[X] Close

வட்டத்துக்கு வெளியே: மாற்றுப் பாலினத்தவரின் மகிழ்ச் சிப் பேரணி


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:42 am
  • அ+ அ-

-ச.ச. சிவசங்கர்

‘என் உடல் என் உரிமை’, ‘காதல் பொது மொழி’,  ‘நாங்கள் எதிர் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’ - இப்படிப்பட்ட வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி தங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களுடனும் ஒரு மகிழ்ச்சிப் பேரணி கடந்த ஞாயிறன்று  சென்னையில் நடந்தது.

11-ம் ஆண்டாக நடக்கும் ‘தமிழ்நாடு வானவில் சுயமரியாதைக் கூட்டணி’யின் பேரணியில் ஒவ்வொருவரின் உதடுகளும், ‘ஹேப்பி பிரைடு, ஹேப்பி பிரைடு’ என்றே ஒலித்தன. அதை மகிழ்ச்சியின் அடை யாளமாகவோ உரிமையின் வெளிப்பாடாகவோ மட்டுமே கருத முடியாது. அவர்களின் வண்ணம் நிறைந்த சிரிப்புக்குப் பின் இருள் சூழ்ந்த தவிப்பும் ஒடுக்குமுறைக்குள்ளான அழுகுரலும் ஒளிந்திருக்கும்.

இங்கு நடக்கும் சுயமரியாதைப் பேரணி களை மாற்றுப் பாலினத்தவரின் கொண்டாட்ட நிகழ்வுகளாக மட்டுமல்ல; தனிமனித உரிமையாகவும் பொதுச் சமூகத்தில் இருப்ப வர்களின் மனங்களை வென்றெடுக்கும் வியூகமாகவும் பார்க்க வேண்டும்.

எதை நோக்கிய பயணம்?

உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் 6 அன்று சட்டப்பிரிவு 377-ல் தன்பாலின உறவு குற்றச்செயல் இல்லை எனத் தீர்ப்பு அளித்தது. “வரலாறு உங்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளது” என்றார் நீதிபதி இந்து மல்ஹோத்ரா.

சக மனிதனைச் சமமாக நடத்தவும் சட்டங்கள் தேவைப்படும் சமூகத்தில் இந்தத் தீர்ப்பு தவிர்க்க முடியாதது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு சில தன்பாலின ஈர்ப்பாளர்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

சென்னையில் நடந்த சுயமரியாதைப் பேரணியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சிலர் அவர்களின் குடும்பத்துடன்  கலந்து கொண்டனர். பொது மக்களும் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர்.

தீர்ப்புக்குப் பின் திருத்தங்கள்

சட்டப் பிரிவு 377-க்கு எதிரான தீர்ப்புக்குப் பின் சென்னையில் நடந்த மிகப் பெரிய முதல் நிகழ்வு இது. கடந்த ஆண்டுகள்போல் இல்லாமல் இந்த ஆண்டு ‘ஹேப்பி பிரைடு’ என்று கோஷமிட்ட குரல்களில் பளிச்செனத் தெரிந்தன நம்பிக்கையும் மகிழ்ச்சியும். கடலளவு உள்ள உரிமையில் துளியளவு அங்கீகாரம் கிடைத்த பெருமிதம் அதில் நிறைந்திருந்தது.

அந்தத் தருணத்தில்தான் இந்த தீர்ப்புக்குப் பின் தன்பால் ஈர்ப்பாளர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்படுமா எனத் தோன்றியது. “திருமணச் சட்டமும் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையும்தாம் தன்பால் ஈர்ப்பாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகளில்  முக்கியமான வைன்னு நினைக்கிறேன்.

பொதுவா ரோட்ல நடந்துபோகும்போதோ பொது இடங்களிலோ மாற்றுப் பாலினத்தவரை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தறவங்க மேல தகுந்த நடவடிக்கை எடுக்கணும். அப்படிச் செய்தாதான் வேறு யாரையும் கேலி செய் யவோ துன்புறுத்தவோ பயம் வரும்” என்றார் ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத்தினம்.

மாறுவார்களா மக்கள்?

தன்பால் ஈர்ப்பாளர்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை நீதிமன்றம் வழங்கிவிட்டது. அதனால் மட்டுமே அவர்கள் பொதுச் சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட முடியுமா? மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? சட்டம் சொல்லிவிட்டதே என்ப தற்காக அவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்களை எந்த மனத்தடையும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்களா, வாய்ப்புகளை வழங்குகிறார் களா? சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருக்கும் நிலை வேறு.

12.jpg 

கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் நிலை வேறு. நகரங்களில் குறைந்தபட்சம் வீடு, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளாவது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர்களுக்குக்  கிடைத்துவிடுகிறது. கிராமங்களில் தன்பால் ஈர்ப்பாளர்களின் நிலை கூண்டுக்குள் அடைபட்ட பறவைதான்.

“தன்பால் உறவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பையும் அதையொட்டி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள விஷயங்களையும் ஒவ்வொரு மாநிலத்திலும் பரவலாக்குவது அவசியம். மாற்றுப் பாலினத்தவர் சமூகத்தைப் பற்றிய புரிதலைப் பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும்.

இன்றுவரை தன்பாலினத் தன்மையை ஏற்றுக்கொள்ளாத சில பெற்றோர் அதிர்ச்சி வைத்தியம் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். திருநங்கையர்களைப் பற்றிய புரிதல் சமூகத்தில் ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால், தன்பாலினர்களைப் பற்றிய புரிதல் குறைவு. அதை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்” என்றார் சகோதரன் அமைப்பின் மேலாளர் ஜெயா.

திரைப்படமும் கருவியே

மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றியே உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. ஆனால், நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். இந்தியச் சமூகம் ஏற்றத்தாழ்வு, தீண்டாமை எனப் பல அடுக்குகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மாற்றுப் பாலினத்தவரின் குரல் அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் எதிரொலித்து அதன் மூலம் மாற்றங்கள் நிகழு வேண்டும்.

“அடிப்படையில், குடும்பங்களில் இருந்துதான் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். தன்பாலினருக்கு நடக்கும் கொடுமைகள், கட்டாயத் திருமணங்கள் எனக் களையப்பட வேண்டிய சிக்கல்கள் ஏராளம். ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் உட்பட பல விஷயங்கள் மாற வேண்டியது அவசியம்” என்றார் ‘கட்டியக்காரி’ அமைப்பின் மூலம் நாடகப் பயிற்சியை அளித்துவரும் ஸ்ரீஜித்.

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமா ஏற்படுத்திய தாக்கம் குறித்து நிறையப் பேருக்குத் தெரியும். பெரும்பாலும் மாற்றுப் பாலினத்தவரைத் தவறாதான் சித்தரிச்சிருக் காங்க. அதனால் தமிழ் சினிமாவில் மாற்றுப் பாலினச் சமூகத்தைப் பற்றிச் சரியாகக் காட்சிப்படுத்தணும். சினிமா மூலமா சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது என் நம்பிக்கை” என்றார் ஐ.டி. ஊழியரான கனகா.

சட்டத்துடன் சேர்ந்து மக்களின் மனமாற்றமும்தான் மாற்றுப் பாலினத்தவரின் நல்வாழ்வை உறுதிசெய்யும் என்பதைத்தான் சென்னையில் நடந்த சுயமரியாதைப் பேரணியும் அதில் பங்கேற்றவர்களின் முழக்கங்களும் உணர்த்தின.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close