[X] Close

வாழ்ந்து காட்டுவோம் 13: குடும்ப வன்முறையிலிருந்து மீடகும் கரம்


13

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:42 am
  • அ+ அ-

-ருக்மணி

குடும்ப வன்முறை என்பது இன்று பெரும்பாலா னோருக்கு அன்றாட வாழ்க்கையின் அங்க மாகவே ஆகிவிட்டது. குடும்ப அமைப்புக்குள் பெண்களும் குழந்தைகளும் பலவிதமான வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.

அவற்றிலிருந்துப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-லும் விதிகள் 2006-லும் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டம் 2006 முதல் நடைமுறைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கிடையே மற்ற வழக்கு விசாரணைகள் நிலுவையிலிருந்தாலும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் வழக்குகளைப் பதிவுசெய்யலாம்.

ஒரே வழக்கில் பல தீர்ப்புகளைப் பெற இச்சட்டம் வழிவகை செய்துள்ளது.

# வார்த்தைகள் மற்றும் மனரீதியான கொடுமைகளையும் குற்றச்செயலாக அங்கீகரித்தல்.

# குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மனுதாரர், எதிர் மனுதாரர் இருவருமே மேல் முறையீடு செய்யலாம்.

# குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் கிடைக்கும் நிவாரணங்கள்:

பிரிவு 18 - எதிர் மனுதாரர் குடும்ப வன்முறை புரிவதி லிருந்து தடுத்திடும் பாதுகாப்பு ஆணை மூலமாகக் கீழ்க்காணும் நிகழ்வுகளைத் தடுக்க முடியும்

1. பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் இடத்துக்குச் சென்று தொல்லை தருவதைத் தடைசெய்யலாம்.

2. வன்முறை செய்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் எந்தவிதமான தொடர்பையும் (கடிதம், தொலைபேசி அழைப்பு, இணையதளம் மூலம் தொல்லை) வைத்துக்கொள்வதைத் தடைசெய்யலாம்.

3. பெண்ணின் உறவினர் யாருக்கும் வன்முறை ஏற்படாதவாறு தடை உத்தரவு பிறப்பிக்கலாம்.

4. அந்தப் பெண்ணுக்குப் பொருளாதாரரீதியாகப் பாதிப்பு ஏற்படுத்தும் எவ்விதமான நடவடிக்கையையும் தடை செய்யலாம்.

பிரிவு 19 - கணவர் வீட்டில் தங்குவதற்கான வசிப்பிட ஆணை - ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் அந்தப் பெண்ணை அதே வீட்டில் வசிக்க உத்தரவிடலாம். சில வழக்குகளில், வன்முறையில் ஈடுபடும் அதே ஆணுடன் ஒரே வீட்டில் ஒரு பெண் வசிப்பது பாதுகாப்பற்றது என்று நினைத்தால், அந்த நபரை வீட்டிலிருந்து வெளியேற்றும்படி கோரும் மனுவைத் தாக்கல் செய்யலாம்; அல்லது நீதிமன்றம், வன்முறையாளரையே அந்தப் பெண்ணுக்கு வேறு வசிப்பிடம் ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிடலாம்.

பிரிவு 20, பிரிவு 22 - பாதிக்கப்பட்ட பெண் வன்முறையால் ஏற்பட்ட செலவுகளை எதிர்கொள்ள இந்த நிவாரண உத்தரவு உதவும். இதன் மூலம், மருத்துவச் செலவு, பொருள் இழப்பு, ஜீவனாம்சம் ஆகிய பொருளாதாரரீதியான உதவிகளை அந்தப் பெண் பெற இயலும்.

பிரிவு 21 - குழந்தைகளைத் தற்காலிகமாகத் தன்னுடன் வைத்துக்கொள்வதற்கான இடைக்கால ஆணை - குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரிப்பதே உளவியல்ரீதியான வன்முறை, அத்துடன் அந்தப் பெண்ணைப் பணியச்செய்வதற்கு மிரட்டுவது என்பதால்தான் இந்த உத்தரவு. இது இடைக்கால நிவாரணமின்றித் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாவல், பாதுகாப்பாளர் குறித்த சட்டங்களின் கீழான உரிமைகளை மறுக்கவும்  முடியாது.

பிரிவு 23 – ஒரு பெண், தன் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும் அதன் மூலம் அவளுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும் நீதிமன்றத்தில் எடுத்துக்கூறும்போது, வழக்கு நடைபெறும் காலத்தில் அந்தப் பெண் எதிர்மறையாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்த இடைக்கால பாதுகாப்பு உத்தரவை நீதிமன்றம் வழங்கலாம்.

உதாரணமாக, நித்யா என்ற பெண் தன்னைத் தினமும் அடித்து உதைக்கும் தன் அண்ணன் கணேஷிடமிருந்து தன் உயிரைப்  பாதுகாக்க ‘வன்முறை தடை’க்கான உடனடி உத்தரவு கோருகிறார்.

இந்த நிலையில் நித்யாவுக்கு அவர் கோரும் வன்முறை தடை உத்தரவை, கணேஷ் தரப்பை விசாரிக்காமலேயே நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாகத் தர முடியும். கணேஷுக்கு மனுவின் நோட்டீஸ் தரும்போதே, பிறப்பிக்கப்பட்ட உத்தரவுடன் மனு நகல் சார்பு செய்யப்படும்.

வன்முறையாளர், நீதிமன்ற உத்தரவை மீறுவதும் அதை நடைமுறைப்படுத்த மறுப்பதும் கிரிமினல் குற்றம். எனவே, பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தால், வன்முறையாளர் கைதுசெய்யப்படலாம். நீதிமன்ற உத்தரவை மீறினால், அந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறை அல்லது 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

பாதுகாப்பு அலுவலர்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள் உரிய நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறுவதற்கான சட்ட உதவிகளை வழங்கவும், இந்த வழக்கில் குடும்ப வன்முறை அறிக்கை தாக்கல் செய்யவும், ஒவ்வொரு மாவட்டச் சமூகநல அலுவலகத்திலும் ஒரு பாதுகாப்பு அலுவலர்  பணியமர்த்தப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆணைகளைக் காவல்துறையின் உதவியோடு செயல்படுத்துவதற்கும் இவர்கள் துணையாக இருப்பார்கள்.

 பாதிக்கப்பட்ட பெண்கள் இச்சட்டத்தின்கீழ் நேரடியாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலோ சேவை அளிக்கும் நிறுவனத்திலோ அருகிலுள்ள காவல் நிலையத்திலோ புகார் மனு அளிக்கலாம்.

சேவை அளிப்பவர்கள்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்கீழ் அறிவிக்கப் பட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் சேவை அளிப்பவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இச்சட்டத்துடன் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் நிவாரணமும் பெற்றுத்தர உதவுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குடும்ப நிகழ்வு அறிக்கை பதிவுசெய்வதில் உதவுதல், தங்களது குழந்தைகளுடன் தங்குவதற்குப் பாதுகாப்பான குறுகிய கால உறைவிடம் பெற்றுத் தருதல், ஆலோசனையோடு மருத்துவ வசதி வழங்குதல் போன்ற உதவிகளை இவர்கள் செய்கின்றனர்.

 பாதிக்கப்பட்ட பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாகத் தொழிற்பயிற்சி பெறவும் உதவுகின்றனர்.

 மாவட்டத்துக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் சென்னை மாவட்டத்துக்கு இருவர் என்று மொத்தம் 33 சேவை அளிப்பவர்கள் அரசால் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இது குறித்த மேலும் தகவல்களுக்கு அந்தந்த மாவட்டச் சமூக நல அலுவலரை அணுகலாம்.

எவையெல்லாம் குடும்ப வன்முறை?5.jpg

உடல்ரீதியான வன்முறை: உடல் காயம் என்பது உயிருக்கு ஆபத்தான வன்முறை.

பாலியல்ரீதியான வன்முறை: பாலியல்ரீதியாக அவமானப் படுத்துதல், தரக்குறைவாக நடத்துதல், கட்டாய உறவுகொள்ளுதல், ஆபாசப் படங்களைப் பார்க்கத் தூண்டுதல் போன்றவை.

வார்த்தைரீதியான வன்முறை: மனத்தைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அவமானப்படுத்துதல், பாதிப்பு அல்லது காயம் ஏற்படுத்தப்போவதாக மிரட்டுதல், பட்டப்பெயர் சூட்டி கேவலமாக அழைத்தல், ஆண் குழந்தை இல்லை என்பதற்காகக் குற்றம் சாட்டுதல் போன்றவை.

பொருளாதார வன்முறை: அடிப்படைத் தேவை களைத் தர மறுத்தல் (உணவு வழங்க மறுத்தல்), குடும்பத்தைப் பராமரிக்க மறுத்தல், மதிப்புமிக்க உடைமைகளை அடகு வைப்பது அல்லது விற்றுவிடுவது அல்லது நாசப்படுத்தி விடுவது, சம்பளத்தைக் கட்டாயப்படுத்தி பெறுவது போன்றவை.

சட்ட விரோதமான அல்லது வரதட்சிணை சம்பந்தப்பட்ட எவ்விதக் கோரிக்கையும் குடும்ப வன்முறையே. உரிமையியல், குற்ற வியல் பிரிவுகளை உள்ளடக்கி இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்த 60 நாட்களுக்குள் இச்சட்டம்  மூலம் தீர்வுபெற முடியும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய கணவர், கணவரைச் சார்ந்த அதே வீட்டில் வசித்து வரும் ஆண்கள்மீது இச்சட்டத்தின்கீழ் வழக்குத் தொடரவும் நிவாரணம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

 

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர்,

மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.

தொடர்புக்கு: somurukmani@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close