[X] Close

மனசு போல வாழ்க்கை 05: பொறுப்புத் துறப்பு உதவாது!


05

  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 11:03 am
  • அ+ அ-

-டாக்டர். ஆர்.கார்த்திகேயன்

“எந்த இடத்தில வேலை செஞ்சாலும் மேலதிகாரியோட மோதல் வந்துடுது. எனக்கு மட்டும் நல்ல பாஸ் வாய்ப்பதே இல்லை” என்று சொன்னவரிடம் “உங்களுடைய அப்பாவோட உங்கள் உறவு எப்படி?” என்று கேட்டேன். “சின்ன வயசுல இருந்தே பிரச்சினைதான். அதுவும் இப்போ

ஒரு கேஸ் நடப்பதால பேச்சுவார்த்தைகூட இல்லை.”

“உங்கள் அப்பாவுடன் உறவு சரியாகும்வரை உங்கள் மேலதிகாரி யாராக இருந்தாலும் அவருடன் பிணக்கு இருக்கும்” என்றேன். மேலதிகாரி என்பது நம் பண்பாட்டில் தந்தை ஸ்தானம். ஃப்ராய்ட் கூற்றின்படி அப்பாதான் அதிகார மையம்.

நம் ஆதார பயங்களைக் கையாளக் கற்றுக்கொள்வது இங்கிருந்துதான். “அது எப்படி, சொல்லிவெச்ச மாதிரி எல்லா பாஸும் பிரச்சினை கொடுக்கிறாங்க?” என்றார் மீண்டும். “எல்லோரிடமும் எனக்குப் பிரச்சினை என்றால், பிரச்சினை ‘நான்’ என்பது புரியவில்லையா?”

‘சைக்கோ அனாலிஸிஸ்’ அளவுகூடப் போக வேண்டாம். கொஞ்சம் யோசித்தாலே புரியும். எல்லா வெளியுலகப் பிரச்சினைகளுக்கும் காரணம் உள்ளுலகம்தான். அதனால்தான் சிலர் எந்த வியாபாரத்தில் கை வைத்தாலும் விளங்குவதில்லை. சிலர் எத்தனை கல்யாணம் செய்தாலும் செட்டில் ஆவதில்லை. சிலர் யாரிடமும் வேலையில் நிலைக்க முடிவதில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணத்தை வெளியில் தேடுவது வீண்!

மனத்தின் விளையாட்டு!

வெளியில் தெரிகிற நிகழ்வுகள் அனைத்தும் நம் உள் மன அமைப்பால் தேடிப் பெற்றுக்கொள்பவையே. நம் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களைக் கூர்ந்து நோக்கினால் அடிப்படையாக ஒரு ‘pattern’ தெரியும். அதன் ஆரம்பமும் முடிவும் நம்மால் முடிவு செய்யப்படுபவை. ஆனால், யாரோ வெளியிலிருந்து செய்யவைப்பது போல் நம் மனம் வித்தை காட்டும்.

இதன் ஆரம்பம் ஒரு உணர்வு நிலை. அது தரும் எண்ணம். பின் எண்ணம் தூண்டும் செய்கைகள். பின் சங்கிலியாய்த் தொடரும் வெளியுலகச் சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு கருத்தை உட்கொள்ளும் நம் உள்மனம். இதை ஒரு உதாரணமாகப் பார்க்கலாம். ஏதோ ஒரு துக்கமான மனநிலை. உடனே அது ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கிறது.

அது சங்கிலியாய் எண்ணங்களைத் தொடுக்கிறது: “நம்மை யார் மதிக்கிறார்கள், என்ன வாழ்க்கை இது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” இதன் தொடர்ச்சியாக வீட்டுக்குச் சென்றால் எல்லோரும் குதூகலமாக ஒரு விசேஷ வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே மனம் அன்னியப்பட்டு, “நான் அவசியம் வரணுமா?” என்று மனைவியிடம் கேட்க, “இந்த மூஞ்சிய வச்சிட்டு வர்றதுன்னா வரவே வேண்டாம் ப்ளீஸ்” என்று கோபமாகப் பதில் வருகிறது. உடனே மனம், “பாரு… என்னை விட்டுட்டு தனியா போறதுன்னா எத்தனை சந்தோஷம்?” என்று ரோஷப்பட்டு சொல்லாமல் வெளியே போய்த் தனியாகக் குடிக்க வைக்கும்.

“ஏன் குடிக்கிறீர்கள்?” என்று கேட்டால், “என் பொண்டாட்டி அவங்க சொந்தகார வீட்டு விசேஷத்துக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டா பா… அந்தத் துக்கம்தான் தாங்க முடியலை!” எனக் குறை கூறும். இதுதான் மனத்தின் விளையாட்டு.

பலவீனமான தற்காப்பு எதற்கு?

எந்த மனநிலையில் இருக்கிறீர்களோ, அதற்கேற்ற சம்பவங்கள் உங்களைக் கவரும். இதுதான் உண்மை. “உலகம் என்னை இப்படி மாற்றிவிட்டது” என்று யார் சொன்னாலும் அது மோசடி. உலகம் என்பது ஒரு பெரு நகரக் கடைத் தெரு போல.

அங்கு எது கண்ணில்படுகிறது என்பது அவரவர் தேவையைப் பொறுத்தது. பயணிகளுக்குப் பேருந்து எண்கள் கண்ணில்படும். வாலிபர்களுக்குப் பெண்கள் கண்ணில்படுவர், குழந்தைகளுக்கு பலூன்கள். சிகரெட் தேடுபவருக்கு அருகிலிருக்கும் பெட்டிக் கடை. பக்தனுக்குத் தூரத்துக் கோயில் மணி.

நாம் தேர்ந்தெடுப்பவை அனைத்தும் இப்படித்தான். புற உலகைச் சாடுவது சுலபமான செயல். ஆனால், அது ஒரு பலவீனமான தற்காப்பு. தன் வாழ்க்கையில் நிகழ்பவற்றுக்குத் தன்னை முழு காரணமாகச் சொல்ல மனம் அஞ்சுகிறது. “வாழ்க்கை அப்படியே ஓடுச்சு!” என்று சொல்வது எளிதாக இருக்கிறது.

“வாழ்க்கையை அப்படியே ஓட்டிட்டேன்!” எனும்போது ஒரு பாரத்தை ஏற்றி வைத்துக்கொள்வதைப் போல உணர்கிறோம். அதனால்தான் சட்டென எல்லாவற்றுக்கும் காரணங்கள் தயாராக வைத்திருக்கிறோம். “சேல்ஸ் ஜாப்... குடிப் பழக்கம் இயல்பு.” “கல்யாணத்துக்கு அப்புறம் வாசிப்பு நிண்ணு போச்சு.”

ஆனால், ஒன்றை மாற்ற வேண்டும் அல்லது சீர்படுத்த வேண்டும் என்றால் இந்தப் பொறுப்புத் துறப்பு உதவாது. என் வாழ்க்கையில் நடப்பவற்றுக்குப் பெரிதும் காரணம் நான்தான் என்று நம்புவதை ‘Internal locus of control’ என்கிறது உளவியல். வெற்றியாளர்கள் பற்றி எல்லா நூல்களிலும் தவறாமல் சொல்லப்படுவது இதுதான். “என் வாழ்க்கையைச் செதுக்கும் சிற்பி நான்” என்ற நம்பிக்கைதான் முதல் சிந்தனை முதலீடு.

கேள்வி: எவ்வளவுதான் நேர்மறையாக யோசிக்க நினைத்தாலும் ரொம்ப எதிர்மறையாகத்தான் மனம் யோசிக்கிறது.  அதேபோல், எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறேனோ அதுவே நடக்கிறதே ஏன்?

பதில்: மனித மனத்துக்கு உயிர் பயம் என்பது எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. பயமும் கோபமும் நம் default mode-ல் இயங்கும். நம்பிக்கை கொள்ளத்தான் முயற்சி தேவை. நம்பிக்கை இழக்க எதுவுமே செய்ய வேண்டாம். அதனால் உங்களுக்கு மட்டும் நேர்வதாகக் கவலைகொள்ள வேண்டாம்!

எது நடக்கக்கூடாது என்பதை நினைக்கும்போது அதுதான் நடக்கும். அந்த பய எண்ணம்தான் வேலை செய்யும்.

 

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும்

மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்

டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

(தொடரும்)

கட்டுரையாளர், மனிதவளப் பயிற்றுநர்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close