[X] Close

டிங்குவிடம் கேளுங்கள்: கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடலாமா?


  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 11:30 am
  • அ+ அ-

கம்ப்யூட்டரிலும் மொபைல் போனிலும் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். என் பெற்றோர் இதைத் தவறு என்கிறார்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் நல்லதா, கெட்டதா? கெட்டது என்றால் அதை ஏன் உருவாக்குகிறார்கள், டிங்கு?      

– நிதர்ஷன், 8-ம் வகுப்பு, நாமக்கல்.

உங்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் இது பெரிய பிரச்சினையாகி வருகிறது. எந்த விஷயத்தையும் நீங்கள் அளவோடு பயன்படுத்தினால் அது கெடுதல் கிடையாது. அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் நிச்சயம் கெடுதல்தான்.

கம்ப்யூட்டர் கேம்களைப் பொழுதுபோக்குக்காக அளவோடு விளையாடலாம். அந்த அளவு எது என்பதில்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. கம்ப்யூட்டர் கேம்கள் எல்லாம் நம்மை வெகு வேகமாகத் தங்கள் பிடிக்குள் இழுத்து வைத்துவிடக் கூடியவை. நம்மை அறியாமலே நம் நேரத்தைக் கரைத்துவிடக் கூடியவை. அதிகமாக விளையாட ஆரம்பித்தால், ஒரு கட்டத்தில் நமக்கு மற்ற விஷயங்கள் மீது ஆர்வம் குறைந்துவிடும்.

எப்போது விளையாடலாம் என்று தோன்ற ஆரம்பித்துவிடும். அதனால்தான் பெற்றோர் விளையாட வேண்டாம் என்கிறார்கள். பொழுதுபோக்காக விளையாடுவது என்றால், உங்கள் பெற்றோரிடம் குறிப்பிட்ட நேரம் அனுமதி பெற்று நீங்கள் விளையாடலாம், நிதர்ஷன். ஏன் இதை உருவாக்குகிறார்கள் என்றால், வியாபாரம்தான். வியாபாரத்துக்கு ஒரே நோக்கம் லாபம்தான்.

அது நல்லது, கெட்டது பற்றி எல்லாம் யோசிக்காது. நாம்தான் கவனமாக நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சாக்லெட் சாப்பிடுவது, டிவி பார்ப்பது எல்லாம்கூட அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகம் என்றால் கெட்டது. அதே மாதிரிதான் கம்ப்யூட்டர் கேம்களும்.

கிருஷ்ணர் ஏன் புல்லாங்குழலைக் கையில் வைத்திருக்கிறார், டிங்கு?

– எஸ். ஜமுனா, கணிதம்,

பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரி, புதுச்சேரி.

புராணக்கதையின்படி கோகுலத்தில் வாழ்ந்த நந்தகோபர்-யசோதா தம்பதியரிடம் வளர்கிறார் கிருஷ்ணர். அந்தப் பகுதி மக்களின் தொழில் ஆடு, மாடுகளை மேய்ப்பது. பால், வெண்ணெய் போன்றவற்றை விற்பது. ஒருமுறை கோபர்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, மாடுக் கூட்டம் ஒன்று, வழிதவறி எங்கோ சென்றுவிட்டது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று, அவை பிற விலங்குகளிடம் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது என்று கண்ணீரோடு கிருஷ்ணரிடம் முறையிட்டனர், கோபர்கள். உடனே அவர், அருகில் இருந்த மூங்கில் மரத்தை வெட்டி, துளைகளை இட்டார். பிறகு அதை வாயில் வைத்து இசைத்தார்.

கத்திக்கொண்டிருந்த பறவைகள் குழல் இசையில் மயங்கி அமைதியாக இருந்தன. தாயைப் பிரிந்து அரற்றிக்கொண்டிருந்த கன்றுகளும் இசையில் அமைதி அடைந்தன. கோபர்களும் கோபியர்களும் குழல் இசையைக் கேட்டு, சிலைபோல் நின்றனர். மரம், செடி, புழு, பூச்சிகள்கூட இந்த இசையால் கட்டுண்டு கிடந்தன. எங்கும் அமைதி நிலவியது.

கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை பிருந்தாவனம் தாண்டி காட்டுக்குள் சென்றது. அங்கே வழிதவறிய பசுக்கள் இசையைக் கேட்டு ஓடிவந்தன. அன்று முதல் புல்லாங்குழல் கிருஷ்ணரிடம் தங்கிவிட்டது. விஷ்ணுவின் அவதாரம்தான் கிருஷ்ணர் என்று சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் கிருஷ்ணருக்கும் வித்தியாசம் காட்டுவது இந்தப் புல்லாங்குழலும் மயிலிறகும்தான், ஜமுனா.

பார்வை இல்லாதவர்களுக்கும் கனவு வருமா, டிங்கு?

– ர. கீர்த்தனா, 3-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாதன்கோவில்.

நிச்சயமாகக் கனவு வரும் கீர்த்தனா. ஆனால், அவர்களுக்குக் காட்சிகள் தென்படாது. அவர்கள் கேட்கும் ஓசை, பேச்சுகள் போன்றவைதான் கனவில் வரும்.

மனிதன் எத்தனை வயதுவரை வளர்கிறான், டிங்கு?

 - வெ. சௌந்தர்யா,

ராயல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சங்கிருப்பு.

மனிதனின் வளர்ச்சி என்றால் உயரத்தைதான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மரபணு, உணவு, ஆரோக்கியம், வாழும் சூழல் போன்றவற்றை வைத்து 18 முதல் 22 வயது வரை மனிதர்களின் வளர்ச்சி இருக்கிறது. 20 வயதில் மூளை முழு வளர்ச்சியடைகிறது. நகம், முடி, தோல் போன்றவை வளர்ந்துகொண்டே இருக்கின்றன, செளந்தர்யா.

வீட்டில் சத்தத்துக்கு மத்தியில் எவ்வாறு கவனம் சிதறாமல் படிக்கலாம், டிங்கு?

- வி. பொன்தர்ஷினி, 11-ம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம், தூத்துக்குடி.

நமது கவனம் முழுவதும் பாடத்துக்குள் சென்றுவிட்டால், பிற விஷயங்கள் நம் காதில் விழாது. எங்கள் வீட்டில் நான்கு பேர். நால்வருமே சத்தமாகத்தான் படிப்போம். இருக்கும் இடத்தில் ஆளுக்கு ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டு படிப்போம்.

விடுதியில் ஒரே அறையில் அருகருகே அமர்ந்துகொண்டு, நூறு பேர்வரை படிக்க வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தது. ஆனால், படித்துதானே ஆக வேண்டும். தேவை புறச் சூழலைக் கவனிக்க வைக்காமல், பாடங்களைப் படிக்க வைத்துவிட்டது. நீங்கள் இரவில் சீக்கிரமாகத் தூங்கிவிடுங்கள்.

அதிகாலை எழுந்து படியுங்கள். மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். வீட்டில் சத்தமே இருக்காது. அதிகாலைப் படிப்பு நன்றாக மனதில் பதியவும் செய்யும். முயன்று பாருங்கள், பொன்தர்ஷினி.

நாய்க்கு வெறி பிடிப்பது ஏன், டிங்கு?

– எஸ். தென்றல், 8-ம் வகுப்பு,

எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

ரேபிஸ் என்ற வைரஸ் கிருமியால் நாய் தாக்கப்படும்போது,  மூளையில் அழற்சி ஏற்படுகிறது. இதனால் நாய்க்கு வெறி பிடிக்கிறது. நாய் மட்டுமில்லை, ஆடு, மாடு, பூனை, குதிரை போன்ற வீட்டு விலங்குகள், வெளவால், நரி, ஓநாய் போன்ற காட்டு விலங்குகளும் ரேபிஸ் வைராஸ் தாக்கப்படுகின்றன.

இந்த விலங்குகள் பிற விலங்குகளையோ மனிதர்களையோ கடிப்பதால், கடிபட்டவர்களும் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள், தென்றல். இது உயிர் பறிக்கும் நோய் என்பதால், வீட்டு விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டுவிடுவது நல்லது. விலங்குகளால் கடிபட்டவர்கள் உடனே மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், உயிர் பிழைத்துவிட முடியும். ரேபிஸ் தாக்கப்பட்ட நாய், 10 நாட்களில் இறந்து விடும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close