[X] Close

ஒரே ரேஷன்: எதற்கான முன்னேற்பாடு?


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 10:20 am
  • அ+ அ-

-செல்வ புவியரசன்

நாடு முழுவதற்கும் ஒரே குடும்ப அட்டை முறையைக் கொண்டுவர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஓராண்டு கெடு விதித்துள்ளது. இம்முறை முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகள் நாட்டில் எந்த மூலையிலும் மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும், இரண்டு குடும்ப அட்டை முறைக்கு முடிவுகட்ட முடியும் என்றும் உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே 10 மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கும் பாஸ்வான், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் பொது விநியோக மையங்களில் விற்பனை அலகு இயந்திரங்களை நிறுவினால், இந்நடைமுறைக்கு எளிதில் மாற முடியும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

நூறு நாட்களுக்குள் தொடங்கப்பட வேண்டிய திட்டங்களில் இதையும் ஒன்றாக வைத்திருக்கிறது மத்திய அரசு. அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. இதுகுறித்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக உணவுத் துறை அமைச்சர் வழக்கம்போலவே தமிழகத்தில் பொது விநியோக முறை தொடரும் என்றும், ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் குறித்து ஆராயப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களால், தமிழகத்துக்கு எந்தப் பாதகமும் வராது என்று இரண்டாண்டுகளுக்கு முன்பும் இதேமாதிரி தமிழக உணவுத் துறை அமைச்சர் உறுதியளித்தார். 2016 நவம்பர் மாதத்திலேயே உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. மத்திய அரசின் நடைமுறைக்கு மாறுவதற்கு தமிழகத்துக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற நவம்பர் மாதத்தில் அந்த அவகாசம் முடிந்துவிடும். பிறகு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நடைமுறைகளையும் எதிர்வரும் காலங்களில் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களையும் தமிழகம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

வடக்கு தெற்கு பிரச்சினையல்ல..

வட மாநிலங்களிலிருந்து வேலை பார்ப்பதற்காக தமிழகம் வருபவர்களுக்கு இங்கேயே குறைந்த விலையில் உணவுதானியங்கள் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடு இது என்றும் சில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். நம் மாநிலம் ஒதுக்குகிற நிதி ஒதுக்கீட்டில், மற்ற மாநிலத்தவர்கள் பங்கு போட்டுக்கொள்கிற பிரச்சினையல்ல இது. மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதே இத்திட்டம் எழுப்பும் முக்கியமான கேள்வி.

மத்திய அரசு கொண்டுவரும் ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பயனாளிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறது. அதன் பிறகு, அவர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக, தனியாக வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்பது இதன் பின்னுள்ள அச்சம். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியம் வழங்கும் திட்டமும், பரிசோதனை முயற்சியாகச் சில மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேதியுரங்களுக்கான மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டமும் ஏற்கெனவே இந்த வகையிலேயே அமலாக்கப்பட்டிருக்கின்றன. 2017-18ம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின்படி 84 அரசுத் திட்டங்கள், நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் முறைக்கு மாறியிருக்கின்றன. ஆகையால் சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கியவர்களுக்கு அரசு வழங்கும் மானியங்களைப் படிப்படியாகக் குறைத்து, கடைசியில் அனைத்தையும் நிறுத்திவிடுவதுதான் மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் என்றும் எழுந்திருக்கும் அச்சத்தைப் புறந்தள்ள முடியாது.

பயனாளிகளின் எண்ணிக்கை குறையும்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரி, தொழில் வரி செலுத்துபவர்களும் ஐந்து ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கொண்ட குடும்பங்களும் அரசுப் பணியாளர்களும் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெற முடியாது. மேலோட்டமாகப் பார்த்தால், இது சரியான கணக்கீடாகத் தோன்றலாம். ஆனால், வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், ஐந்து ஏக்கர் விவசாயியும் வறுமைக்கு ஆளாக வேண்டியிருக்கும்; கஜா புயல் பாதிப்பில் காவிரிப் படுகையில் இன்று அதை நேரடியாகப் பார்க்கிறோம். அரசு ஊழியர்கள் ஓய்வூதிய வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஓய்வுக் காலத்தில் அவர்களும் வறுமையைச் சந்திக்க நேரிடலாம். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்போது வருமான வரி கட்டுபவர்கள் அந்த வேலையை இழந்து நிற்கும்போது, வறுமையால் சூழப்படலாம்.

வறுமைக்கோட்டுக்கு மேல் இருக்கும் குடும்பங்களும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை வழங்குவதற்கும் முக்கியமான ஒரு காரணமிருக்கிறது. அதிகப்படியான உணவு தானிய இருப்பு தேங்கிவிடாமல் இருப்பதற்காக அனுமதிக்கப்பட்ட நடைமுறை அது. எனவே, கொள்முதல் மற்றும் விநியோக முறைகளை ஒழுங்குபடுத்தாமல் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களை நிறுத்துவது உணவு தானிய இருப்பில் சிக்கலை ஏற்படுத்தவும் கூடும்.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டுவரும் உணவு தானியங்களில் பாதியளவே அதை எதிர்நோக்கியிருக்கும் உண்மையான பயனாளிகளுக்குச் சென்று சேர்வதாகவும், பெரும் பகுதி விரயமாவதாகவும் அரசு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு மற்றும் இந்திய உணவுக் கழக அறிக்கைகளை ஒப்புநோக்கி ஆய்வுசெய்திருக்கும் பொருளாதார நிபுணர் ழீன் த்ரெஸெ, தேசிய மாதிரிக் கணக்கெடுப்பைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் இந்திய மனிதவள மேம்பாட்டுக் கணக்கெடுப்பின்படி விரயங்களின் அளவு குறைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பொது விநியோக முறையின் விரயங்கள் மிகவும் குறைவு என்றும் ஜார்க்கண்ட், உத்தர பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார் ழீன் த்ரெஸெ. 2011-12ல் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட விரயம் 57.6% என்றால், தமிழ்நாட்டில் வெறும் 11.9% மட்டுமே. ஸ்மார்ட் கார்டு மற்றும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உரிய பயனாளிகளைச் சென்று சேர்வதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கக்கூடும். ஆக, இது அந்தந்த மாநிலங்களின் நிர்வாகத்தில் உள்ள கோளாறுகள்தானே தவிர, வேறல்ல.

பொது விநியோகத் திட்டத்தின் பயன்கள் உரிய பயனாளிகளைச் சென்று சேர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில், உலகத்திலேயே சத்துணவுக் குறைபாட்டால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதையும் மறந்துவிடக் கூடாது. தினந்தோறும் 19 கோடி பேர் பசித்த வயிற்றோடுதான் படுக்கைக்குச் செல்கிறார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48% பேர் சத்துணவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டுவரும் உணவு தானியங்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களின் உணவுத் தேவையில் பாதியைக்கூட நிறைவுசெய்வதில்லை. அரிசியையோ கோதுமையையோ விலை கொடுத்து வாங்கும் ஏழைகள், அதற்கான மானியம் வங்கிக்கணக்கில் வந்துசேர்கிற வரைக்கும் காத்திருப்பதுதான் உணவுப் பாதுகாப்பா?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close