[X] Close

கதை: பறவை விஞ்ஞானி!


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 12:07 pm
  • அ+ அ-

-கொ.மா.கோதண்டம்

அடர்வனத்தின் பெரிய ஆலமரக் கிளையில் தாய்ப் பறவை அருகில் குஞ்சுப் பறவை இருந்தது. வாயை ’ஆ’ என்று திறக்கச் சொல்லி உணவு ஊட்டிக்கொண்டிருந்தது தாய். திடீரென்று குஞ்சு நிலை தடுமாறி புல் தரையில் விழுந்துவிட்டது. வலியில் துடித்த குஞ்சுப் பறவை ‘க்யா க்யா’ என்று கத்தியது.

சத்தம் கேட்டு ஆதிவாசிச் சிறுவன் நீலன் ஓடிவந்தான். குஞ்சைப் பத்திரமாக எடுத்து, மரம் மீது ஏறி, தாய்க்கு அருகில் வைத்துவிட்டு இறங்கிச் சென்றான்.

“அம்மா, இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள். நம்மைப் பிடித்துச் சமைத்துவிடுவார்கள் என்று அப்பா சொன்னார். ஆனால் இந்த அண்ணன் என்னைப் பத்திரமாக இங்கே விட்டு விட்டாரே” என்று ஆச்சரியத்துடன் கேட்டது குஞ்சுப் பறவை.

“என் செல்லக் குஞ்சே, இந்தச் சிறுவன் காட்டைச் சேர்ந்தவன். எந்த உயிருக்கும் கெடுதல் நினைக்காதவன். எல்லோருக்கும் ஓடிவந்து உதவுவான். இவன் பேரு நீலன்” என்றது தாய்ப் பறவை.

”அம்மா, எனக்கு ஒரு சந்தேகம்.”

“சொல்லுடா செல்லம்.”

“எல்லாப் பறவைகளும் கூடுகளை மேலே பார்த்துக் கட்டுகின்றன. அப்பா மட்டும் கீழே பார்த்து தொங்கிட்டு இருக்குற மாதிரி கட்டியிருக்காரே, ஏன்?”

“இந்த வயசிலேயே உனக்கு எவ்வளவு அறிவுடா! எல்லாம் உன் பாதுகாப்புக்காகத்தான் இப்படிக் கட்டியிருக்கோம்.”

”முட்டை இடுவதற்கு முன்பே கூடு கட்டினாலும் இப்போதும் இந்தக் கூட்டில் நாரை வைத்து ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்காரே அப்பா, ஏன்?”

“முட்டையாக இருந்தபோது சிறிது இடமே போதும். இப்போது குஞ்சாக வந்து, இவ்வளவு கேள்விகள் கேட்கும்போது கூட்டை இன்னும் பெரிதாக மாற்ற வேண்டாமா? அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார் உன் அப்பா.”

“இவ்வளவு செய்கிறவர், நம் கூட்டை ஏன் இருட்டாகவே வைத்திருக்கார்?”

“அவசரப்படாதே. அப்பா வேலையை முடித்தவுடன் நான் கம்மாயிலிருந்து களிமண் கொண்டுவந்து கூட்டில் வைப்பேன். இரவில் வரும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து, களிமண்ணில் ஒட்டி வைத்துவிடுவேன். பிறகு கூட்டில் எப்போதுமே வெளிச்சம் இருக்கும். நீ பயப்படவே வேண்டாம்” என்று சிரித்தது தாய்ப் பறவை.

“நீங்கள் இருவரும் எனக்காக எவ்வளவு சிரமப்படுகிறீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியது குஞ்சுப் பறவை.

“நாங்க மட்டுமில்லை. எல்லாப் பறவைகளும் குஞ்சுகளுக்காக அன்பும் அக்கறையும் காட்டக் கூடியவை. இதில் எங்களை மட்டும் தனியாகப் பாராட்ட முடியாது. எதிர்காலத்தில் நீயும் உன் குஞ்சுகளுக்காக இந்த வேலைகளை எல்லாம் செய்வாய். உன் குஞ்சும் உன்னை இப்படிப் பாராட்டும்” என்றது தாய்ப் பறவை.

“அம்மா, நம்ம கூட்டில் பகல் நேரத்தில் வெப்பம் தெரியுது. எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.”

10.jpg 

“உனக்கு மட்டுமில்லை, எல்லா உயிரினங்களுக்கும் பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதற்காகத்தான் மனிதர்கள் குளிர்சாதன வசதிகளைச் செய்துகொண்டு, வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள்.”

“நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா அம்மா?”

“நாங்கள் மட்டும் சும்மா இருப்போமா? நம் கூட்டுக்குள் நான்கு களிமண் உருண்டைகளை வைத்துவிடுவேன். பகல் நேரத்தில் குளத்தில் முங்கி நனைந்த உடலோடு வருவேன். கூட்டில் இருக்கும் களிமண் உருண்டைகள் மீது நீரைத் தெளிப்பேன். உன் அப்பா இறக்கைகளால் விசிறும்போது, சில்லென்று கூடு குளிச்சி அடைந்துவிடும்.”

“அடடா! அற்புதம்! என் அம்மா ஒரு விஞ்ஞானி!”

“இப்படி எல்லாம் புகழாதே. இதுவும் நம் முன்னோர்கள் காலம் காலமாகச் செய்துவந்ததுதான்” என்றது தாய்ப் பறவை.

”எல்லாப் பறவைகளும் இப்படிக் கூட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்குமா?” என்று கேட்டது குஞ்சுப் பறவை.

“இல்லடா என் செல்லம். இயற்கை நமக்கு இந்த ஆற்றலை வழங்கியிருக்கு. வேறு பறவைகள் இதைச் செய்வதாக எனக்குத் தெரியலை.”

“மனிதர்களுக்கு ஆறு அறிவு. அவர்கள்கூட இது மாதிரி செய்வதில்லையா அம்மா?”

“அவர்கள் மின்சாரத்தில் குளிர்சாதன வசதி செய்துகொள்கிறார்கள். இயற்கைக்கு எந்தக் கெடுதலும் இல்லாமல் நாம் மட்டும்தான் குளிர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறோம்.”

“அப்படி என்றால் நாம்தான் விஞ்ஞானிகள். மனிதர்கள் இயற்கைக்குக் கெடுதல் விளைவித்து, பிற உயிரினங்களுக்கும் பூமிக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.”

“நாம் விஞ்ஞானிகளா என்று தெரியாது. ஆனால், நாம் இயற்கைக்கு எந்தக் கெடுதலும் செய்வதில்லை. பூமியைப் பசுமையாக வைத்துக்கொள்வதில் நம் பங்களிப்பும் இருக்கிறது. நம் எச்சத்திலிருந்து விழும் விதைகளிலிருந்து ஏராளமான தாவரங்கள் ஆரோக்கியமாக முளைக்கின்றன” என்று தாய்ப் பறவை சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கூடு தயார் என்று குரல் கொடுத்தது தந்தைப் பறவை.

தாயும் மகளும் மகிழ்ச்சியாக கூட்டுக்குள் சென்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close