[X] Close

அலசல்: வருமுன் காவாதான் வாழ்க்கை!


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 11:34 am
  • அ+ அ-

கடந்த ஆண்டு கேரள மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது தொடர் மழை. ஏறக்குறைய ஓராண்டை நெருங்கும் நிலையில் இன்னமும் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.

தமிழகத்தில் வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தின் பாதிப்பை தென் தமிழக மக்கள் கடுமையாக உணர்ந்தனர். இரண்டுமே இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள். தற்போது மகாராஷ்டிர தலைநகர் மும்பையே தண்ணீரில் மிதக்கிறது. தொடர் மழையால் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.

கேரள மாநிலத்துக்கு இழப்பீடாக ரூ.600 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. அதேபோல தமிழகத்துக்கு ரூ.1,146 கோடியை அளித்தது. இவையெல்லாம் ஏற்பட்ட பொருள், உயிர் இழப்புகளை ஒருபோதும் ஈடு செய்யப் போதுமானதல்ல. ஆனால் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக உள்ளனவா என்பதுதான் இப்போதைய கேள்வி.

பேரிடர் மேலாண்மை என்பது மத்திய அளவிலும், மாநில அளவிலும் சரிவர செயல்படவில்லை என்பதன் வெளிப்பாடு பல தருணங்களில் நிதர்சனமாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கோரும் இழப்பீட்டில் 10 சதவீத அளவுக்கு தரும் நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. இதற்கு என்ன காரணம்? பேரிடர் மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடு, அதை சரிவர நிர்வகிக்காததுமே.

பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டியது மிக மிக அவசியமாகும். ஏனெனில் பேரிடர் மேலாண்மை என்பது, இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்வது, அதற்கு தேவையான நிதியை அளிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என மூன்று அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்ள ஆயத்தமாவது முதல்படி, அதாவது மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் அமைப்புகளை முன்கூட்டியே தூர்வாரி பராமரிப்பது, பேரிடர் குறித்து அறிவிக்கும் தொழில்நுட்பக் கருவிகளை சரிவர பராமரிப்பது ஆகியன.

வெள்ளம் சூழ் பகுதிகள் என கண்டறியப்படும் பகுதிகளில் உள்ள கட்டிடங்களை வேறிடங்களுக்கு மாற்றுவது ஆகியனவும் முன்கூட்டிய நடவடிக்கைகளாகும். புயல், வெள்ள காலங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அப்பகுதியில் உள்ள மக்களை வேறிடங்களுக்கு பாதுகாப்பாக வெளியேற்றவும் முடியும். இதன் மூலம் உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.

மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களோடு, பூகம்பம் உள்ளிட்டவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். பேரிடர் நிகழ்ந்த பிறகு அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை ஏற்பட போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற வேண்டும். சாலை வசதி, மின் வசதி உள்ளிட்டவற்றை உடனே சீரமைக்க வேண்டும்.

இவையெல்லாவற்றுக்கும் தேவை போதிய நிதி மட்டுமே. பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்தபிறகு மாநில அரசு ஓரளவு நிதியை ஒதுக்கியும், மத்திய அரசிடம் நிதி கேட்கும் நிகழ்வுகளும் தொடர்கதையாக உள்ளன. அடுத்து தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் மாநில அரசுகளுக்கு உள்ளது.

இதில் மாவட்ட நிர்வாகத்தின் பங்கையும் புறந்தள்ளிவிட முடியாது. ஒரே நாடு, ஒரே வரி என்ற முறைக்கு மாறி இரண்டு ஆண்டுகளாகவிட்டது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஜிஎஸ்டி வரி விதிப்போடு இன்னபிற வரிகளையும் செஸ், சர்சார்ஜ் (உபரி வரி) என மத்திய அரசு விதிக்கிறது.

அதேசமயம் அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு ஆலோசிக்கும் மத்திய அரசு, பேரிடர் நிதிக்கு தனியாக அல்லது கூடுதலாக வரி விதித்து ஒரு நிதியத்தை ஏற்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் பேரிடர் மேலாண்மையை சிறப்பாக்க முடியும். இல்லையெனில் இயற்கை சீற்றங்களின் இன்னலும், அதன் பின்னர் மக்கள் அல்லல்படுவதும் தொடர்கதையாகவே இருக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close