[X] Close

360: 9 மாதங்களில் 2,300 கூட்டங்கள்


360-9-2-300

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 10:24 am
  • அ+ அ-

9 மாதங்களில் 2,300 கூட்டங்கள்

1949 செப்டம்பரில் திமுகவைத் தொடங்கிய அண்ணா, அடுத்த 9 மாதங்களில் அதாவது, 1950 மே மாதத்துக்குள் 2,300-க்கும் அதிகமான கூட்டங்களில் பேசியிருக்கிறார். 2 வருடத்துக்குள் 3,500 கூட்டம் நடந்துள்ளது. சராசரியாக, மாதம் 145 கூட்டங்கள். ஒரே நாளில் 27 கூட்டங்களில்கூடப் பேசியிருக்கிறார். மாலை 5 மணிக்கு ஓர் ஊரில், 6.30 மணிக்கு இன்னொரு ஊரில், 8 மணிக்கு மற்றொரு ஊரில், 9.30 மணிக்கு வேறு ஊரில் என்று விடிய விடிய மேடை ஏறினார் அண்ணா. ஆனால், ஒரு ஊரில் பேசிய விஷயத்தை இன்னொரு ஊரில் பேசியதில்லை. பேசியதையே திரும்பத் திரும்பப் பேசும் வழக்கம் அண்ணாவுக்குக் கிடையாது. கோவா விடுதலைப் போராட்டம் பற்றியும் பேசுவார், நெப்போலியன் போனபார்ட் பற்றியும் பேசுவார், கோசிமின் பற்றியும் பேசுவார். தம்பிகளுக்கு அரசியல் ஞானம் வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருந்தவர் அண்ணா. தன்னைப் போலவே இரண்டாம் கட்டத் தலைவர்கள் படையையும் தயார்படுத்தி, நாடு முழுக்கவும் கூட்டங்களுக்கு அனுப்பியவர் அண்ணா.

அண்ணா அமைத்த சீரணி

முதல்வர் அண்ணா 16.8.1967-ல் சீரணி என்ற தன்னார்வக் குழுவைத் தொடங்கிவைத்தார். திமுகவையே தீவிரவாத இயக்கம் என்று சொன்னவர்கள், சீரணியும் ஒரு படையோ என்று சந்தேகம் கிளப்பினர். அதற்குப் பதிலளித்த அண்ணா, “சீரணியின் நோக்கம் உழவும் தொழிலும் வளர உறுதுணையாக நிற்றல், கல்வியறிவும் பொது அறிவும் வளர வகைசெய்தல், துப்புரவுப் பணி மேற்கொள்ளல், தீண்டாமைக் கொடுமைகளை அகற்றுதல், சமூகக்கேடுகளை அன்புவழியில் களைதல், திக்கற்றவர்களுக்குத் துணை புரிதல்! வாலிபர்கள், மாணவர்கள், பெண்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், எந்தக் கட்சியையும் சாராதவர்கள், பல்வேறு வகுப்பினர், வகுப்புகளே வேண்டாம் என்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் இதில் சேரலாம்” என்றார். ஊதியம், பயன், பணி உயர்வு கோராத ஒருவிதப் படை ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை. அப்படியான படையே இது” என்றவர், காந்தியைப் போலத் தூய்மைப் பணியையே போதித்தார். அண்ணாவின் மனைவி உட்பட திமுகவினர் குடும்பத்தோடு இதில் சேர்ந்தார்கள். இந்தத் தொண்டர்கள் கட்டியதுதான் சென்னை கடற்கரையில் இருந்த சீரணி அரங்கம்.

அரசியல் வேறு, நிர்வாகம் வேறு!

அரசியலையும் நிர்வாகத்தையும் பிரித்துப்பார்த்தவர் அண்ணா. என்எல்சியிடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமே அப்போது மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருந்தது. உற்பத்திச் செலவு அதிகரித்தபோது, மின்சாரத்துக்குக் கூடுதல் விலை தருமாறு தமிழ்நாடு அரசிடம் கேட்டார்கள். இதுபற்றிய விவாதத்தின்போது, “பல பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறபோது, என்எல்சி மட்டும் லாபத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கலாமா? நம்மிடம் மட்டும் இப்படிக் கேட்கலாமா?” என்று முதல்வர் அண்ணாவிடம் கேட்டார் ஒரு அதிகாரி. மறுத்தார் அண்ணா. “ஒரு அரசியல்வாதி வேண்டுமானால் இப்படியெல்லாம் பொதுக் கூட்டத்தில் பேசலாம். ஆனால், ஒரு முதல்வராக இப்படியொரு முடிவை எடுக்கக் கூடாது. ஒரு மாநிலத்தில் செய்திருக்கும் முதலீட்டிலிருந்து கணிசமான வருமானம் வர வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பது நியாயமானதுதான். அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்” என்றார் அண்ணா. அதன்படி, விலை உயர்வு தர மின்வாரியம் ஒப்புக்கொண்டதால், என்எல்சியின் செலவு ஈடுகட்டப்பட்டது. அதன் பலனாக நெய்வேலியில் இரண்டாவது சுரங்கம் அமைக்க மத்திய அரசு முன்வந்தது. மின்உற்பத்தியும் அதிகரித்தது. இதற்கெல்லாம் அண்ணா எடுத்த முடிவே காரணம் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டார், அண்ணா ஆட்சியின்போது நிதித் துறைச் செயலராக இருந்த ஜி.ராமச்சந்திரன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close