[X] Close

அந்த நாள் 40: நாயக்கர் புகழை நிலைநாட்டியவர்


40

  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 11:34 am
  • அ+ அ-

-ஆதி வள்ளியப்பன்

“மதுரை நாயக்க வம்சத்தை விஸ்வநாத நாயக்கர் தோற்று வித்திருந்தாலும், திருமலை நாயக்கர்தான் நாயக்கர் ஆட்சியோட புகழ்பெற்ற அரசர், செழியன்"

“முறுக்கிய மீசை, கூரிய விழிகள்னு மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல கம்பீரமா நிக்குற திருமலை நாயக்கர் ஆளுயரச் சிலையை நானும் பார்த்திருக்கேன், குழலி”

“விஸ்வநாத நாயக்கருக்கு அடுத்தபடியா 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிஞ்ச நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் மட்டும்தான்.”

“ஆனா, அது மட்டும்தான் அவரோட பெருமைக்குக் காரணமா என்ன?”

“இல்ல. திருமலை நாயக்கரின் அண்ணன் முதலாம் முத்து வீரப்பன் காலம்வரை மதுரை நாயக்கர் ஆட்சி விஜயநகரப் பேரரசுக்குக் கட்டுப் பட்டதாவே இருந்துச்சு. திருமலை நாயக்கர்தான் விஜய நகரத்தோட போரிட்டு, முழு உரிமை பெற்ற முதல் அரசரா மாறினார். அதுவே அவர் புகழ்பெற்றதற்கு முதல் காரணம்”

“முடியாட்சி முறைப்படி முதலாம் முத்துவீரப்ப நாயக்கரின் மகன்தானே, அவருக்கு அடுத்தபடியா ஆட்சிக்கு வந்திருக்கணும்?”

“ஆமா. ஆனா முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் சந்ததி இல்லாமலேயே காலமாகிட்டார். அதனால, அவரோட தம்பி திருமலை 39-வது வயசுல ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அவரோட காலத்துலதான் நாயக்கர்களின் தலைநகர் மதுரைக்குத் திரும்பவும் மாறுச்சு”

“அப்படியா, அப்ப அதுக்கு முன்னாடி எங்க இருந்துச்சு?”

“மதுரைல காவல் நிறைந்த அரண்கள் இல்லை; சோழ நாட்டில் பாய்ந்த வளமான காவிரியைப் போல வைகைல நீர் பாய்ஞ்சு ஓடலை; அந்தக் காலத்துல மதுரையில் காய்ச்சலும் பரவிக்கிட்டிருந்துச்சு. அதனால முதலாம் முத்துவீரப்பன் காலத்துல தலைநகர் திருச்சிக்கு மாற்றப்பட்டுச்சு” “சரி”

14.jpg

“அண்ணன் வழியில் திருமலை நாயக்கரும் திருச்சியைத்தான் தலைநகராக வெச்சிருந்தார். ஆனா, தஞ்சை நாயக்கர்களோட ஏற்பட்ட தொடர் மோதல்; திருச்சில இருந்தபடி தொலைவில் இருந்த மதுரையை ஆள்றது சிரமமாக இருந்தது ஆகியவற்றின் காரணமா ஆறு வருசத்துக்கு அப்புறம் தலைநகரைப் பழையபடி மதுரைக்கே மாத்திட்டார்.”

“அதுக்கப்புறம் தான் மதுரை செழிக்க ஆரம்பிச்சிச்சா?”

“தன் ஆட்சிப் பகுதியைக் காப்பாற்ற பாதுகாப்பு மிகுந்த பல கோட்டைகளை திருமலை நாயக்கர் கட்டியது குறித்து பாதிரியார் டெய்லர் எழுதிய குறிப்புகள் கூறுகின்றன. 20,000 பேர் கொண்ட படையை உருவாக்கினார். ஐந்து பெரும் போர்களையும் நடத்தினார்.”

“அத்தனை போர்களிலும் ஜெயித்தாரா?”

“ஆமா. மதுரையின் செழிப்பாலும் முந்தைய பகையாலும் மைசூர் மன்னர் படையெடுத்தார்; திருவாங்கூர் மன்னர் கேரள வர்மா திருமலைக்குக் கப்பத்தைக் கட்டாததால உருவான போர்; விஜயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு முழு உரிமை பெற நடத்திய போர்; ராமநாதபுரத்தில் அரசுரிமைக் கலகம் ஏற்பட்ட காலத்தில் சேதுபதி அரசர்களுடன் போர்; மைசூர் படைகள் மதுரையைத் தாக்கி மக்களின் மூக்கை அறுத்து அவமானப்படுத்தியதால், அதற்குப் பழிக்குப் பழி வாங்க மைசூர் மூக்கறுப்புப் போர் – இதெல்லாம் திருமலை நாயக்கர் சந்தித்த போர்கள். இந்தப் போர்களில் அவருக்குத் துணை நின்றவர் புகழ்பெற்ற படைத்தலைவர் ராமப்பய்யன். திருமலை பெற்ற பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்த இவரைப் பற்றி ‘ராமப்பய்யன் அம்மானை’ என்ற நூல் பாராட்டியிருக்கு. சேது நாட்டை ஆண்டு வந்த அரசர் ரகுநாதரும், திருமலை மன்னருக்குத் துணையாக இருந்தார்.”

15.jpg 

“இத்தனை போர்கள்ல ஜெயிச்சிருக்கார்னா, திருமலை நாயக்கரோட ஆட்சிப் பகுதி எவ்வளோ பெரிசா இருந்துச்சு?”

“மதுரை பெருநாட்டோட திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவனந்தபுரம், சேலம், கோவைனு அவரோட ஆட்சிப் பகுதி பரந்து விரிஞ்சு இருந்துச்சு. அவரோட அரசு வருவாய் அந்தக் காலத்திலேயே ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கும் மேல இருந்ததா வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க.”

“ஆச்சரியமாத்தான் இருக்கு, குழலி”

“திருமலை நாயக்கர் போர் புரியுறதுல மட்டும் ஆர்வம் காட்டல. மதுரையைக் கலையழகு மிகுந்ததாவும் தனித்துவம் மிக்கதாவும் மாத்தினார், செழியன். அதைப் பத்தி அடுத்த வாரம் பார்ப்போம்.”

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, பள்ளி வரலாற்றுப்

பாடம்

 

# திருமலை நாயக்கரின் தந்தை முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர்.

# 1587 தைப்பூச நாளில் இரண்டாவது மகனாக திருமலை பிறந்தார்.

# அவருடைய முழுப் பெயர் திருமலை சவுரு நாயினு அய்யிலுகாரு.

# 1659இல் தன் 75-ம் வயதில் மறைந்தார். அதுவரை ஆட்சி புரிந்தார்.

 

கட்டுரையாளர்

தொடர்புக்கு:

valliappan.k@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close