[X] Close

லீ இயாகோக்கா - சுயசரிதம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 07:48 am
  • அ+ அ-

சுப .மீனாட்சி சுந்தரம்

ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திய லீ இயாகோக்கா சுயசரிதம்தான், Lee Iacocca -An Autobiography என்ற புத்தகம்.

இத்தாலியில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர் லிடோ அந்தோணி இயாகோக்கா. மிகவும் அன்பான, அமைதியான குடும்ப சூழலில் வளர்ந்தவர் .

லீ ஹை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, பின்னர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்குப் பின்  ஃபோர்டு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். 9 மாத கால மாணவப்பொறியாளர் பயிற்சிக்குப் பின்னர் விற்பனைப் பிரிவில் சேர முடிவு செய்தார். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாவட்ட விற்பனைப் பிரிவில் வேலை கிடைத்தது.

 1956-ல்  ஃபோர்டு கார் விற்பனை வெகுவாக குறைந்தபோது 20% முன்பணம் கொடுத்து பின்னர்  மூன்று வருட மாதாந்திர தவணையில் கார்களை விற்றார். இந்த திட்டத்தால் மூன்றே மாதத்தில் பிலடெல்பியா விற்பனை மாவட்டம் கடைசி இடத்திலிருந்து முதலிடத்துக்கு வந்தது. வாஷிங்டனின் மாவட்ட மேலாளராக பதவி உயர்வு பெற்றார். 36 வயதிலேயே உலகின் இரண்டாவது பெரிய நிறுவனத்தில் ஜெனரல் மானேஜராக இருந்தார் இயாகோக்கா.

 ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் தலைமை அதிகாரியாக  1960-ல் உயர்ந்தார். அவரது குழு அந்த காலத்தில் மிகச்சிறந்த கார் என பிரபலம் அடைந்திருந்த மஸ்டாங் (MUSTANG) காரை வடிவமைத்து விற்பனையில் பல சாதனைகள் புரிந்தது. இயாகோக்கா மஸ்டாங் காரின் தந்தை என வர்ணிக்கப்பட்டார்.

 பத்து வருடத்துக்கு பிறகு ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் தலைவராக  உயர்ந்தார். நிறுவன முதலாளியான ஹென்றிஃபோர்டு II வுக்கும் இயாகோக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1978-ல் அவரது 54-வது பிறந்தநாள் அன்று பணி நீக்கம்  செய்யப்பட்டார்.

 ஃபோர்டில் இருந்து வெளியேறிய நேரத்தில் ஒரு வேர்ஹவுஸை நிர்வாகிக்கும் பொறுப்பு கிட்டியது. சில மணி நேரமே அங்கு இருந்த அவர் தமக்கு உரிய இடம் இதுவல்ல என்பதை உணர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் கிரிஸ்லர் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. பணப் பற்றாக்குறை, ஊழியர்கள் ஊக்கமின்மை, ஒழுக்கமின்மை, தரக்குறைவான பொருள்கள் உற்பத்தி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை இழப்பு, குறைந்துகொண்டே போகும் விற்பனை என எல்லா விதமான பிரச்சினைகளையும்  எதிர்கொண்டிருந்தது கிரிஸ்லர். இயாக்கோக்கா கிரிஸ்லர் நிறுவனத்தில் சேரும் நாளில் அன்றைய தினம் தனது லாப நட்டக் கணக்கு அறிக்கையில் 160 மில்லியன் டாலர்கள்  நஷ்டம் என செய்தித்தாள்களில் அறிவித்திருந்தது.

நிறுவனத்தைப் பழுது பார்க்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினார் இயாகோக்கா.  சில ஆலைகள் மூடப்பட்டன.  உதிரிபாகங்களை குவித்து வைக்காமல் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை தேவைப்படும் நேரத்தில், தேவையான அளவு மட்டுமே பெறும் முறையை (JUST IN TIME –JIT) அறிமுகப்படுத்தி கார் உற்பத்தியில் மிகப்பெரும் மாறுதலை உருவாக்கினார்.

அடுத்தாற்போல செலவுகளைக் கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்கும் நடவடிக்கைகளை எடுத்தார். கம்பெனிக்கு சொந்தமான சில நிலங்களையும்  தொழிற்சாலைகளையும் விற்க வேண்டியிருந்தது செலவை குறைக்கும் முயற்சியில் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ஆட்குறைப்பு நடவடிக்கை. 1980 ஏப்ரல் மாதத்தில் 7,500 பேரை தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கி அதன் மூலம் பல மில்லியன் டாலர்கள் மிச்சப்படுத்தப்பட்டன.  பெரிய நிறுவனங்களை நடத்தும் போது தேவைக்குத் தகுந்த அளவில் மட்டுமே ஊழியர்களை அமர்த்த வேண்டும்  என்பதை உணர்ந்து கொண்டிருந்தார்.

இத்தனை பகீரதப் பிரயத்னங்களுக்குப் பின்னரும் கிரிஸ்லர் எழும்புவதாக இல்லை. கடைசி முயற்சியாக அரசாங்கத்தை அணுகினார். அரசாங்கத்திடம் கடன் உத்திரவாதம் கேட்டபோது  தேசிய உற்பத்தியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. வர்த்தக வட்ட மேசையில் கிரிஸ்லர்  தனது வாதங்களை எடுத்துச் சொன்னது. “ஒரு வேளை கிரிஸ்லர்  மூடப்பட்டால் உள்நாட்டு உற்பத்தி குறைந்து ஜப்பானிலிருந்து கார்கள் இறக்குமதி ஆகும். உள்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும். வேலையிழந்த ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்த தொகையாக  அரசு செலவிடப்போகும் தொகை சுமார்2.7 மில்லியன் டாலர் . இவ்வளவு தொகை செலவு செய்வது புத்திசாலித்தனமா அல்லது அதில் பாதியை கடன் உத்திரவாதமாக தந்து கொஞ்ச காலத்தில் அந்தப் பணத்தைப் பெறுவது புத்திசாலித்தனமா” என்ற இயாகோக்காவின் கேள்வி அரசாங்கத்தை சிந்திக்க வைத்தது.

காங்கிரசில் இந்த விவகாரம் வாக்கெடுப்புக்கு வந்தபோது இதற்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்தது ஏகப்பட்ட நிபந்தனைகளோடு 1.5 பில்லியன் டாலர்கள் கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டது .

இதையடுத்து இயாகோக்கா தனது வருட சம்பளத்தை ஒரு டாலர் என குறைத்துக்கொண்டார்.  உயர்மட்ட அதிகாரிகள் சம்பளத்தில் 10 சதவீதத்தை குறைத்தார். அதுவரை  அமெரிக்காவின் ஆட்டோமொபைல் தொழில் துறையில் கண்டும் கேட்டுமிராத நடவடிக்கையாக அது அமைந்தது. கீழ்மட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் குறைப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என  பலதரப்பட்ட மக்களும் இயாகோக்கா வின் முயற்சியைப் பாராட்டி அவருக்கு  உதவிக்கரங்கள் நீட்டினர். பிரபல நடிகர் பாப் ஹோப் இலவசமாக சில வர்த்தக விளம்பரங்களை கிரிஸ்லருக்கு செய்து தந்தார்.

1980-ம் ஆண்டில் கிரிஸ்லரின் எல்லா தொழிற்சாலைக்கும் நேரில் சென்று நிறுவனத்தின் நிலைமையை ஊழியர்களுக்கு எடுத்துச் சொன்னார். தொழிற்சங்கத் தலைவர் டக் பிரேசரை கம்பெனி இயக்குநர்களில் ஒருவராக நியமித்தது மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நிறுவனத்தை காப்பாற்ற நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் உண்மையானவை என்றும் வரவு செலவு கணக்குகளில் உள்ள வெளிப்படைத்தன்மை பிரேசரால்  உணர்ந்து கொள்ள முடிந்தது .

பணப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டபின் கார் உற்பத்தியில் கவனம் செலுத்தினார். எரிபொருள் சிக்கனமான  சிறிய அழகிய வடிவ  K காரை தயாரிக்க வேண்டும் என்பது போர்டு காலத்திலிருந்தே இயாகோக்காவின் சிந்தனை. ஒரு கேலன் பெட்ரோலுக்கு 25 மைல்கள் போகக்கூடிய கிரிஸ்லரின் கே காரில் 6 பேர் பயணிக்க முடியும் . ஆனாலும் பவர் விண்டோ, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஏர்கண்டிஷன் வசதிகளுடன் விலை  சற்று கூடுதலாக இருந்ததால் பெருமளவில் இந்த காருக்கு வரவேற்பு இல்லை.

 இவ்வளவு விலை கொடுப்பதற்கு பதிலாக பேசிக் மாடல் கார்களே போதும் என்று ஷோரூமுக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்தது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு பேசிக் மாடல் கே கார்களை உற்பத்தி செய்தது கிரிஸ்லர். விற்பனை உயரும் நேரத்தில் தவணை வட்டி விகிதம் அதிகமானது. 13.5% ஆக இருந்த வட்டி 18.5% ஆக உயர்ந்ததால் தவணை முறையில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தயங்கினர். எனவே தவணை முறையில் வாங்கக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு முதலில் இருந்த 13 .5% வட்டிக்கும்  தற்போதுள்ள வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை திருப்பித் தருவதாக ஒரு புதுமையான உத்தியை கையாண்டனர். விற்பனை உயர்ந்து கார் சந்தையில் கிரிஸ்லரின் மார்க்கெட் ஷேர் 20% அளவை எட்டியது.

 1983-ல் கிரிஸ்லர் வெற்றிப் பாதையில் பீடு நடை போட்டது. இயாகோக்காவின்  நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளால் புத்துயிர் பெற்ற கிரிஸ்லரின் வெற்றிக் கதைகள் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு இயாகோக்கா போட்டியிடப் போவதாக செய்திகள் வலம் வந்தன.

அவ்வாண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு ஷேர்களை வெளியிடும் போது 26 மில்லியன் பங்குகள் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் 432 பில்லியன் டாலர்களை திரட்டி மூன்றாவது மிகப்பெரிய பங்குச் சந்தை விற்பனை என்றது அமெரிக்க வரலாறு.

அதே ஆண்டில் ஜூலை 13-ம் தேதி பத்திரிகையாளர் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு, ஏழு வருடங்களுக்கு முன்னதாகவே கிரிஸ்லரின் முழுக் கடனையும் அடைப்பதாக இயாகோக்கா அறிவித்தார். நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 81,34,87,500 டாலர்களுக்கு ஒரே செக்காக வழங்கி கடனை அடைத்தார்.

ஒரு நிறுவனம் எப்படி எல்லாம் நடத்தப்படக் கூடாதோ  அப்படியெல்லாம் கிரிஸ்லர் நிர்வாகத்தில் நடந்தது. அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்த இயாகோக்கா ஆட்டோமொபைல் தொழில் உலகில் ஒரு நிஜக் கதாநாயகன்தான்.

வளர்ந்து கொண்டிருக்கும்  மேலாளர்களுக்கும், மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த புத்தகம் ஒரு நிர்வாகக் கையேடு எனலாம். வெளியாகி 35 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் விற்றுக் கொண்டிருக்கிறது. பல மேலாண்மை கல்லூரிகளில் பாடமாகவும் இருக்கும் இதனை ஆட்டோமொபைல் தொழிற்சாலை நிர்வாகத்துக்கான பைபிள் எனவும் சொல்லலாம்.

தொடர்புக்கு: somasmen@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close