[X] Close

வெள்ளியங்கிரி மூலிகைக்கு எப்பவுமே மவுசு!


velliyangiri-mooligai

  • kamadenu
  • Posted: 18 Jun, 2018 09:27 am
  • அ+ அ-

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பழங்குடியினப் பெண்கள் விற்பனை செய்யும் நூற்றுக்கணக்கான காட்டு மூலிகை களுக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது. “எங்களிடம் மருந்து கேட்டு இங்கிலீஸ் மருத்துவர்களும் வருகிறார்கள்” என்று சொல்லி, இவற்றை விற்பனை செய்யும் பழங்குடிப் பெண்கள் திகைக்க வைக்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மூலிகைகளுக்கு மிகவும் பெயர் பெற்றது கோவைக்கு மேற்கே உள்ள வெள்ளியங்கிரி மலை. தென்கயிலாயம் எனப்படும் இங்கு ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் லட்சக்கணக்கானோர் மலையேறுகிறார்கள். கோடை காலத்தில் குளுகுளு காற்று, மூலிகைகளைத் தழுவிவரும் சுனைகளில் குளித்தும், உடல் ஆரோக்கியம் பேணவே இந்த யாத்திரையைப் பெரும்பாலானவர்கள் மேற்கொள்கிறார்கள். அப்படிச் செல்பவர்களை அடிவாரத்திலேயே மூலிகைப் பொருட்களைக் கடைவிரித்து ஈர்க்கிறார்கள் பழங்குடியினப் பெண்கள். வெள்ளியங்கிரி மலைக் காடுகளிலிருந்து இவர்கள் சேகரிக்கும் மூலிகைகள் மலை அடிவாரத்தில் மட்டுமல்லாது சென்னையிலும் விற்கப்படுகின்றன.

ஒரு மூலிகை பல பயன்

‘மலை இஞ்சியைக் கொதிக்கிற தண்ணியில தட்டிப்போட்டு சாப்பிட்டா வாயுத்தொல்லை, அஜீரணக் கோளாறு நீங்கும். விளாம்பழத்தை உடைச்சு சக்கரை போட்டு சாப்பிட்டா உடம்புக்கு நல்ல குளிர்ச்சி. உடல் உஷ்ணம் நிமிஷத்துல நின்னு போகும். இதோ, இதுக்குப் பேரு ஆனை வணங்கி. யானையே இந்த மூலிகையப் பார்த்தா மரியாதையோட நகர்ந்து போகும். இதோட வேரை நாட்டு வைத்தியர்கள் எந்திரச்சத்துல போட்டு பூஜையில வச்சு கொடுப்பாங்க. அதை குழந்தைகளுக்குக் கட்டுவாங்க.

அதை கட்டினா யானை பலம் மட்டுமல்ல; தைரியம் வரும். குழந்தைகள் பயந்து நடுங்கறது நிற்கும். இந்த மொடவாட்டுக் கிழங்கை சூப் வச்சு குடிச்சா கைகால் குடைச்சல், மூட்டு வலி காணாமல் போயிடும். மொடவாட்டுக்கிழங்கு காய்ஞ்சு போனா அதை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. அதை எண்ணெயில ஊற வச்சு தலைக்குப் போட்டு குளிக்கலாம். முடி பொதபொதன்னு வளரும். மண்டை சூடு குறைஞ்சு போகும்!’

இப்படி அங்குக் கடைவிரிக்கப் பட்டிருக்கும் விரடி பச்சை, சீதை மஞ்சள், ஐவிரலி மஞ்சள், கல்பாசி, வெள்ளருகு, கல்நொச்சி, நாகதாளி வேர், சாம்பிராணி, குங்கிலியம், யானை வணங்கி என நீளும் நூற்றுக்கணக்கான காட்டுப் பொருட்களின் (மூலிகைகளின்) பெயர்களையும் பயன்பாட்டையும் பற்றி கேட்கக் கேட்கக் கடகடவென ஒப்பிக்கிறார்கள். அதே வேகத்தில் வியாபாரமும் நடக்கிறது. அதிகபட்சம் போனால் ஒரு மூலிகை ரூ. 30-யைத் தாண்டுவதில்லை. மூட்டு வலிக்கு, கைகால் குடைச்சலுக்குத் தடவும் தைலம் போன்ற வகையறாக்கள் ரூ. 60-யை எட்டுவதில்லை.

தேடி வரும் வாடிக்கையாளர்

‘அந்தக் காலத்துல எங்க பாட்டன், பூட்டன் எல்லாம் இதே வெள்ளியங்கிரி மலையைச் சுத்தி சுத்தி காட்டுப்பொருட்களை சேகரிச்சு கீழ் நாட்டு சனங்களுக்கு கொடுப்பாங்க. அதை வச்சு நாட்டு வைத்தியம் செய்து சனங்களுக்கு கொடுப்பாங்க. அதையேதான் இப்ப நாங்க செய்யறோம். எங்க வீட்டு ஆம்பிளைகள் காட்டுக்குள்ளே போய் மூலிகைகளைக்கொண்டு வந்து கொடுப்பாங்க. அதை நாங்க பக்குவப்படுத்தி இப்படி விற்பனைக்குக் கொண்டு வருகிறோம்!’ என்கிறார்கள் பழங்குடிப் பெண்கள்.

ஆரம்பத்தில் இவர்கள் இதை ஒழுங்கில்லாமல் தனித்தனியாகத்தான் விற்பனை செய்துவந்திருக்கிறார்கள். இப்போது வனத்துறையினர் உதவியோடு வனக்குழுக்களும் சுய உதவிக்குழுக்களும் ஏற்பட அதற்கேற்பக் காட்டில் சென்று மூலிகைகள் சேகரிப்பதற்கும் விற்பதற்கும் ‘மூலிகை பூச்சரம்' என்ற குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 16 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் குழு 10 ஆண்டுகளாக விற்பனையில் ஈடுபடுகிறது. இவர்கள் தங்கள் சம்பளத்தை எடுத்துக்கொண்டு மீதியைக் குழுவில் சேமிக்கிறார்கள்.

ஏப்ரல், மே மாதங்களில் வெள்ளியங்கிரி மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள். அவர்கள் யாவரும் மறக்காமல் வாங்கிப்போவது இந்த மூலிகை பொருட்களைத்தான். அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொங்கல், தீபாவளியை ஒட்டி 15 நாட்கள் சென்னையிலும் பழங்குடிப் பெண்கள் கடை போடுகிறார்கள். ‘என்னன்னு தெரியலைங்க. 10 வருஷத்துக்கு முன்னாடிலாம் இந்த மூலிகை மருந்துகளைத் தேடிப் போய் கொடுத்தாலும், சனங்க அவ்வளவாக வாங்க மாட்டாங்க. இப்ப எல்லாம் தேடி வந்து வாங்கறாங்க!’ என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close