[X] Close

வண்டலூர் பஸ் ஸ்டாண்ட். வருமா... வராதா? - டிராஃபிக்கில் சிக்கும் பயணிகள் ஏக்கம்  


vandalur-bus-stand-varuma-varadha

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Jun, 2018 12:22 pm
  • அ+ அ-

நாளுக்கு நாள் விலைவாசி ஏறுவது போல, டிராபிக் ஜாமும் எகிறிக்கொண்டே போகிறது. வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு, தென்மாவட்ட பஸ்களை இயக்க, வண்டலூரில் புதிய பேருந்து நிலையத்தை பிரமாண்டமாக அமைப்பதாகச் சொல்லப்பட்டது. சொல்லி வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. வண்டலூரில் புது பஸ் ஸ்டாண்ட் வருமா, வராதா என்று ஏக்கமும் தவிப்புமாகக் கேட்கிறார்கள் பயணிகள்.

சென்னை பாரிமுனையில் பேருந்து நிலையம் இருந்தது என்றால், பலருக்கும் மறந்திருக்கும். இன்னும் பலருக்கு தெரியவே வாய்ப்பில்லை. வெளியூரில் இருந்து வருகிற எல்லாப் பேருந்துகளும் வந்து, நின்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு, சென்னைக்குள்ளேயெல்லாம் புகுந்து புறப்பட்டுத்தான், வெளியூர் செல்லவேண்டிய நிலை இருந்தது.

இதனால், சென்னை மாநகரமே எப்போதும் டிராபிக் வலையில் சிக்கி நெளிந்து தவித்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு உருவானதுதான் கோயம்பேடு பேருந்து நிலையம். மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில், டவுன் பஸ்களுக்கு, ஆம்னி பஸ்களுக்கு, வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு என்றெல்லாம் தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களும் பொதுமக்களுக்குத் தேவையான கழிவறை வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

கோயம்பேடில் எடுக்கப்படும் பேருந்துகள், அப்படியே மதுரவாயல் பைபாஸ் வழியே பெருங்களத்தூர் செல்வதால் ஓரளவு போக்குவரத்துச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. அதேபோல், வேலூர், பெங்களூரு முதலான ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் பைபாஸ் சாலையை சட்டென்று தொடும் வகையில்தான் இருக்கின்றன.

ஆனால், நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோயம்பேடில் இருந்து பெருங்களத்தூருக்கு வருவதற்குள், பதினைந்து இடங்களில் டிராபிக் ஆகிவிடுகின்றன. நல்லநாள் பெரியநாள் முதலான சமயங்களில், டிராபிக் ஜாமுக்கெல்லாம் சொல்லத் தேவையே இல்லை.

உதாரணத்திற்கு, நீங்கள் செல்லும் வண்டி பெருங்களத்தூருக்கு 9 மணிக்கு வரும் என்று நேரம் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம் முதலான ஏரியாக்களில் இருந்து வருபவர்கள் சுமார் ஒருமணி நேரத்துக்கு முன்பே கிளம்பி 9 மணிக்கு முன்னதாகவே வந்துநிற்பார்கள். ஆனால் அந்த நேரத்துக்கு பஸ் வராது. பத்துமணியோ பத்தரையோ பதினொன்றோ கூட ஆகும். காரணம்... டிராபிக்.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, முதல்வராக இருந்த ஜெயலலிதா, வண்டலூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இனி வண்டலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் வகையில், இது செயல்படும் என்று தெரிவித்தார்.

கோயம்பேடு, மதுரவாயல், போரூர் பாலம் என்கிற டிராபிக்கெல்லாம் இல்லாமல், வண்டலூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகை, மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், நெல்லை, நாகர்கோவில், பட்டுகோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, ராமேஸ்வரம் என பல ஊர்களுக்கும் வண்டலூரில் இருந்து பஸ் எடுப்பதால், சுமார் ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் டிராபிக் டென்ஷனில் இருந்து விடுபடலாம்.

இதற்காக, வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

சென்னை கோயம்பேடு புதிய பேருந்து நிலையத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ. கட்டியது. அதேபோல், வண்டலூர் புதிய பேருந்து நிலையத்தின் பணிகளையும் சி.எம்.டி.ஏ.விடம் விடப்பட்டது.

இந்நிலையில், வண்டலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அந்தப் பகுதிகளில் வாழும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 38 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால்  ஏனோ இந்தப் பணிகள், அரசு பஸ் வேகத்திலேயே மெல்ல நடப்பதாகச் சொல்கிறார்கள்.  ஒருகட்டத்தில் திடீரென பிரேக் டெளன் ஆகி நிற்கிற பஸ்கள் போலவே, பஸ் ஸ்டாண்டும் பிரேக் டெளனாகி விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு, கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள்.

ஜெயலலிதா மறைவு, ஓபிஎஸ் முதல்வர், பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் ஆகியிருக்கிற நிலையில், வண்டலூர் பேருந்து நிலையம் ஆரம்பகட்டப் பணிகள் கூட நடைபெறாமல் அப்படியே இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

கடந்த 2017ம் ஆண்டில், கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்திருந்தனர். பேருந்து நிலையம், பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள கட்டிடங்கள், பேருந்து நிலையத்தை இணைக்கும் சாலை வழிகள் என ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.

இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க உள்ள பகுதிக்கு அருகில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இடங்களும் உள்ளன. தொல்லியல் துறை விதிகளின்படி, அந்த இடங்களில் கட்டுமானப் பணிகள் செய்யக்கூடாது.

மேலும் இணைப்புச்சாலைக்கான இடங்களில், தனியார் நிலங்கள் இருக்கின்றன. இதனால் பேருந்து நிலையம் அமைப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டது.

பள்ளிக்கால விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறைகள், சனி ஞாயிறு விடுமுறைகள் என்கிற போதெல்லாம் சென்னைக்கு உள்ளேயும் சரி... சென்னையில் இருந்து வெளியேயும் சரி... யாரும் ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது. அவ்வளவு நெரிசல். அத்தனை டிராபிக். எக்கச்சக்க டைம் வேஸ்ட்!

வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தால்தான் ஓரளவாவது விடியல் பிறக்கும். பஸ் ஸ்டாண்ட்... வருமா வராதா? தவித்து மருகி ஏக்கத்துடன்  கேட்கிறார்கள் பொதுமக்கள்!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close