாரூர்.

சுவாரசியமான கேள்வி. எந்த நாட்டுப் புராணமாக இருந்தாலும் அது மதத்துடன் தொடர்புடையது. இதில் இயற்கைக்கு மீறிய, மாயாஜாலங்கள் இருக்கும். கடவுள், அரக்கர், சாத்தான் போன்ற கதாபாத்திரங்களை வைத்து கதைகளாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்தப் புராணக்கதைகளின் மூலம் நன்மை, தீமை, நியாயம், அநியாயம், புண்ணியம், பாவம் போன்ற கருத்துகள் விளக்கப்பட்டிருக்கின்றன. சமூகமும் மக்களும் நல்லது நினைத்தால் என்ன மாதிரியான பயனைப் பெறுவார்கள், தீயதை நினைத்தால் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திப்பார்கள் என்பதை உணர வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

வெகு காலத்துக்கு முன்பே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புராணக்கதைகளில் நல்லது செய்பவர்களுக்கு நன்மையும் தீமை செய்பவர்களுக்குத் தீமையும் விளையும் போன்ற வாழ்வியலுக்கான விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். புராணக்கதைகளில் வரும் அபாரமான கற்பனைத்திறனைக் கண்டு வியக்கலாம். ஆனால், புராணக்கதைகளுக்கு வரலாற்று, அறிவியல் ரீதியான விளக்கங்கள் கிடையாது.

வரலாறு என்றால் நிஜத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். அது உண்மையான விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும். கடந்து போன காலத்தை, கிடைக்கும் ஆதாரங்களை வைத்துக்கொண்டு உண்மையைத் தேடி எடுத்துரைப்பதுதான் வரலாறு. வரலாற்றைக் கற்பனையில் எழுதிவிட முடியாது.

ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து, தகவல்களைத் திரட்டி, அன்று என்ன நடந்திருக்கும் என்று வரலாறாக எழுதுகிறார்கள். இப்படித்தான் ஒரு நாட்டின் வரலாறு, ஆட்சியாளர்களின் வரலாறு, அன்றைய மக்களின் வரலாறு எல்லாம் நமக்குத் தெரிய வருகின்றன.

’கடந்த காலத்தைப் பற்றி நல்ல தெளிவைக் கொடுப்பதுதான் வரலாறு. அது அறிவுப்பூர்வமானது. கதைகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ அதில் இடமில்லை’ என்கிறார் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்.

‘கதைகளை, கதைகளாகச் சொல்லிக் கொடுங்கள். புராணங்களை, புராணங்களாகச் சொல்லிக் கொடுங்கள். ஒருபோதும் அவற்றை உண்மை என்று சொல்லிக் கொடுக்காதீர்கள்’ என்கிறார் கிரேக்கத் தத்துவஞானியும் கணித மேதையுமான ஹைபேஷா.

புராணங்களுக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசம், கற்பனைக்கும் நிஜத்துக்குமான வித்தியாசம்தான்  கோபிகா.

இறந்த பிறகு தாடியும் நகமும் வளரும் என்று என் அப்பா சொல்கிறார். அது உண்மையா, டிங்கு?

- வீ. அரவிந்த் ஸ்ரீநிவாஸ்,

டாக்டர் ஜீ.எஸ். கல்யாணசுந்தரம் நினைவுப் பள்ளி, தாராசுரம், கும்பகோணம்.

எத்தனையோ கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. மரணம் நிகழ்ந்த உடனே உடலிலுள்ள செல்கள் இறக்க ஆரம்பித்துவிடும். படிப்படியாக அனைத்தும் செயல் இழந்துவிடும். உடல் அழுகும். நீர்ச்சத்தை இழக்கும். சதைப் பகுதிகள் மறைந்துபோகும். இறுதியில் எலும்பு மட்டும்தான் மிஞ்சும். இந்த இறந்த மனிதனின் உடலில் இருந்து எப்படி நகமும் தாடியும் முளைக்கும், அரவிந்த் ஸ்ரீநிவாஸ்?

மண்புழு தூங்குமா, டிங்கு?

– ராகவ், 2-ம் வகுப்பு, பாத்திமா கான்வெண்ட், ராமபுரம், கன்னியாகுமரி.

நம்மைப்போல் மண்புழு கண்களை மூடித் தூங்குமா என்றால் தூங்காது. மண்புழுக்குக் கண், மூக்கு, காது போன்ற உறுப்புகள் இல்லை. ஆனால், வெளிச்சம், இருள் போன்றவற்றை உணர முடியும். வாசனையை அறிய முடியும்.

அதிர்வுகளை உணர முடியும். அதேநேரம் மூளை அதிகம் சிந்திக்காமல், உடல் அசைவு இன்றி ஓய்வு எடுப்பதைத் தூக்கம் என்று கொண்டால், மண்புழு தூங்கும், ராகவ். ஓய்வின்போது உடலைச் சுருட்டிக்கொள்ளும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close