[X] Close

மண்ணை பொன்னாக்கும் பரிசோதனை! - முக்கியத்துவம் மிகுந்த மண் வள அட்டை


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 16:31 pm
  • அ+ அ-

-த.சத்தியசீலன்

மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள், தங்களது விளைநிலத்தின் மண் வளம், தன்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். எந்த வகையான தானியங்களைப் பயிர் செய்ய முடியும், என்ன வகையான உரமும், ஊட்டச்சத்தும் மண்ணுக்குத் தேவைப்படுகிறது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

மண் அரிப்பு, மண் வளம் குறைதல் போன்றவற்றை அறிய மண் பரிசோதனை மிகவும்  அவசியமானதாகும். பயிர் அறுவடைக்குப் பிறகும், மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் வளத்தை அறிந்துகொள்ளலாம்.

அதேபோல, மண் பரிசோதனையால் தேவைக்கு அதிகமான உரமிடுதலையும் தடுக்க முடியும். அதிகம் வருவாய் தரக்கூடிய பயிர்களை தேர்வுசெய்து,  சிறப்பாக விவசாயம் செய்ய முடியும் என்கின்றனர் வேளாண்மைத் துறையினர். இது தொடர்பாக வேளாண் துறை அலுவலர்களிடம் பேசினோம்.

“விவசாயிகளின் நலன், மண்ணின் வளத்தைப்  பொறுத்தே அமைகிறது. பயிர் சாகுபடியில்,  சத்துக் குறைபாடுகளை சரியான உர நிர்வாகம் மூலம் சரிசெய்யலாம். அதற்கு, மண் பரிசோதனை அடிப்படையாகும். சத்துகளின் அளவு வேறுபடுவதாலும், தேவை மாறுபடுவதாலும், மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ற உரப் பரிந்துரையை  வழங்க முடியும்.

அதன்மூலம் தேவையான அளவு மட்டுமே உரமிடுவதால், குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதுடன், அதிகப்படியான உரச் செலவையும் குறைக்கலாம். மண்ணின் தன்மைகளை அறியவும், களர், உவர், அமில நிலங்களை சீர்திருத்தவும், பயிருக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளின் அளவை அறிந்து,  அதற்கேற்ப உரமிடவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மண் மாதிரிகள் எடுத்து, ஆய்வு செய்ய வேண்டும்.நெல், சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களை சாகுபடி செய்ய,  அந்த நிலத்தில் 15 செ.மீ. ஆழத்திலும், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு 30 செ.மீ. ஆழத்திலும், பழத் தோட்டப் பயிர்களுக்கு 3 அடி ஆழத்திலும், மேல் மண்ணைத் தவிர்த்து விடாமல் `வி’ வடிவில் நிலத்தை வெட்டி, சரிவு மண்ணை அப்புறப்படுத்திய பின்,  மீண்டும் ‘வி’ வடிவில் மேலிருந்து மண்ணைச் சுரண்டி எடுக்க வேண்டும்.

ஒரு வயலில் சுமார் 10 முதல் 12 இடங்களில் மண் எடுத்து, நன்கு கலக்கி, குவாட்டரிங் முறையில் அரை கிலோ வரும்படி ஒரு துணிப்பையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சேகரித்த மண் மாதிரிகளை தனித்தனியாக கட்டி, சுத்தமான துணிப்பைகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ போட்டு, உரிய அடையாளமிட்டு, விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் பெயர், சர்வே எண், அடையாளம், வட்டாரத்தின் பெயர், உர சிபாரிசு கோரப்படும் பயிர், பாசன நீரின் தன்மை, முன் சாகுபடி செய்த பயிர் போன்ற விவரங்களுடன் மண் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.

iannai.jpg 

விவசாயிகள் சரியான தருணத்தில் மண் பரிசோதனை செய்து, மண்வள அட்டை பெற்றுக்  கொள்ள வேண்டும். அதில் பரிந்துரைத்துள்ளபடி உரமிட்டு, அதிக மகசூல் பெறலாம்”  என்றனர்.

வேளாண் துறை இணை இயக்குநர் எஸ்.பானுமதி கூறும்போது, “மண் வளமே விவசாயிகளின் நலம் என்ற உயரிய நோக்குடன், மண் பரிசோதனை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகள், நன்மை தரும் நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் ஆகியவற்றைக் கொண்டே மண் வளம் நிர்ணயிக்கப்படுகிறது.

இவை சரியான அளவில் இருந்தால் மட்டுமே, மண்ணில் ஜீவன் உள்ளதாக கருதப்படும். இத்தகைய மண்ணில் மட்டுமே அங்ககச்சத்து அதிகரித்துக் காணப்படுவதுடன், இதில் விளையும் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்து, விவசாயிகளுக்கு நிலையான வருமான கிடைக்கும்.

உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், தீவிரப் பயிர் சாகுபடியில் அளவுக்கு அதிகமான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மண் உயிரற்றதாகிறது.

இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களின் வளர்ச்சி குறைந்து,  பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மண் மாசுபடுதல், மாறி  வரும் பருவ நிலைகளின் விளைவுகள் போன்றவற்றால் 1980-ல் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச் சத்து, 2013-14-ல் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது.

எனவே, விளைநிலங்களின் மண்வள நிலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிந்து, பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதன் மூலமும் இழந்த மண் வளத்தை மீட்கவும், பாதுகாக்கவும் முடியும். தமிழகத்தில் மண்வள அட்டை வழங்கும் திட்டம் 2015-16-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புவியியல் விவரங்கள், பயிருக்கேற்ற உரப் பரிந்துரைகள் மண் வள அட்டையில் இடம்பெற்றிருக்கும். இறவை சாகுபடி பரப்பில் 2.5 ஹெக்டேரில் ஒருமுறையும், மானாவாரி பயிர் சாகுபடி பரப்பில் 10 ஹெக்டேருக்கு ஒருமுறையும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தி, அதனடிப்படையில் பயிருக்கேற்ற உரப் பரிந்துரையுடன் கூடிய மண்வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி,  கடந்த 2015-16-ல் 39,764, 2016-17-ல் 77,049, 2017-18-ல் 63,699, 2018-19-ல் 53,114 மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உரச் செலவைக் குறைத்து, உர விரயத்தை தவிர்த்து, விளை நிலங்களின் மண்வளத்தைப் பேணுவதில்  பெரும் பங்காற்றும் மண் வள அட்டைகளை,  விவசாயிகள் முழுமையாக உபயோகித்து, பயனடைய வேண்டும்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close