[X] Close

தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளை மறுபரிசீலிக்க வேண்டிய நேரமிது


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 09:31 am
  • அ+ அ-

வைகோவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையானது சுதந்திரச் சிந்தனையாளர்கள் பலருக்கும் வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது. தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் - மிகவும் குறிப்பாக, ஈழத் தமிழர்களுக்காக - எந்தத் தயக்கமுமின்றி குரல்கொடுப்பவராக அவர் இருக்கிறார். அவர் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் விதம் நிச்சயமாக விவாதத்துக்குரியது. தண்டனை அளிக்கப்பட்டவராகவே அவர் இருக்கிறார். நீதிமன்றத்திடமிருந்து தான் எந்தக் கருணையையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதிகபட்ச தண்டனைக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் கூறியதாகத் தெரிகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124ஏ-ன் கீழாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அதற்கெதிராகப் போராடிய நமது தலைவர்களையெல்லாம் அது நினைவூட்டுகிறது.

தனது ஆட்சிக்கு விசுவாசமாக நடந்துகொள்ளாதவர் என்று கருதப்படுபவர்களையெல்லாம் ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட பிரிவு 124ஏ-ன் வரம்புக்குள் வைகோ கொண்டுவரப்பட்ட சூழலே சந்தேகத்துக்குரியதாகிறது. இந்தக் கடுமையான சட்டப் பிரிவின் கீழாகத்தான் பால கங்காதர திலகர், காந்தி போன்ற நாட்டின் மிக உயர்ந்த தலைவர்களெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். தேசத் துரோகத்துக்கான சட்டப் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டுவது தொடர்ந்து அதிகரித்துவரும் இன்றைய அரசியல் சூழலில், சுதந்திரமான மக்களாட்சியுடன் ஒருங்கிணைந்த ஒரு பாகமான எதிர்க்கும் உரிமையை நடைமுறையில் விலக்கிவைக்கும் பிரிவு 124 ஏ-ஐ அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் கேதார்நாத் எதிர் பிஹார் மாநில அரசு வழக்கிலேயே உறுதிசெய்திருந்தாலும் அது மறுபரிசீலனைக்கு உரியதே.

காஷ்மீர் விவகாரத்தில் அரசின் அணுகுமுறையைக் கண்டிப்பதற்காக, கண்ணையா குமார் கூட்டம் ஏற்பாடு செய்ததைத் தேசவிரோதமாகக் கருத முடியாது என்பதும், பழிவாங்கும் விதமாகவே அவர் மீது வழக்கு தொடரப்பட்டது என்பதும் அனைவருக்குமே தெரியும். அரசின் மீது அதிருப்தியை உருவாக்கும் நோக்கமில்லாமல் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான உரிமை, தேசத் துரோகமாகப் பொருள்விளக்கம் அளிக்கப்படுகிறது.

அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமைக்குச் சில நியாயமான கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க முடியும். அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்து வைக்கப்படும் நேர்மையான விமர்சனத்துக்கு அக்கட்டுப்பாடுகள் பொருந்தாது. ஒரு ஜனநாயக நாடு, ஜனநாயகக் கருத்துகளை ஒடுக்குவதற்காக தேசத் துரோகம் என்று அடையாளப்படுத்தும் செயல்களில் இறங்கக் கூடாது. வைகோ பேசியதில் தேசத்துக்கு விரோதமாக எதுவுமில்லை, பக்கத்து நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ஓர் இனத்தின் மனித உரிமைகளுக்கு ஆதரவாக ஒரு குடிமகன் தெரிவித்திருக்கும் கருத்துகள் மட்டுமே. இதற்காக ஒருவரைத் தேச விரோத வழக்கில் தண்டிக்க முடியும் எனில், அடக்கியொடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காக உலகத்தில் எந்த இயக்கமுமே இல்லாமல்போய்விடும். அந்த மக்கள் உலகத்தின் ஆதரவையும் பெற முடியாமல்போகும். இது சர்வதேச மனித உரிமை பிரகடனத்துக்கே எதிராக முடியும். உலகத்தின் வேறு எந்தப் பகுதியிலாவது விடுதலைப் போராட்டத்துக்கான குரல்கள் எழும்போது பத்திரிகைகளோ அல்லது தனிநபர்களோ முன்வைக்கும் நியாயமான விமர்சனங்களை இப்படி அடக்க முற்படுவது கனவாகத்தான் இருக்கும். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, முழு அமர்வும் கூடி, அரசமைப்புச் சட்டத்தின்படி காலம்தோறும் வளர்ந்துகொண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகள் குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது. இந்தக் கோணத்தில் 124 ஏ தொடர வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டாக வேண்டும்.

- என்.ஜி.ஆர்.பிரசாத்,

வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

தொடர்புக்கு: ngrprasad@yahoo.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close