[X] Close

பசங்களுக்கு ஸ்கூல் பழகிருச்சா?


pasanga-school

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Jun, 2018 15:05 pm
  • அ+ அ-

ரோஜாவுக்கு கையும் காலும் முளைத்தது மாதிரி என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அப்படியான ரோஜாக்களுக்கு, யுனிஃபார்ம், ஷூ, சாக்ஸ், பேக், வாட்டர் பாட்டில் என மாட்டிவிட்டு, அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவது சந்தோஷமும் கொஞ்சம் வருத்தமும் கலந்ததான உணர்வுதான்!

இரண்டு மாத லீவு, அந்த லீவில், அவிழ்த்து விட்ட காளையென ஓட்டமும் ஆட்டமுமாக இருந்துவிட்டு, கட்டுப்பெட்டியாக, சமர்த்து அம்பிகளாக பள்ளிக்குச் செல்லும் பசங்களைப் பார்க்கவேண்டுமே. அந்நியன் விக்ரம் தோத்தார் போங்க!

அதே ஸ்கூல். ஆனால் வேறொரு வகுப்பு. அதே பள்ளிக்கூடம்தான். ஆனால் வேறொரு க்ளாஸ் டீச்சர். அதே பசங்கதான். ஆனால் இப்போது பக்கத்தில் வேறுவேறு பசங்க. ஆறாவதுக்கு ஒரு டியர் ஃப்ரண்ட், ஏழாவதுக்கு வேறொருத்தன், எட்டாவதில் இன்னொருத்தன் என்றெல்லாம் மாறியிருக்கும். ஆனாலும் அத்தனைபேரும் டியர் ஃப்ரெண்டாகியிருப்பார்கள்.

பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் அமைதி தவழ, சாந்த சொரூபியாக இருப்பார்கள். அப்புறம் அடுத்தடுத்த நாள்களில், ஆரம்பமாகும் சேட்டையும் லூட்டியும்.

‘இதை சேட்டை என்றோ லூட்டி என்றோ சொல்லமுடியாது. அவர்கள் சகஜநிலைக்கு வந்துவிட்டதை அப்படித்தான் காட்டுவார்கள். அதுவொரு உணர்வு. சைக்கலாஜிக்கலாக நாமே கூட, திடீரென்று பாடுவோம்தானே. அப்படித்தான் இதுவும்’ என்கிறார்கள், குழந்தைகள் சைக்காலஜி அறிந்தவர்கள்.

பல பள்ளிக்கூடங்களில், முதல் நாளே பேக் எடுத்துவரவேண்டும். அதிலும் அத்தனை புத்தகங்களும் நோட்டுக்களுமாக அடுக்கியெடுத்து வரவேண்டும் என்கிறார்கள்.

‘எனக்கு, பசங்களை ஸ்கூலுக்குக் கிளப்பறது பெரியவிஷயமில்லை. மேனேஜ் பண்ணிருவேன். அவங்களை அடிக்காமலேயே கெஞ்சிக்கூத்தாடி சாப்பிட வைச்சிருவேன். ஆனா ஒவ்வொரு வருஷமும் ரொம்பவே கஷ்டப்படுத்தி, டென்ஷனாக்கினது எது தெரியுங்களா? பசங்களுக்கு பேக் செலக்ட் பண்றது போல டஃப்பானது எதுவுமே இல்ல.

இந்த பேக் சரியா இருக்குமான்னு பாக்கணும். எல்லாப் புத்தகங்களும் வைக்கமுடியுமான்னு யோசிக்கணும். அப்படி எல்லாப் புக்ஸும் வைச்சா, அறுந்துடாம, தாங்குமா அப்படின்னு பரிசோதனை பண்ணனும். எல்லாத்துக்கும் மேல, விலையை பசங்களுக்குத் தெரியாம நைஸாப் பாக்கணும்.

போன வருஷம், பேக் வாங்கிட்டு வந்தா, பாதி புக்ஸ்தான் வைக்கமுடிஞ்சுது. அப்புறம் என்ன... வாங்கு இன்னொன்னு. அது ஸ்கூலுக்கு, இது டியூஷனுக்குன்னு சாரு கலக்கியெடுத்தாரு’’ என்கிறார்கள் பெற்றோர்.

பேக் மாற்றத்தை விடுங்கள். பல பள்ளிகளில், வருடம் தவறாமல் பிரின்ஸிபால் மாறிவிடுகிறார்கள். முக்கால்வாசி தனியார் பள்ளியில், இது நடக்கிறது. அப்படி வருகிறபோது, அவரவருக்கு உண்டான ஸ்டைல், பழைய பள்ளியின் சட்டதிட்டம் என சகலத்தையும் இங்கு புகுத்திவிடுகிறார்கள்.

‘’ஸ்கூல் திறக்குதேன்னு முடியெல்லாம் வெட்டிதான் அனுப்பிவைச்சோம். ஆனா, இன்னும் ஒட்ட வெட்டிட்டுவான்னு சொன்னாங்களாம். ‘நேத்திக்கிதானேங்க வெட்டினான். இந்த ஒருநாள்ல முடிவளர்ந்திருச்சான்னு சலூன்கடைக்கார தம்பி கிண்டல் பண்றான்’ என்று வேதனையுடன் சொல்லும் தகப்பன்சாமிகள் உண்டு.

இதுவாவது பரவாயில்லை.

தி.நகர் பக்கம் போய், காலைலேருந்து சாயந்திரம் வரைக்கும் அலைஞ்சு, பாப்பாவுக்குப் பிடிச்ச பிங்க் கலர் லஞ்ச் பாக்ஸ், பையனுக்குப் பிடிச்ச கிரீன் கலர் லஞ்ச் பாக்ஸ்னு எடுத்துட்டு வந்தோம். ரெண்டும் சேர்த்து, தொள்ளாயிரம் ரூபா ஆச்சு. இப்ப என்னடான்னா, புதுசா வந்த பிரின்ஸிபால் மேடம், ‘இந்த டப்பால எல்லாம் சாப்பாடு கொண்டுவரக்கூடாது. எவர்சில்வர் பாக்ஸ்லதான் கொண்டுவரணும்’னு கண்டீஷனா, தன்னோட கண்டீஷனைச் சொல்லிருக்காங்க. அட... இதை முன்னாடியே சொல்லிருந்தா, தொள்ளாயிரம் மிச்சமாயிருக்குமே. சரி தொள்ளாயிரம் போச்சு. அந்த பிங்க், கிரீன் கலர் டிபன்பாக்ஸை என்ன பண்றதாம்’’ என்று நொந்து நூலாகி, நூடுல்ஸாகி, ப்ரைடு ரைஸாகிறவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா... வாழ்க்கையில் முதன் முறையாக பள்ளிக்குச் செல்லும் வாண்டுகளின் பாடுகளைப் பார்த்து வருத்தப்படுவதா?

பள்ளிக்கு அழுதுகொண்டே செல்லும் குழந்தைகளைப் பார்க்கும்போது நமக்கே அழுகை வந்துவிடும். ஆனால் அம்மாக்களே தூள் சொர்ணாக்காக்களாக மாறியிருப்பார்கள் என்பதுதான் ட்விஸ்ட்டே! ‘பரவாயில்லியே. இவனைவிட நான் பயங்கரமா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, ஸ்கூலுப் போகமாட்டேன்னு அதகளம் பண்ணிருக்கேன்’ என்று அப்பாக்கள், இந்த நேரத்தில்தானா ப்ளாஷ்பேக்கில் ஓடவேண்டும்?

‘’நேத்திக்கு வரை வாசலை விட்டுப் போனது கூட கிடையாது. காலைல 11 மணி போல ஒரு தூக்கம். மதியானம் ரெண்டு மணி போல ஒரு தூக்கம். அம்மாஅம்மான்னு சுத்திச்சுத்தி வந்துக்கிட்டிருந்த குழந்தை, ப்ரி கேஜில சேத்துவிட்டா, அரைகுறைத் தூக்கத்தோடயே ஸ்கூலுக்குப் போவுது. அதே அரைகுறை தூக்கத்தோடயே ஸ்கூல்லேருந்து வருதுங்க! பாக்கவே பாவமா இருக்கு. என்ன பண்றது... பசங்க படிச்சு, டாக்டராகணுங்களே...’ என்று எதிர்கால இந்தியாவுக்காக இப்போதே அலுத்துக்கொள்கிற பெற்றோரை என்ன சொல்வது? என்ன செய்வது?

ஐந்து வயதுக் குழந்தையை மடக்கிக் கேட்டால், ’என்ன அங்கிள் பண்றது? ஸ்கூலுக்குப் போகலேன்னா அம்மா அடிக்கிறா. ஸ்கூலுக்குப் போயிட்டா, அங்கே பாக்காதே, இவங்ககிட்ட பேசாதேன்னு மிஸ் அடிக்கிறாங்க. ஒரே டென்ஷனா இருக்கு அங்கிள்’ என்று டென்ஷனையும் டிப்ரஷனையும் தடக்தடக்கையும் இந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் ஏற்றுகிறார்கள்; ஏற்றுகிறோம்.

தனியார் பள்ளிக்குப் பழகிவிட்டோம். அதிகக் கட்டணங்களுக்கு பழகியாச்சு. அவர்கள் சொல்லும் அத்தனை சட்டதிட்டங்களுக்கும் பணிந்துவிட்டோம்.

ஆக... இப்படியாக பசங்களும் பழகிவிடுவார்கள்.

காலையில் டியூஷன். மாலையில் டியூஷன். பள்ளி ஒர்க், ஹோம் ஒர்க்... என இன்னும் இன்னுமா பழக ஏராளம் இருக்கு பசங்களா!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close