[X] Close

நட்சத்திர நிழல்கள் 13: பானுமதிக்கு அனுபமா சாயல்


13

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:42 am
  • அ+ அ-

-செல்லப்பா

நெருக்கடி நேரத்தில் உதவும் மனிதரை ஆபத்பாந்தவராகக் கருதி அவர்களைப் பற்றிய மிகை மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்கிறோம். சில நேரத்தில் இப்படிப்பட்ட மிகை மதிப்பீடு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். திருமண காரியத்தில்கூட இதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுத்துவிடுவது

பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மணப்பெண் குறித்து ஆயிரம் கேள்விகளைக் கேட்கும் நாவுகள் மணமகன் பற்றிய

எத்தனை அவசியக் கேள்விகளை எழுப்புகின்றன? மணமகனின் உடல்நலம், மனநலம் குறித்த அடிப்படையான கேள்விகளுக்கே சமூகம் இன்றுவரை பெரிதாகத் தயாராகவில்லையே.

மேற்கண்ட விஷயங்களைப் பற்றி இப்போது சொல்வதற்குக் காரணம் பானுமதிதான். இத்தகைய விஷயங்களை அவளது குடும்பத்தினர் திறம்படக் கையாண்டிருந்தால், தன் வாழ்வில் எந்தப் பெண்ணும் எதிர்கொள்ள விரும்பாத கொடுமைகளை எல்லாம் அவள் எதிர்கொண்டிருந்திருக்க மாட்டாள். பானு எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாள்; தாண்டிவந்துவிட்டாள். ஆனாலும், அவளது வாழ்வு பெண்களுக்குப் பெரிய படிப்பினைதான்.

பானு யார்?

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நடந்த உண்மைக் கதை ஒன்றின் அடிப்படையில் இயக்குநர் வஸந்த் உருவாக்கிய திரைப்படம் ‘சத்தம் போடாதே’ (2007). இதில் நடிகை பத்மப்ரியா ஏற்றிருந்த மையக் கதாபாத்திரம்தான் பானுமதி. இந்த பானுவைப் பார்க்க பார்க்க மனத்தில் அனுபமாவின் நினைவு மேலெழுந்தது.

அனுபமாவா எந்த அனுபமா என நெற்றியைச் சுருக்கி யோசிக்கிறீர்களா? ‘சத்தம் போடாதே’ வெளியாவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்குவந்த வஸந்தின் குரு பாலசந்தரின் ‘அவர்கள்’ (1977) திரைப்படத்தின் அனுபமாவை மறந்துவிட்டீர்களா என்ன? அனுவும் பானுபோல் அவதிப்பட்டாளே.

பானுவுக்கும் அனுவுக்கும் ஒற்றுமைகள் உண்டு; சில வேற்றுமைகளும் உண்டு. விரும்பி மணமுடித்து மணமுறிவுக்கு அவர்களை இட்டுச் சென்ற குரூரக் கணவன் என்பது பானு, அனு இருவருக்குமே பொதுவிதியானது. குரூரமான குணங்களைக் கொண்ட மனிதர்கள்கூட நல்லதன்மையான கடவுளைத்தான் படைத்திருக்கிறார்கள். ஆனால், நல்ல தன்மை கொண்ட கடவுள் ஏன் குரூரமான குணங்களைக் கொண்ட மனிதர்களைப் படைக்கிறார் எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

பானுவுடைய கணவன் அய்யம்பேட்டை காளிதாஸ் ரத்னவேலு. பானுவைக் கண்ணின் மணிபோல் பார்த்துக் கொண்டவனல்ல; ரத்னவேலு அவளது கட்டில் கனவையும் தொட்டில் கனவையும் கலைத்துப்போட்டவன்.

தன்னிடம் குடிகொண்டிருந்த குடிநோயால் கட்டிலுக்கோ தொட்டிலுக்கோ பயனற்றுப்போன குணக்கேடன் அவன். குடிநோயிலிருந்து மீண்டவன் என்பதைத் தந்திரமாக மறைத்து நண்பன் மறுத்த பெண்ணான பானுவை விரும்பி மணமுடித்துக்கொண்டான்.

தானாக வந்த வரன், பார்ப்பதற்கு லட்சணமானவன், வேலை, சம்பளம் போன்றவை பானு குடும்பத்தின் கண்ணை மறைத்துவிட்டன. பானுவுக்குக் குழந்தைகள் என்றால் உயிர். ஆனால், ரத்னவேலு மூலம் அவளால் புதிய உயிரை உருவாக்கிக்கொள்ள முடியாத சோகத்தால் துவண்டாள். தத்து எடுத்துக்கொண்ட குழந்தையையும் நாடகமாடி திருப்பித் தரவைத்துவிட்டான் அந்த மாபாதகன்.

ஒருநாள் பானுமதிக்கு ரத்னவேலு பற்றிய உண்மை எல்லாம் தெரியவந்தபோது அதிர்ந்துவிட்டாள். தான் குறையுள்ளவள் என்ற பொய்யைக் கூறியிருக்கிறான் என்பதை அறிந்தபோதும் எல்லாவற்றையும் தன்னிடம் மறைத்துத் தன்னை ஏமாற்றிவிட்டானே என்று நினைத்தபோதும் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பானு தனது இரக்கக் குணத்தால் ஏமாந்து நின்றாள். ரத்னவேலுவிடமிருந்து விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டாள். ஆனால், அவனுடைய கொடுமைகள் அத்துடன் முடியவில்லை.

20.jpg 

அனுவை அறிவோம்

அனு அப்போது தந்தையுடன் மும்பையில் வசித்துவந்தாள். தந்தையின் அலுவலக மேலாளரான ராமநாதன், அவர்களது குடும்பத்துக்குப் பலவகையில் உதவினான். மரணத் தறுவாயிலிருந்த அனுபமாவின் தந்தையிடம் தானே அனுபமாவை மணந்துகொள்வதாக வாக்களித்தான்.

தன் காதலைப் பற்றி அவனிடம் சொன்ன அனுபமா, கடைசியாக ஒருமுறை, சென்னையிலிருந்த தன் காதலன் பரணிக்குக் கடிதம் எழுதிப் பார்ப்பதாகவும் பதில் வரவில்லை என்றால் ராமநாதனை மணந்துகொள்வதாகவும் சொல்கிறாள்.

விதி வலியது. காதலனிடமிருந்து பதில் வரவில்லை. அனு, ராமநாதனைக் கைப்பற்றுகிறாள். அனுவுடைய தந்தை நிம்மதியாகக் கண்ணை மூடிவிட்டார். அனுவால் அதன் பிறகு நிம்மதியாகக் கண்மூட முடியவில்லை. தான் கைப்பற்றியது ஒரு துணையை அல்ல; கொடுந்துயரத்தை என்பது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குத் தெரியவருகிறது.

தாம்பத்ய வாழ்க்கையின் தாளகதி தவறுகிறது. நாட்கள் செல்லச் செல்ல ராமநாதனுடைய உண்மைக் குணம்  அம்பலமாகிறது. மிகப் பெரிய சாடிஸ்ட் அவன். அவளைத் துன்புறுத்தி இன்பம் காண்பதிலேயே குறியாக இருக்கிறான்.

அவளது உணவை ருசித்து உண்பதில்லை. அவளது உடைகளை ரசித்துச் சொல்வதில்லை. அவள் பற்றிய அவனது அபிப்ராயங்களைக் கூர்மையான கத்தியை அடிவயிற்றில் செருகுவதுபோல் சொல்லிச் செல்வான்.

ராமநாதனின் நாவிலிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லும் ஆலகால விஷத்தைவிடக் கொடியதாக இருந்தது. அனு உயிராக மதித்த நடனத்தை ஆடக்கூட அவளை அவன் அனுமதிக்கவில்லை. ராமநாதன் தன் குழந்தையைக்கூடக் கொஞ்சுவதில்லை.

குழந்தையை வளர்க்கும் பொறுப்பு காரணமாக எல்லாவற்றையும் மென்றுதின்று செரிக்கக் கற்றுக்கொண்டிருந்தாள் அனு. இயன்றவரை எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்துசெல்லப் பழகியிருந்தாள். ஆனாலும், எல்லா நேரமும் வெறும் ஜடமாக இருந்துவிட முடியாதே.

பிரச்சினை முற்றிய ஒரு தருணத்தில் விவாகச் சங்கிலியின் கண்ணி பட்டெனத் தெறித்துவிடுகிறது. மணமுறிவுதான் மனத்துக்கு கந்தது என்று விவாகரத்து பெற்றுக்கொண்டாள் அனு. புதிய வாழ்க்கையை எதிர்பார்த்துக் குழந்தையுடன் சென்னைக்குத் திரும்பினாள் அவள்.

தென்றலாக ஓர் உறவு

மணமுறிவு பெற்றுக்கொண்ட உடனேயே ரத்னவேலு கட்டிய தாலியைக் கழற்றிக் கோயிலில் போட்டுவிட்டாள் பானு. அனுவோ விவாகரத்து பெற்றுவிட்டபோதும் சில காலம் அந்தத் தாலியைச் சுமந்து திரிந்தாள். கடைசியில் அனுவும் தாலியைக் கழற்றிக் கோயில் உண்டியலில்தான் போட்டாள். அதற்குச் சில காலம் பிடித்தது,  அவ்வளவுதான்.

மணமுறிவுக்குப் பின் பானுவுக்கு ரவிச்சந்திரன்மீது காதல் பிறந்தது; அது மண வாழ்வையும் அமைத்துக் கொடுத்தது. அனுவுக்கோ பரணியுடனான பழைய காதல் தொடர்ந்தது.

பானுவின் வாழ்வில் ராமநாதன் என்ற பெயரில் மறுபடியும் வந்தான் ரத்னவேலு. அனுவின் பாதையிலும் ராமநாதன் மீண்டும் குறுக்கிட்டான். பானுவைக் கடத்திக்கொண்டு போனான் ராமநாதன். அனுவின் ராமநாதனோ அவளது காதல் திருமணத்தை ரத்துசெய்யச் சதிசெய்து வென்றான்.

தனித்துவிடப்பட்டாள் அனு. அவளுக்குத் துணை அவளுடைய மாமியாரும் குழந்தையும்தான். அனுவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான் அவளுடன் பணியாற்றிய ஜானி. ஆனால், அனுவால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. திருமண பந்தம் அவசியமில்லை என்று கருதி தனியே வாழ முடிவெடுத்துவிட்டாள். பானுவின் சூழல் வேறு. ராமநாதனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய ரவிச்சந்திரனுடனேயே வாழ்வைத் தொடர்ந்தாள்.

இந்த இரண்டு பெண்களின் வாழ்விலும் கணவன் என்ற ஆண்கள் காட்டிய திமிர்த்தனம், ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. பெரும்பாலான ஆண்கள் தங்களிடம் என்ன குறை இருந்தாலும் அதைப் பற்றிய கவலையற்றுப் பெண்களை அடக்கியாள்வதிலேயே இன்பம் காண்கிறார்கள்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்னும் புரிதல் ஆண்களுக்கு எப்போது வரப்போகிறதோ? அதுவரை அனு, பானு போன்ற பெண்கள் புயல் காற்றை எதிர்த்துத்தான் தங்கள் வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டியுள்ளது.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in

படம் உதவி: ஞானம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close