[X] Close

அகிலன் எழுத்தில் வலிமை; நேர்மை!


writer-akilan-birthday

எழுத்தாளர் அகிலன்

  • kamadenu
  • Posted: 27 Jun, 2018 11:46 am
  • அ+ அ-

- அகிலன் கண்ணன்

இன்று ( 27.6. 2018 ) அகிலனின் 96-வது பிறந்தநாள். 

பிரபல  தமிழ் நாவலாசிரியர், ஞானபீட பரிசு பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களைப் பற்றி -  அவரின் மகன், எழுத்தாளர் அகிலன் கண்ணனின் நினைவுப் பக்கங்கள்!

தந்தையாக நான் உணர்ந்த அகிலன் :

குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் சமமாகத் தன்  அன்பைப் பகிர்ந்தார் அகிலன் .  தனக்கெனத் தனித்  தேவைகளை பெரிய அளவில் எதிர்பார்த்ததில்லை.  தனக்கென்ற தனி இடத்தை - குடும்பத்தலைவன் , எழுத்தாளன் என்ற நிலையில் - ஆதிக்கம் செலுத்தாதவர் .

இயல்பாக வலம் வந்தவர். எளிமையை , தூய்மையை , வாய்மையை தமது செயல்களின் வழியிலேயே  எங்களுக்கு அவற்றை ஊட்டியவர் .  சின்னச் சின்ன விஷயங்களில் ஒழுங்கைக் கடைப்பிடித்து எம்மையும் அவ் வழியில் பயணிக்கத் தூண்டியவர் .

இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழப் பழக்கினார்.  பிறந்தநாள் , பண்டிகை நாட்களுக்கு அவரவர்களிடம் பணத்தைக் கொடுத்து அவரவருக்குப் பிடித்த உடைகளை அவர்களைக் கொண்டே வாங்கிக் கொள்ளச் செய்த குணம், வியப்பானது.  ஆனால் , எனது தேர்வை விட அவர்களது ரசனைத் தேர்வு சிறப்பாக  அமையும் . வெளிநாடு , மாநிலங்கள் சென்று திரும்பும்போது அவர்கள் தேர்வு செய்து கொண்டு வந்து தரும் உடைகளின் வண்ணம் , அமைப்பு சிறப்பாக அமைவதைக் கண்டு உளம் மகிழ்ந்த நிகழ்வுகள் பலப் பல. 

எனது பள்ளியிறுதிச் சமயம் . " மத்தாப்பு " ( விசிட்டர் அனந்த் நடத்திய இதழ் ) , " கண்ணன் " ( ஆர்.வி யை ஆசிரியராகக் கொண்டு கலைமகள் நிறுவனம் நடத்தியது ) இதழ்களில் நான் கதைகள் எழுதி வந்துள்ளேன் . ஒருநாள் காலை என்னிடம்  ஐயா ( அப்பாவை எப்போதும் நாங்கள் அப்படித்தான் அழைப்போம் ) " கண்ணா ! இன்னிக்கு மதியத்திற்கு மேல் பள்ளி செல்லலாம் ; காலையில் விகடனில் இருந்து வர்றாங்க. நீ வீட்டிலேயே இரு "என்றார் . சரி , வேறேதும் வேலையிருக்கும் போல என்று நான் மகிழ்வுடன் இசைந்தேன் . திடீரென  விடுமுறை கிடைத்தால் யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது ? 

 பத்து மணி வாக்கில் வந்தார்கள் . ஐயாவின்  அறையில்  சிறிது நேரம் பேசியபின் , " கண்ணா , இங்கே வா ! " என்று அழைத்தார் ஐயா . நான் சென்றேன் . வணக்கம் சொன்னேன் . " இவங்க ஆனந்த விகடன்லேர்ந்து வந்திருக்காங்க . இவர் ராவ் ; உடன் வந்துள்ள , புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரத்தை உனக்குத் தெரிஞ்சிருக்கும் " என்றவர் ,  அவர்களிடம்  என்னைச் சுட்டிக்காட்டி , " இவன்தான் என் மகன் - கதை எழுதும் கண்ணன் !   உன்னைத்தான் பேட்டி காணப் போறாங்கப்பா  " என்று கூறி என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு ஆனந்த அதிர்ச்சி ! 

அட ஏதோ ஆசைக்கு எழுதிக்கிட்டிருக்கோம் ...திரு.ராவ் என்னிடம் சில பல கேள்விகள் கேட்டார் . ஐயாவின் நாற்காலியிலேயே என்னை அமரச் சொல்லி , எழுதட்டையையும் வெண் தாளையும்   கொடுத்து   அவற்றை  அவர்கள் எழுதும் அந்த மேஜை மேலேயே வைத்து என்னையும் எழுதப் பணித்து விட்டு ,  ஐயா வீட்டின் உள் அறைக்குள்   சென்று விட்டார்கள் ! 

திரு .சுந்தரம் படமெடுக்க , திரு.ராவ் என்னை இயல்புலகிற்கு அழைத்து வந்தார் . " புலிக்குப் பிறந்தது ..."என்ற தலைப்பில் . டென்னிஸ் கிருஷ்ணனின் மகன் , திருச்சி லோகநாதனின் மகன் , என அந்தப் பகுதி வந்தது . ஐயா  இப்படிச் சொன்ன நினைவு எனக்கு : " கண்ணன் இப்பவே எழுதணும்னு ஆரம்பிக்கிறான் . நல்லாத்தான் எழுதறான் . ஆனா  என்ன, முதல்ல படிப்பைக் கவனிக்கணும் ; பிறகு எழுத்தில் ஈடுபடலாம் " 

 வேறென்ன வேண்டும் எனக்கு . இதுவே எனக்குப் போதும் ! 

வெற்றி தோல்விகளைப் பெரிய அளவில் கொண்டாடியதோ , வருத்தப்பட்டதோ இல்லை . ஒரு சமயம் எமது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு சென்னைக்குக் கொண்டுவந்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது . ஒருமாதச்  சிகிச்சை பலனின்றி  அந்தக்  குழந்தை இறந்துவிட்டது . அப்போது நான் பள்ளிப் பாலகன் . பெரிதும் வருத்தம் அடைந்த நிலையில் இருந்தேன் . அப்போது ஐயா , " கண்ணா ! பொதுவா சில பேர், ' அன்பு வை ; பாசம் வைக்காதே ' ன்னு சொல்லுவாங்க . ஆனா , அப்பிடிக் கோடு போட்டுப் பிரிச்சு வாழ்க்கையை  வாழ முடியாது .  நிகழ்வதை  நிதானமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும் ..." என்று கூறி , ஆற்றுப்படுத்தினார் . 

அகிலனிடம்  புரியாத விஷயங்கள்  :

சுற்றுப்புறச் சூழல் , மனிதர்கள், அவர்களின் நடையுடை பாவனைகள் , உள் மனப் போக்குகள் இவற்றை மிக நுட்பமாகக் கவனித்துத் தம் படைப்புகளில் மிக இயல்பாகப் படைக்கும் திறன் . - இவர் எப்படி இதையெல்லாம் கவனிக்கிறார் , நாமும்தான் இவற்றைப் பார்க்கிறோமே...  நமக்குப் புலப் படாதது இவருக்குப் புலப்படுகிறது . எப்படிக் கவனிக்கிறார் இவற்றை என்பது புரியாத புதிர்தான் . நானெல்லாம் தெருவில் போக , வர ஒரு இயற்கை அழகைக் கண்டுவிட்டால் அங்கேயே அதுபற்றிப் பேச ஆரம்பித்துவிடுபவன் . அதே சமயம் என் கண்களுக்குப் படாதது அவர் கண்களுக்குப் படுகிறது !  இதுதான் உண்மையான படைப்பாளியின் நோக்கு நிலையோ ?

புற  உலகில் அகிலன் 

பார்வைக்கு எளிமை ; ஆனால் அதே சமயம் தம் எழுத்தில் உறுதி . அன்பின் வலிமை உணர்ந்த செயல்கள் . மனித மேன்மை பற்றிய சிந்தனை , எழுத்து ,  செயல். அறிவின் கூர்மை ; எழுத்தில் தொலைநோக்கு . சக மனிதனிடம் அன்பும் , நேயமும் மரியாதையும் . எழுத்தை உண்மையின் ஆயுதமாகக் கொண்ட பேனா அகிலனுடையது .

சிறுகதை , குறுநாவல் , நாவல் , கட்டுரை எந்த வகையாக இருந்தாலும் பாசாங்கற்ற எளிமை இருக்கும். அழகு மிளிரும்.  அதேசமயம் ஆழமான  பாய்ச்சல் கொண்ட  கருத்துக்கள்  அடர்த்தியாக அமைந்திருக்கும். 

 வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதை எழுதுவது எழுத்தாளனாகிய எனது வேலையல்ல ; எது வாசகருக்குப்  பிடிக்கவேண்டும்,  என நான்  விரும்புகிறேனோ அதை எழுதுவதே என் வேலை . " 

உருவத்திலும் சரி , உள்ளடக்கத்திலும் சரி விட்டுக்கொடுக்கும் சமரசம் இல்லாத ஒரு  " எளிய " படைப்பாளி அகிலன் . 

அவரது முதல் படைப்பான " அவன் ஏழை " என்ற சிறுகதை முதல் , இறுதிப் படைப்பான " வானமா பூமியா ? " நாவல் வரை  சக மனிதனின் வாழ்நிலைப் பிரதிபலிப்பும் அந்தந்தச் சிக்கல்களுக்கு தான் சரியென நினைக்கும் தீர்வையும் மெலிதான  - ஏற்கும் குரலில் வாசகருக்கு அளித்த தனிச் சிறப்பு அகிலனுக்கு உண்டு எனக் கருதுகிறேன் .

 எந்தப் பத்திரிகைக்காகவும் தனது கொள்கையையோ , கருத்தையோ சமரசம் செய்யாமல் அவர் எழுதியதாலேயே அவரது எழுத்து இன்றும் பல நிலை  வாசகர்களைச்  சென்றடைகிறது .  ஒரு படைப்பு ஒரு வாசகரை , அதைப் படிக்குமுன் உள்ள நிலையிலிருந்து ஒரு படியாவது  மேலுயர்த்தியிருக்க வேண்டும் . அதுவே அந்த எழுத்தின் வெற்றி என்கிறார் அகிலன் . அந்த வெற்றியைத் தமது படைப்புக்களின் வழி வாசகருக்கு வழங்கினார்.

சரித்திர நாவலிலும் சமகாலப் போக்கின் நிலைக்கு வடிகால் வெட்டியுள்ளார் அகிலன் . வேங்கையின் மைந்தன் ராஜேந்திர சோழனை மட்டுமா நமக்குக் காட்டுகிறது ? - ' ஒற்றுமை கெட்ட குலம் தமிழ்க் குலம் !' எனும் கடிந்த சொல் நம்மை நாமே உள்நோக்கிப் பார்த்துப் பாதை மாற்றிப் பயணிக்கத் தூண்டுகிறதல்லவா ?  ' ஒற்றுமை ' எனும் உயர்ந்த பண்பின் வலிமையை நமக்கு உணர்த்துவதால் தானே இப்போது மக்கள் எழுச்சி வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருகிறது ! 

எந்த மேடையையும் தனதாக்கிக் கொண்ட ஆளுமை அவரது எழுத்துக்கு இருப்பதால் அவரது எழுத்தால் விமர்சனம் கொண்ட தலைவர்கள் கூட அகிலனைப் புறந்தள்ள இயலவில்லை . அகிலனின் எழுத்தின் உண்மை அவர்களைச் சுட்டது . எனினும் அகிலனைப் போற்றவே செய்தனர் அவர்கள் . தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவைச் ஊடுபாவகத்  தம் படைப்புக்களில்  நெய்தவர்  இவர் .

' வெகுஜன எழுத்தாளர் ' என்று சில ' விமர்சகப் புலி'களால் பட்டியிலடப் பெறுவதுமுண்டு அகிலன் . அதற்கு உடனே வரிந்து கட்டிக்கொண்டு பதில் கூறிக் கொண்டும் இருந்த அகிலனை கி.வா .ஜ தோள் அணைத்துக் கூறினார் இப்படி :

" அகிலன் ! நீங்கள் இவர்களுக்குப் பதில் கூறிப் பொழுதை வீணாக்க வேண்டாம் ; அதற்குப் பதில் வேறொரு புதிய படைப்பை எழுதுங்கள் . காலம் பதில் சொல்லும் -  விமர்சித்தவர்  எங்கே - படைத்தவர் எங்கே என்று . " அந்த நல்லாசான் கூறியதை அப்படியே பின்பற்றினார் அகிலன் .

சித்திரப் பாவை வழி பெண்ணிய நோக்கிற்குப் புதுப் பாதையை வகுத்தவர் அன்றோ அகிலன் !  தமது சிறுகதைகளின் வழி பல்நிலை மக்களின்அகப் புறப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளும் கலையழகுடன் தந்தார்.  

இன்றும் அகிலனின் படைப்புகள் வாசகர்களிடம் மதிப்பையும் போற்றுதலையும் பெற்றுவருவதே இதற்கு சாட்சி .

பதிப்புக்கள் பல கண்டும் , மொழியாக்கம் இன்றும் கொண்டும் அடுத்த தலைமுறைக்குப் பாட நூல்களாகவும் அகிலனின் படைப்புக்கள் உலாவருவதற்குக் காரணம்... அந்த சமூக அக்கறை கொண்ட எளிய தமிழ்ப் படைப்பாளியின் எழுத்தின் வலிமையும் எழுத்தினுள்ளே இருக்கும் நேர்மையும்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close