[X] Close

தெறிக்கவிடும் ‘தெருக்குறள்’!


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 10:45 am
  • அ+ அ-

-சாதனா

கலகலப்பு, கருத்து, கலாய்ப்பு… என ஏகப்பட்ட விஷயங்களைக் கலந்துகட்டித் தரும் இசை பாணிதான் ராப். இதில் அண்மைக்காலமாகத் தமிழ் இளைஞர்கள் பலர் களம் இறங்கியுள்ளனர். அதிலும் திரையிசை அல்லாமல் தனியிசை வெளியிட்டு அசத்தும் இளம் மன்னர்கள்தாம் அறிவு, ஒஃப்ரோ.

சில மாதங்களுக்கு முன்பு தேர்தலை ஒட்டி, ‘ஆண்டி இண்டியன்’ (Anti-Indian) பாடலை வெளியிட்டு ‘என்னா நானுனக்கு ஆண்டி இண்டியன்னா? என்னா ஓட்டுப்போட்ட பச்சை தமிழன்னா?’ என்ற வரிகளை அடித்துத் துவைத்து இசைக் களத்தில் மட்டுமல்ல; அரசியல் வட்டாரத்திலும் இவர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். தற்போது ‘தெருக்குறள்’ என்ற தலைப்பில் 7 ராப் இசைப் பாடல்கள் கொண்ட ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

அர்த்தமுள்ள கேலி!

சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறேன் என்ற பெயரில் தன்னை மட்டுமே முன்னிறுத்திக்கொள்ளும் போலி மனிதர்களைப் பகடி செய்ய, ‘போர் அடிக்குது போராடலாம் வாங்க தோழா; யார் அடுத்த சூப்பர் ஸ்டார் பாரு தோழா’ என்று ஒலிக்கிறது ‘கள்ள மவுனி’ பாடல்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலி்ன் தனக்காகவும் காஷ்மீரில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆசிஃபாவுக்காகவும் நம்முடன் உரையாடுவதுபோல உருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது, ‘ஸ்னோலின்’ பாடல்.

பெண்கள் நினைத்ததைச் செய்ய அழைப்புவிடுக்கிறது, ‘தமிழச்சி’ பாடல். ‘கள்ள மவுனி’, ‘ஸ்னோலின்’, ‘தமிழச்சி’… என அத்தனையும் சமூக அரசியலைப் போட்டுடைக்கும் ரகம். சமூக நீதியையும் தங்குதடையற்ற ராப் இசைத் திறனையும் இவர்களிடம் கண்ட இயக்குநர் பா.இரஞ்சித் தன்னுடைய ‘கேஸ்ட் லெஸ் கலெக்டிவ்’ இசை நிறுவனத்தின் மூலம் ‘தெருக்குறள்’ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். Spotify, Amazon, Apple Music, Tidal, Google Play ஆகிய இணைய சேவைகளில் இருந்து ‘தெருக்குறள்’ ஆல்பத்தைப் பதிவிறக்கலாம்.

2.jpg 

ராப் இசைக் கலைஞர் அறிவு வாய்திறந்தாலே வார்த்தைகள் அடுக்கடுக்காக அருவி போல் கொட்டுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படத்தில், ‘தீவிர வியாதி’ பாடலை எழுதிப் பாடியவர் அறிவுதான். அவருடைய மனவோட்டத்துக்கு ஏற்ப ஒத்திசைந்து ஆர்ப்பாட்டமான அதேநேரம் ரசிக்கும்படியான இசைக் கோவையைத் தருகிறார் ஒஃப்ரோ.

ஜனரஞ்சகத்துக்கு இவர்கள் இசையில் குறைவில்லை. அதேநேரம் பெண்களைக் கிண்டலடிக்கும் வரிகள், கறுப்பு/வெளிர் நிறம், குண்டு/ஒடிசல் போன்ற தோற்றத்தை வைத்துக் கேலி செய்யும் சொற்கள் போன்றவற்றை ஒருபோதும் எழுதுவதில்லை என்கின்றனர் இந்த இரட்டைக் குழல் துப்பாக்கித் தோழர்கள்.

‘கள்ள மவுனி’ பாடலைக் காண:

Kallamouni 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close