[X] Close

பெண்கள் 360: எழுத்தே துணை


360

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:42 am
  • அ+ அ-

-தொகுப்பு: முகமது ஹுசைன்

எழுத்தே துணை

இசோபெல் டோரோதியா மெக்கெலர், இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவர். ஆஸ்திரேலிய எழுத்தாளரான இவரது கவிதைகளும் புனைகதைகளும் பிரசித்திபெற்றவை. அவரது கவிதைத் தொகுப்பான ‘என் நாடு’ (my country) இன்றும் கொண்டாடப்படுகிறது. 1885 ஜூலை 1 அன்று அவர் பிறந்தார்.

புகழ்பெற்ற மருத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்லஸ் மெக்கெலருடைய மகள் இவர். இசோபெல்லுக்கு வீட்டிலேயே கல்வி வழங்கப்பட்டது. ஓவியத்தில் தேர்ச்சிபெற்றதுடன் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசும் திறனும் பெற்றிருந்தார்.

நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவரது படைப்புகளிலும் நகைச்சுவை உணர்வு விரவியிருக்கும். நகரத்தின் சௌகரியமும் நாட்டுப்புறத்தின் எளிமையும் ஒருங்கே நிறைந்திருந்த அவரது வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது.  லண்டனில் வசித்தபோது, 28 வயதில் பாட்ரிக் சால்மர் எனும் கவிஞரைக் காதலித்தார்.

முதல் உலகப்போரின்போது ஆஸ்திரேலியா திரும்பிய அவர், திருமணத்துக்குப் பெற்றோரிடம் அனுமதி பெற்று பாட்ரிக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் அவருக்குக் கிடைக்காததால், பாட்ரிக் வேறு திருமணம் செய்துகொண்டார்.

இதயத்தை நொறுங்கச்செய்த அந்த நிகழ்வுக்குப் பின்னான இசோபெல்லின் கவிதைகள் அனைத்திலும் சோகம் ததும்பி வழிந்தது. இறுதிவரை எழுத்தே அவரது வாழ்க்கைத் துணையாக இருந்தது. உடல்நலக் குறைவால் அவரது வாழ்வின் கடைசி ஏழு ஆண்டுகள் அவர் எதுவும் எழுதவில்லை. எண்ணக் கனவுகளை இலக்கியத்தில் நினைவுகளாகப் பதிவுசெய்த அவரது வாழ்க்கை ஓர் ஆழ்ந்த தூக்கத்தில் முற்றுப்பெற்றது. அவரது 134-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஜூலை 1 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

15.jpg 

சறுக்கிய தலாய் லாமா

திபெத்தியப் புத்த மதத் தலைவரான தலாய் லாமா, 14-வது புத்த மதத் தலைவர். இவரது வயது முதிர்ச்சி, உடல் நலக்குறைவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 15-வது புத்த மதத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். புதிய தலாய் லாமாவாகப் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.

இது குறித்து தலாய் லாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தலாய் லாமா, “ஒரு பெண் தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கவரக் கூடியவராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், அந்தப் பெண் அழகாக இல்லாவிட்டால், அவரைக் காண்பதற்குப் பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். தலாய் லாமாவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுக்க, தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் தலாய் லாமா.

18.jpg 

தந்தை மறைந்தபோதும்…

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - சிலி அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால்தான் டோக்கியோ ஒலிம்பிக் (2020) போட்டிக்குத் தகுதிபெற முடியும் என்பதால் இந்திய வீராங்கனைகள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 19 வயது இளம் வீராங்கனையான லால்ரெம்ஸியாமியின் தந்தை லால்தன்சங்கா 21-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.  தந்தையின் மரணம் குறித்து அறிந்து இடிந்துபோன லால்ரெம்ஸியாமி, டோக்கியோ ஒலிம்பிக் தொடரை மனத்தில் வைத்துத் தாய்நாட்டுக்காகக் கனத்த மனதோடு அரையிறுதியில் தொடர்ந்து விளையாடினார்.

4-2 என்ற கோல் கணக்கில்  சிலியை வென்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், செவ்வாயன்று இந்தியா திரும்பிய லால்ரெம்ஸியாமி மிசோரத்தில் உள்ள தனது கிராமத்துக்குச் சென்றதும் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு கதறி அழுதார். தந்தை இறந்த துக்கத்தைத் தாங்கி நாட்டுக்காகத் தொடர்ந்து விளையாடிய லால்ரெம்ஸியாமிக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

17.jpg 

ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்

பெண்களின் முன்னேறத்துக்கு அரும்பாடுபட்ட சமூக சேவகி ஜெயா அருணாச்சலம், இந்திய உழைக்கும் மகளிர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். பத்மஸ்ரீ விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

வீட்டில் மட்டுமல்லாமல்; வெளியுலகிலும் முன்னின்று வழிநடத்தும் இயல்பைப் பெண்களுக்குள் விதைத்த ஒப்பற்ற தலைவி அவர். அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத பல நலவாழ்வுத் திட்டங்களைத் தனது ‘உழைக்கும் மகளிர் சங்க’த்தின் மூலமாக அவர் நிறைவேற்றினார்.

 லட்சக்கணக்கான ஏழைப் பெண்கள் தன்னிறைவு பெற்று சொந்தக் காலில் நிற்பதற்கு ஜெயாவின் சேவையும் முக்கியக் காரணம். இந்தத் தலைமுறையின் சிறந்த ஆளுமையான ஜெயா அருணாச்சலம் ஜூன் 29 அன்று காலமானார். அவரது மறைவு ஒடுக்கப்பட்ட மகளிர் சமுதாயத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

19.jpg 

டாஸ்மாக்கை மூடப் போராடிய மருத்துவர்

கோவை தடாகம் சாலை கணுவாயைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ். இவருடைய மனைவி ஜூன் 24 அன்று மதியம் இருசக்கர வாகனத்தில் தன் மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். ஆனைக்கட்டி - தடாகம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஜம்புகண்டி அருகே வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் ஷோபனாவின் வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மகள் உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை அறிந்ததும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அந்தப் பகுதியில் இருக்கும் மதுக்கடையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அதை உடனடியாக மூடும்படி ஷோபனாவின் கணவர் ரமேஷ், தன் மனைவியின் சடலத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். மனைவியின் சடலத்தின் அருகில் ரமேஷ் அமர்ந்தபடி இருக்கும் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close