[X] Close

அசாமில் நடக்கும் கொடுமை


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 09:02 am
  • அ+ அ-

-கௌதம் பாட்டியா

குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், அசாம் தடுப்புக்காவல் முகாம் ஒன்றிலிருந்து முகமது சானுல்லா பிணையில் விடுவிக்கப்பட்டார். சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று அவரை அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயம் அறிவித்த பிறகு, மே 29-லிருந்து அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர் சானுல்லா என்பது தெரியவந்ததை அடுத்து, ஒரு வார காலமாக நீடித்த மக்கள் கொந்தளிப்புக்குப் பிறகே குவாஹாட்டி உயர் நீதிமன்ற உத்தரவு வந்தது.

இடைப்பட்ட காலத்தில், அதிர்ச்சிகரமான எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அசாம் எல்லைப்புறக் காவல் படையினரின் விசாரணை அறிக்கையில், சானுல்லா ஒரு கூலித்தொழிலாளி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கையில் கையெழுத்திட்ட மூன்று பேர், விசாரணை அதிகாரியே தங்கள் கையெழுத்துகளை ஜோடித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். விசாரணை அதிகாரியும் ‘நிர்வாகக் குழப்பத்தில்’ அவ்வாறு நடந்திருக்கலாம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்தச் சொதப்பலான ஆவணங்களின் அடிப்படையில்தான், சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்ற வேண்டியதாக எதிர்பார்க்கப்படும் நீதிப்போல்வு (quasi-judicial) அமைப்பான அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயமும் சானுல்லா ஒரு அயல்நாட்டினர் என்ற முடிவுக்குவந்து, உயர் நீதிமன்றம் அதில் தலையிட்டு, அவரை விடுவிக்கும் வரை தடுப்புமுகாமில் அடைத்துவைக்கச் செய்திருக்கிறது.

எனினும், சானுல்லா அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். விதிவிலக்காக அல்லாமல் விதியாகவே மாறிவிட்ட இத்தகைய ‘நிர்வாகத் தவறு’களைக் கடந்த சில ஆண்டுகளாகப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் வெளியே கொண்டுவருகிறார்கள். விடுவிக்கப்பட்ட பிறகு, சானுல்லா அளித்த பேட்டி ஒன்றில் தன்னைப் போன்று தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஊடகக் கண்காணிப்பின் பயனின்றி, இவர்களுக்கெல்லாம் பிணையே கிடைக்கப்போவதில்லை - முடிவேயில்லாத தடுப்புமுகாம் வாழ்க்கை மட்டும்தான்.

அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயம்

தேசிய அளவில் இந்த விவாதத்தை எடுத்துச்செல்வதன் வாயிலாக, அசாமில் இதுவரை நடந்துவரும் குடியுரிமைச் சிக்கலின் துயரத்தைச் சொல்லி, அதை ஏற்றுக்கொள்ளச் செய்யவும் அபாயகரமான இந்த நிலையிலிருந்து பின்வாங்கச் செய்யவும் இன்னமும்கூட நேரமிருக்கிறது என்று சானுல்லாவின் வழக்கு நம்பிக்கையளிக்கிறது.

அசாம் உடன்பாட்டின்படி, மார்ச் 24, 1971-க்குப் பிறகு அசாமுக்குள் நுழையும் நபர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்படுகிறார்கள். தற்போது அங்கே இரண்டு இணையான செயல்முறைகள் குடியுரிமையை முடிவுசெய்கின்றன: ஒன்று, அயல்நாட்டினர் சட்டத்தின்படி செயல்பட்டுவரும் அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயம்; மற்றொன்று, தயாரிப்பிலிருக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு. பெயரளவிலும் சட்டப்படியாகவும் இவ்விரு செயல்முறைகளும் தனித்தனியானவை என்றாலும் நடைமுறையில் இந்த இரண்டு அமைப்புகளுமே ஒன்றோடு ஒன்றுகலந்தவை. அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயங்களால் அயல்நாட்டினர் என்று அறிவிக்கப்படுபவரின் குடும்பத்தினரின் பெயர்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும்.

குடியுரிமை பெறுவதற்கான அடிப்படையானதும் முக்கியமானதுமான சிலவற்றில், இந்த அமைப்புகள் கூடுமானவரை கவனமாகவும் நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையிலும் நடந்துகொள்ளும் என்றுதான் ஒருவர் எதிர்பார்க்க முடியும். குறிப்பாக, குடியுரிமை இல்லாதவர் என்று ஒருவர் அறிவிக்கப்பட்டால் வாக்குரிமை பறிப்பு, அரசுப் பணிகளிலிருந்து விலக்கு, தடுப்பு முகாம்களில் சிறைவைப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தப்படுதல் என்று அதன் பின்விளைவுகளைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்கும்போது இப்படி எதிர்பார்ப்பதே சரியாக இருக்கும். ஒரு தனிநபரை - ஒரு மனித உயிரை - அத்தகைய கடும் விளைவுகளுக்கு ஆட்படுத்து வதற்கு முன்னால், குறைந்தபட்ச மனிதாபிமானமும் நாகரிகமும் உள்ள ஒரு சமுதாயம் தன்னால் இயன்ற அளவில் சட்டத்தின் ஆட்சி என்ற நெறிமுறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

முறையற்ற தீர்ப்பாய விசாரணை

உண்மை நிலையோ அதற்கு நேரெதிராக இருக்கிறது. மிகப் பெரும்பாலான வழக்குகளில், ‘அயல்நாட்டினர்’ என்று சந்தேகப்படும் ஒருவரைத் தீர்ப்பாயத்தில் நிறுத்துவதற்கு முன்பு, சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆரம்பநிலை விசாரணைகளை நடத்துவதேயில்லை - சானுல்லா வுக்கும் உண்மையில் அத்தகைய விசாரணை நடத்தப்படவில்லை. தீர்ப்பாயங்களும் தங்களை மிகவும் குறைவான நடைமுறைப் பாதுகாப்புகளாலேயே கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ‘அயல்நாட்டினர்’ என்று சந்தேகிக்கப்படும் ஒருவருக்குப் பதிலாக, தீர்ப்பாயங்கள் அவரது குடும்பத்தினர் அனைவரையுமே விசாரணைக்கு அழைக்கும் நிலைக்கு இது இட்டுச் செல்கிறது. மேலும், எழுத்துப் பிழைகள், வயது வித்தியாசம் போன்ற ஆவணங்களில் உள்ள அலுவலகத் தவறுகளின் அடிப்படையிலேயே தனிநபர்களை ‘அயல்நாட்டினர்’ என்று அறிவிப்பதை அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன என்பதையும் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய ‘நீதி’ அமைப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள், உரிய நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களும் ஆவணங்களில் ஏற்பட்ட பிழைகளைச் சரிசெய்ய வாய்ப்பில்லாதவர்களும்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

தீர்ப்பாயங்களோடு ஒப்பிடுகையில், தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் நடைமுறைகள் இன்னும் கொஞ்சம் பரவாயில்லை. முத்திரையிடப்பட்ட உறை களாலும் ரகசிய நடைமுறையாலும் வரையறுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் அது இயக்கப்பட்டுவருகிறது. உதாரணத்துக்கு, தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளருடன் தனியாக ஆலோசித்த உச்ச நீதிமன்றம், குடியுரிமையை உறுதிசெய்வதற்கு ‘வம்சாவளி முறை’ எனப்படும் புதிய முறையை உருவாக்கியிருக்கிறது. இந்த முறையானது பொதுவில் விவாதிக்கப்படவோ ஆராயப்படவோ இல்லை. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இந்த முறையைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதோடு, வம்சாவளி முறையின் கீழ் கொண்டுவரப்படுவதால் ஏற்படக்கூடிய முக்கியமான சிக்கலையும் அவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள் (அதை நிரூபிக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது) என்று களநிலவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நீதித் துறையின் பங்கு

இத்தகைய குறைபாடுகளைக் கொண்ட புதிரான நடைமுறையில், அதன் விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும் நிலையில், அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் சட்டத்தின் ஆட்சிக்குப் பொறுப்பாளராகவும் இருக்கும் நீதித் துறை அதில் தலையிடும் என்றே எதிர்பார்க்கப்படும். தற்போதைய தலைமை நீதிபதியின் கீழ் உச்ச நீதிமன்றமோ அதற்குப் பதிலாக ஆதரவாளராகவும் தாதியாகவும் கண்காணியாகவும் செயல்படுகிறது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் நடைமுறையை மட்டும் அது இயக்கவில்லை, மேற்கண்ட வகையில் அந்த நடைமுறையை விரைந்து முடிக்கும்படியும் தொடர்ந்து அது முயல்கிறது. நடைமுறை விதிமீறலையும் உரிமைகள் மீறலையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, நீண்ட காலமாகத் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதைப் பற்றி அது மாநில அரசிடம் கேள்வி எழுப்புகிறது. தடுப்பு மையங்களில் ஏன் நிறையப் பேர் இல்லை என்றும் பெரும்பான்மையானவர்கள் ஏன் இன்னும் நாடு கடத்தப்படவில்லை என்றும் கேட்கிறது.

வாழ்வும் மரணமும் பற்றிய கேள்விகளைப் புரிந்துகொள்ள உச்ச நீதிமன்றம் தவறிவிட்டதற்குக் கொடுக்கப்பட வேண்டிய விலை மிகவும் அதிகம். அது ‘விரைவு’படுத்துவது இந்த விஷயங்களையல்ல, உரிமைகளின் பாதுகாப்பை. அசாமின் இந்தச் சூழலைப் பற்றி உடனடியாகத் தேசிய அளவிலான சுயபரிசோதனைக்கு சானுல்லாவின் வழக்கு இட்டுச்செல்லும். மாற்றத்துக்கான உடனடி அழைப்பை, எதுவாயினும் தூண்டிவிடலாம். உறுதியாக இது நடந்தே தீரும். அப்படியே நடந்தாக வேண்டும்.

- கௌதம் பாட்டியா,

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்.

தொடர்புக்கு: gautambhatia1988@gmail.com

தமிழில்: புவி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close