[X] Close

யு டர்ன் 27: டொயோடா வெற்றி ரகசியம்


27

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 11:30 am
  • அ+ அ-

-எஸ்.எல்.வி.மூர்த்தி

கலைமகளும், திருமகளும் ஒரே இடத்தில் இருக்கமாட்டார்கள் என்று சொல்வார்கள். இந்த அடிப்படையில், விஞ்ஞானிகள் வெற்றிகரமான தொழில் அதிபர்கள் ஆவதில்லை, தொழில் அதிபர்கள் கண்டுபிடிப்பாளர்களில்லை. இந்தப் பிரபல கருத்தை உடைத்தவர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசன்.

அந்த நாள் முதல் இந்த நாள்வரை வாழ்ந்த / வாழும் விஞ்ஞானிகளில் அதிக பொருட்களைக் கண்டுபிடித்தவர் எடிசன். எலெக்ட்ரிக் பல்ப், பேட்டரி, சினிமா காமெரா போன்ற 1,093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் விஞ்ஞானி பெரும் தொழிலதிபரும் கூட.

எடிசன் பேட்டரி கம்பெனி, எடிசன் போர்ட்லான்ட் சிமென்ட் கம்பெனி, எடிசன் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி, உலகத்தின் பதின்மூன்றாவது பெரிய கம்பெனியான ஜெனரல் எலெக்ட்ரிக் போன்ற எடிசனின் கம்பெனிகள் பணங்காய்ச்சி மரங்கள், 1867 முதல் 1930 வரை வாழ்ந்த ஸாகிச்சி டொயோடா (Sakichi Toyoda) ஜப்பானின் எடிசன். இவர் தந்தை விவசாயி.

அம்மா வீட்டில் கைத்தறி வைத்திருந்தார். துணிகள் நெய்து அக்கம் பக்கத்தில் வியாபாரம் செய்தார். விழிக்கும் நேரத்திலிருந்து நள்ளிரவு வரை அம்மா தறி ஓட்டிக் கொண்டிருப்பதை ஸாகிச்சி பார்ப்பான். அம்மாவின் உழைப்பைக் கண்டு மனம் பதறுவான்.

அம்மாவின் சிரமத்தைக் குறைக்க ஏதாவது செய்யவேண்டும் என்று அந்தப் பிஞ்சுநெஞ்சில் ஆசைவிதை விழுந்தது. இரவுப் பள்ளிக்குப் போனான். பொறியியல் அறிவை வளர்த்துக் கொண்டான். கனவு நனவானது. 24 – ஆம் வயதில்கைத்தறி எந்திரம் கண்டுபிடித்தார். காப்புரிமை கிடைத்தது. அவர் தயாரித்த எந்திரங்கள் அமோக விற்பனை.

ஸாகிச்சிக்கு ஒரு குணம். செய்யும் வேலையில் எப்போதுமே திருப்தி அடையமாட்டார். தொடர்ந்து என்ன முன்னேற்றங்கள் செய்யலாம் என்று முயற்சிகள் செய்துகொண்டே இருப்பார். இதை ஜப்பானிய மொழியில் கைஜென் (Kaizen) என்று சொல்வார்கள். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், நீராவியாலும், மின்சக்தியாலும் இயங்கும் எந்திரங்கள் புழக்கத்துக்கு வந்துகொண்டிருந்தன.

அற்புதமான உற்பத்தித் திறன் கொண்டவை. ஸாகிச்சி, இத்தகைய விசைத்தறிகள் கண்டுபிடிக்கும் செயல்பாடுகளில் இறங்கினார். ஐந்து வருட கடும் முயற்சி. 1896 – ஆம் ஆண்டில், நீராவியால் இயங்கும் தறி தயார். சொந்தத் தொழிற்சாலை தொடங்கும் முயற்சிகள் பல தோல்விகளைச் சந்தித்தன. 30 ஆண்டுகளுக்குப் பின், 1926 – இல், டொயோடா லூம் ஒர்க்ஸ் பிறந்தது.

கைஜென், ஸாகிச்சி ரத்தத்தில் ஊறிய குணம். தறிகளில் ஷட்டில் (Shuttle – தமிழில் ஓடக்கட்டை) என்னும் பாகம் உண்டு. குறுக்கு இழைகளை எடுத்துச் செல்லும் கருவி. இதைக் குறிப்பிட்ட உற்பத்திக்குப் பின் மாற்றவேண்டும். அப்போது, தறியை நிறுத்தவேண்டும். உற்பத்தி தடைப்படும். தறி ஓடிக்கொண்டிருக்கும்போதே ஷட்டிலை மாற்றும் வழியை ஸாகிச்சி கண்டு பிடித்தார். நேர விரயம் குறைவு. உற்பத்தி அதிகம்.

நெய்யும்போது, நூல் இழை அடிக்கடி அறுந்துவிடும். கைத்தறிகள் மெதுவாக ஓடுவதால், நெய்பவர் தவறை உடனேயே பார்த்துவிடுவார். தறியை நிறுத்துவார். குறைந்த அளவு துணியே சேதமாகும், வீணாகும். விசைத்தறி மிக வேகமாக ஓடும் எந்திரம். நூல் அறுந்துபோனால், அதை இயக்குபவர் பார்க்க முடியாது. எந்திரம் ஓடிக்கொண்டேயிருக்கும்.

துணி வீணாகும். இதைத் தடுக்க, ஸாகிச்சி விசைத்தறியில் பொருத்தும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். நூலிழை அறுந்தால், இந்தக் கருவி தானாகவே தறியை நிறுத்திவிடும். இந்தக் கண்டுபிடிப்பில் ஸாகிச்சியின் மனிதநேயமும் இருந்தது. அவர் சொன்னார், ``சேதாரம் தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், நெய்பவர் எந்திரத்தின் அருகிலேயே நிற்கவேண்டிய அவசியமும் தவிர்க்கப்பட்டது.”

ஸாகிச்சி டொயோடாவின் மகன் கிச்சிரோ டொயொடா (Kiichiro Toyoda). ஸாகிச்சி மகனை டோக்கியோ பல்கலைக் கழகத்தில் எஞ்சினீரிங் படிக்க வைத்தார். அடுத்து, அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் பல தொழிற்சாலைகளில் பயிற்சி. அப்பா கற்றுக்கொடுத்த மூன்று முக்கிய பாடங்கள் – கைஜென், சேதாரம் தவிர்த்தல், தொழிலாளிகளை மனிதர்களாக மதித்து நடத்துதல். .

கிச்சிரோ அப்பாவின் கம்பெனியில் சேர்ந்தார். ஆனால், தனிப்பாதை போட விரும்பினார். கார்கள் தயாரிப்பதில் அவருக்கு ஆர்வம். ஸாகிச்சி இதற்கு ஊக்கம் தந்தார். 1930 – இல் மரணமடைந்தார். அபோது, அவர் மகனிடம் கேட்ட வாக்குறுதி, “கார் தயாரிப்பில் உலகளாவிய முத்திரை பதிக்கவேண்டும்.”

கிச்சிரோ, 1933 - இல் கார் தயாரிப்பில் இறங்கினார். அப்பா போலவே இவரும் ஒரு லட்சியவாதி. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே கம்பெனிகளின் வேலை. இதைக் கச்சிதமாகச் செய்து முடித்தால் விற்பனை, லாபம், வளர்ச்சி ஆகியவை அனைத்தும் கம்பெனியைத் தேடி ஓடி வரும் என்பது இவர் கொள்கை.

இதனால், கம்பெனியின் பெயரையே வாடிக்கையாளர்கள் தாம் தீர்மானிக்க வேண்டுமென்று கிச்சிரோ முடிவெடுத்தார். என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை கேட்டுப் பொது மக்களிடம் போட்டி வைத்தார். 27,000 க்கும் அதிகமான பெயர்கள் வந்து குவிந்தன. இவற்றிலிருந்து, Toyota என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது. அதாவது, Toyoda என்னும் குடும்பப் பெயரில் “d” என்னும் எழுத்து “t'' - ஆக மாற்றப்பட்டது. மூன்று காரணங்கள்:

1. ஜப்பானிய மொழியில் Toyoda என்னும் வார்த்தையைவிட Toyota என்னும் வார்த்தையை எழுதுவது எளிது.

2. Toyota வார்த்தையை ஜப்பானிய மொழியில் எழுத எட்டு வீச்சுக் கோடுகள் (Strokes) தேவைப்படும். ஜப்பானில் 8 ராசியான எண்.

3. கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, ஏராளமான மக்கள் விரும்பிய பெயர் Toyota. மக்கள் குரல்தானே மகேசன் குரல்!

1947 வரை டொயோட்டாவின் வளர்ச்சி ஆமை வேகம்தான். அதுவரை உலகில் எல்லாக் கார்களுமே ஆடம்பரமானவையாக, பெரிய சைஸ்களில் இருந்தன. விலை குறைவான, சிறிய கார்களை மக்கள் விரும்புவார்கள் என்று கிச்சிரோ கணித்தார்.

1947- இல் – SA என்னும் சின்னக் காரை டொயோட்டா அறிமுகம் செய்தது. எதிர்பாராத ஆரவார வரவேற்பு. இந்த ஊக்கத்தால், 1950 – இல் டொயோட்டா அமெரிக்க மார்க்கெட்டில் நுழைந்தது. அமெரிக்கர்களின் தேவைகள் ஜப்பானியரிடமிருந்து வித்தியாசமானவை என்பதை உணர்ந்து அமெரிக்க மார்க்கெட்டுக்காகவே, கொரோனா (Corona ) என்னும் மாடலை வடிவமைத்தார்கள். இந்த மாடல் பெரும் வெற்றி கண்டது.

“கார் தயாரிப்பில் உலகளாவிய முத்திரை பதிக்கவேண்டும்” என்று தந்தையிடம் கொடுத்த வாக்குறுதி கிச்சிரோ மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அன்று கார் உலகத்தை ஆட்சி செய்தவர்கள், அமெரிக்காவின் ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், ஆகவே, கிச்சிரோ, கம்பெனியின் சி.இ.ஓ- வாக இருந்த எய்ஜி டொயோடா (Eiji Toyoda) என்பவரை, ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய இரு தொழிற்சாலைகளுக்கும் சென்று, அவர்களின் உற்பத்தி நுட்பங்களைத் தெரிந்துவரச் சொன்னார். எய்ஜிக்கும், அவர் சகாக்களுக்கும் காத்திருந்தது அதிர்ச்சி. அமெரிக்க உற்பத்தி முறைகள் டொயொட்டோவை விடப் பின் தங்கியவையாக இருந்தன. ஜப்பான் திரும்பினார். கிச்சிரோவிடம் சொன்னார்.

தலைவருக்கு அளவில்லா சந்தோஷம். கார் உலகில் நம்பர் இடத்தைப் பிடிப்பது வெறும் கனவல்ல, கை வசப்படும் சாத்தியம். அதே சமயம், அது மந்திரத்தால் மாங்காய் விழ வைக்கும் மேஜிக் அல்ல. உற்பத்தியில் புதுமை செய்யவேண்டும். அந்தப்புதுமையில் ஜப்பானியப் பழமை இருந்தால், யாரும் காப்பி அடிக்க முடியாது.

கிச்சிரோவுக்குத் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. ஆகவே, அப்பா போட்ட புள்ளிகளிலிருந்தே கோலம் போடத் தொடங்கினார். புது முயற்சிக்கு, ``டொயோட்டா உற்பத்தி முறை” (Toyota Production System – சுருக்கமாக TPS) என்று பெயர் வைத்தார்கள்.

TPS என்னும் கனவு மாளிகையின் அடித்தளம், கைஜென் என்னும் தொடர் முன்னேற்றம். கம்பெனியின் அத்தனை செயல்பாடுகளிலும், தொடர்ந்து மாற்றங்கள் / முன்னேற்றங்கள் செய்துகொண்டேயிருக்கவேண்டும். இதற்குத் தேர்ந்தெடுத்த இரண்டு பாதைகள்; Just-in-time - தேவையான பொருட்களை மட்டுமே, தேவையான நேரத்தில், தேவையான எண்ணிக்கையில் உற்பத்தி செய்வது.

ஜிடோக்கா (Jidoka) - உற்பத்தியை எந்திர மயமாக்குதலில் மனித நேயம்.

TPS மூலம் எட்டவேண்டிய இலக்குகளாக டொயோட்டோ கம்பெனி நிர்ணயித்தவை – மூரி (Muri), மூரா (Mura), மூடா (Muda) ஆகிய மூன்றையும் இல்லாமல் செய்தல். இவை ஜப்பானிய மொழி வார்த்தைகள். இவற்றுக்கு என்ன அர்த்தம்?

மூரி - வேலையில் ஏற்படும் சோர்வு, அயர்வு. தொழிலாளர்கள் தங்கள் முழுத்திறமையுடன் செயல்படுவதை மூரி தடுக்கிறது. மூரி ஏற்பட முக்கிய காரணங்கள் வேலையைத் தொழிலாளர்களிடையே சரியாகப் பகிர்ந்து கொடுக்காமை. பணிபுரியும் இடத்தில் போதிய வெளிச்சமும் வசதிகளும் இல்லாமை. மூரா- நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிடக் குறைவான பொருட்களைத் தயாரித்தல். உற்பத்தி முறைகளில் குறை, தொழிலாளர்கள் பயிற்சிக்குறைவு. மூடா- சரக்குகள், நேரம், உழைப்பு, பணம் ஆகியவற்றில் ஏற்படும் விரயம்.

இந்த மூன்று ``மூ”க்களையும் இல்லாமல் செய்தால், மூலப்பொருட்களும், தொழிலாளிகளின் உழைப்பு நேரமும் வீணாவதைத் தடுக்கலாம்; சேதாரத்தைக் குறைக்கலாம்; தரத்தையும், தொழிலாளிகளின் அர்ப்பணிப்பையும் உயர்த்தலாம்,

விமர்சகர்கள், TPS வெறும் வாய்ப்பேச்சு, வறட்டு வேதாந்தம், பெரிய பிரச்சினைகள் வரும்போது, இதன் சாயம் வெளுக்கும் என்று பேசினார்கள். இல்லை, இல்லை, TPS எங்கள் உயிர்மூச்சு. தக்க சமயம் வரும்போது அதன் சக்தி பலிக்கும் என்று டொயோட்டோ ஊழியர்கள் மனமார நம்பினார்கள்.

வந்தன இரண்டு பேரிடர்கள். ஜெயித்தது யார் – விமர்சகர்களா, டொயோட்டாவா?

(புதிய பாதை போடுவோம்!

slvmoorthy@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close