[X] Close

பம்பரமாய் சுத்தி அடிப்பேன்!


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 08:35 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

என்னோட குரு இலவசமாகத்தான் சிலம்பம் கத்துக்கொடுத்தார். அதனால, நானும் இலவசமாகத்தான் சிலம்பம் கத்துக் கொடுக்கறேன். 5 வயசுக் குழந்தையில இருந்து, 84 வயது முதியவர் வரை ஆர்வமாக கத்துக்கிடறாங்க” என்கிறார் கோவையைச் சேர்ந்த சிலம்ப ஆசிரியர் பி.செல்வகுமார் (54).

கோவை புலியகுளம் பகுதியில், சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொதுநல அறக்கட்டளை மூலம் 500-க்கும் மேற்பட்டோருக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுத்துள்ளார் இவர். “பெற்றோர் பெரியசாமி-மணியம்மாள். அப்பா மில் தொழிலாளி. சித்தாபுதூர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தேன். என்னோட 14 வயசுல, மாஸ்டர் குழந்தைசாமிகிட்ட சிலம்பம் கத்துக்கிட்டேன். 2008-ம் ஆண்டு வரைக்கும் அவர்கிட்ட கத்துக்கிட்டுத்தான் இருந்தேன். அதேசமயம், அவரோட மாணவராக இருந்து, மற்றவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்தேன்.

1991-ல மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், பொட்டுவைக்கும் பிரிவுல வெற்றி பெற்றேன். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கிற அளவுக்கு விவரம்போதலை.

2012-ம் ஆண்டு சிலம் பாலயா விளையாட்டுமற்றும் பொது நல அறக்கட்டளையைத் தொடங்கினேன். ஆரம்பத்துல 5 மாணவர்கள் பயிற்சிக்கு வந்தாங்க. இப்ப 140 பேர் பயிற்சி பெறுகின்றனர். இதுவரைக்கும் 500-க்கும் மேற்பட்டோர் சிலம்பப்  பயிற்சி கத்துக்கிட்டிருக்காங்க. எங்க மாஸ்டர் குழந்தைசாமி, காசு வாங்காமத்தான் கத்துக்கொடுத்தாரு. அதனால, நானும் இலவசமாகத்தான் கத்துக்கொடுக்கறேன். தேவையான உபகரணங்கள், கருவிகளும் நாங்களே கொடுக்கறோம். அறக்கட்டளையில் 10 உறுப்பினர் இருக்காங்க. ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, சிலம்ப பயிற்சிக்குத் தேவையான சிலம்பம், கத்தி, சுருள்வாள் எல்லாம் வாங்கி வெச்சிருக்கோம். சில மாணவர்களோட பெற்றோரும் உதவி செய்யறாங்க. வாரத்துல 6 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடக்கும். மாலையில் 5.45 மணியில இருந்து 7.30, 8 மணி வரைக்கும் வகுப்புகள் நடக்கும். போட்டி சமயங்களில் ஞாயிற்றுக்கிழமையும் வகுப்பு நடக்கும். எங்கிட்ட பயிற்சி பெற்ற சரண்ராஜ், அருண்பாண்டியன், கிருஷ்ணகுமார், மேரி பிரியதர்ஷினி, நிவேதா, ஸ்ரீவத்சன், பூஜா, மோனிஷ் ஆகியோர் நாகர்கோவிலில் நடந்த ஆசிய சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர், நேபாள் வீரர்கள் கலந்துக்கிட்டாங்க. வரும் அக்டோபர் மாதம் மலேசியாவுல நடக்கற சர்வதேச சிலம்பப் போட்டியில இந்த 8 பேரும் கலந்துக்கப் போறாங்க.

அதேபோல, 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தேசிய அளவிலான போட்டியில வெற்றி பெற்றிருக்காங்க. மாவட்ட, மாநில அளவிலும் நிறைய பேர் வெற்றி பெற்றனர். மாஸ்டர் குழந்தைசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துட்டாரு. அவரோட நினைவாக மகாகுரு குழந்தைசாமி நினைவு சுழற்கோப்பைக்கான  சிலம்பாட்டப் போட்டியை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திக்கிட்டு வர்றோம். இந்த வருஷம் நடந்த போட்டியில 400 பேர் கலந்துக்கிட்டாங்க.

மாணவ, மாணவிகளுக்கு ஒற்றைச் சிலம்பம், இரட்டைச் சிலம்பம், நெருப்புச் சிலம்பம், சுருள்வாள் வீச்சு, வேல் கம்பு வீச்சு, வாள் வீச்சு, மான் கொம்பு பயிற்சிகளை அளிக்கிறோம். மல்யுத்தம் கற்றுத் தரவும் முயற்சி செஞ்சிக்கிட்டு வர்றோம். 5 வயது முதல் 84 வயது முதியவர் வரையில்  சிலம்பம் கத்துக்கிட்டாங்க. குழந்தைகளை பயிற்சிக்கு விட வந்த பெண்களும், ஒருகட்டத்துல பயிற்சி எடுத்துக்கிட்டாங்க.

கோவையைப் பொறுத்தவரைக்கும், சிலம்பாட்டம் கத்துக்கொடுக்க சரியான மைதானம் கிடையாது. மாநகர காவல் சிறுவர், சிறுமியர் மன்றத்துக்குச் சொந்தமாக, புலியகுளம் பகுதியில இருக்கற மைதானத்துலதான் இப்ப சிலம்பாட்டப் பயிற்சி கத்துக் கொடுக்கறேன். மாநகராட்சி சார்பில், சிலம்பாட்டப் பயிற்சிக்கு தனி மைதானம் ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும். எங்கேயாவது ஒரு இடம் வாங்கி, நிரந்தர  சிலம்பப் பயிற்சி மையம் தொடங்க வேண்டும்ங்கறதுதான் என்னோட லட்சியம்.

நம்ம பாரம்பரிய விளையாட்டான  சிலம்பப் பயிற்சி, உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமில்லாம, தன்னம்பிக்கை, தைரியத்தையும் கொடுக்கும். மன அழுத்தம் குறைந்து, முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.  இப்பவெல்லாம் மாணவ, மாணவிகள்கூட, மணிக்கணக்குல செல்போன் பயன்படுத்தறாங்க. இது ரொம்ப ஆபத்தானது. எங்க பயிற்சி மையத்துல செல்போன் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். நோய் அண்டாத தலைமுறையை உருவாக்க, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் அவசியம்.

நிலக்கடலை  உருண்டை...

பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் பிறந்த நாளை கொண்டாடுவோம். ஆனா, நிலக்கடலை உருண்டை போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களைத்தான் கொடுப்போம். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியில இருந்து 6 மணி வரைக்கும், அவங்க அவங்களுக்குப் பிடிச்ச விளையாட்டு விளையாடலாம். பொங்கல் பண்டிகைக்கு 108 மண் பானைகள்ல பொங்கல் வெச்சி கொண்டாடுவோம்.

1985 முதல் 1995-ம் ஆண்டு வரை பவுண்டரி தொழிற்கூடத்துல மோல்டராக வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அலுவலகப் பணியாளராக வேலை செய்யறேன். மனைவிசுதாவோட ஒத்துழைப்புதான், இத்தனை மாணவர்களுக்கு சிலம்பம் கத்துக்கொடுக்க ஊக்கமளிக்குது. பசங்க சரண்ராஜ்,ரஞ்சித்குமாரும், சிலம்பம் கத்துக்கொடுக்கறாங்க” என்றார் செல்வகுமார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close