[X] Close

பிரியாணி விருந்து; முதலில் வயிற்றை தயார்படுத்துவோம்!


biriyani-virundhu

  • kamadenu
  • Posted: 16 Jun, 2018 10:24 am
  • அ+ அ-

போப்பு

நான் முதல் பிரியாணியைச் சுவைத்தது என்னுடைய பதினான்காம் வயதில்தான். அப்பாவின் நண்பர் உமர் மாமா வீட்டில் ரம்ஜான் பண்டிகைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். வெள்ளைப் பீங்கான் கிண்ணத்தின் விளிம்பில் உட்கார்ந்திருந்த ரோஜாப்பூ, நிஜமாகவும் தத்ரூபமாகவும் குளுமை காட்டிக்கொண்டிருந்தது. டீக்கும் காபிக்கும் வித்தியாசம் தெரியாத அந்த வயதில் உணவின் சுவையையும் தரத்தையும் இனம் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அன்று உண்ட விருந்து இனம் தெரியாத ஒரு தெய்வீகக் கிறக்கத்தில் ஆழ்த்தியது என்பது மட்டும் மனதில் ஆழப் பதிந்த உண்மை.

மக்கள் மயமான பிரியாணி

தற்காலத்தில் தெருவுக்கு இரண்டு என்ற வகையில் பிரியாணிக் கடைகள் தட்டி விலாஸ் தொடங்கி அரண்மனை செட்டப்புகள் வரைக்கும் வாசனை பரப்பி நிற்கின்றன. முப்பது ரூபாய் தொடங்கி முன்னூறு ரூபாய் வரைக்கும் அனைத்துத் தரப்பினரும் சுவைக்கிற ஒன்றாகிவிட்டது பிரியாணி. இன்றைய ஜனநாயகம் கடைக்கோடி மனிதனின் உரிமையை, அதிகாரத்தை இன்னமும் உறுதிப்படுத்தவில்லைதான். ஆனால், எந்தப் பொருளையும் யாரும் நுகரலாம் என்று மட்டும் மாற்றியிருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு அவசியமான வாக்கைப் பெறுவதற்கான குறைந்த பட்ச மாற்றுப் பொருள் என்ற மதிப்பையும் பிரியாணி பெற்றிருக்கிறது.

விருப்பமும் செரிமானத் திறனும்

இப்படி மக்கள்மயப்பட்ட பிரியாணியை எல்லோரும் பயமில்லாமல் சுவைத்துவிட முடிகிறதா? ஆசை தீர உண்டுவிட்டு நிம்மதியாக இருக்க முடிகிறதா என்று கேட்டால், இல்லை. வாரத்துக்கு ஒரு முறை உணவு மீதான வேட்கையைத் தணிக்க மணமணக்கும் ஒரு பிளேட் பிரியாணியை உண்ட பின்பு இடி, மின்னல், புயல், வெள்ளம் எனப் பலவிதமான வயிற்றுச் சீற்றங்களுக்கு உள்ளாவோர் நம்மில் பலர். காரணம், நமக்கும் வயிற்றுக்குமான உறவு சுமுகமாக இல்லாமல் இருப்பதுதான். நமது உணவின் மீதான விருப்பமும் செரிமான மண்டலத்தின் திறனும் உடல் என்ற ஒரே கட்சிக்குள் இருந்தாலும், வெவ்வேறு அணியாகப் பிரிந்து முரண்பட்டு நிற்கின்றன.

பல்சுவை நிரம்பிய பிரியாணியை ஏன் விருப்ப உணவாகப் பலரும் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால், நம்முடைய உடல் தன்னுடைய ஆற்றலைச் சட்டென்று இழக்கிறது. அப்படி இழந்த ஆற்றலை, அந்த வெறுமையை ஈடுசெய்வது பல்சுவை பொதிந்த பிரியாணிதான் என்பது நமக்குத் தெரியும்.

நம்முடைய செரிமானத் திறன் குன்றிப் போனதற்கான காரணத்தைப் பின் வரும் வாரங்களில் சற்று விரிவாகப் பார்க்கப் போகிறோம். இப்போதைக்குப் பிரியாணி உண்பதற்கு முன்னும் பின்னும், உண்ணும் போதும் பின்பற்ற வேண்டிய சில சடங்கு முறைகளைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

வயிற்றைத் தயார்படுத்துங்கள்

ஒரு சாதாரண நடுத்தர வருமானம் ஈட்டுவோர் வாழ்க்கையில் பிரியாணி உண்பது ஏகத் தடபுடலோடு `பிளான்’ பண்ணிப் பின்னுகிற ஒன்றுதான். உழைத்துச் சோர்ந்து சாப்பாட்டுக் கூடத்தில் அமர்ந்து ‘என்ன சாப்பாடு?’ என்று கேட்கிறபோது, உடலையே வாரி சுருட்டும் வாசனை மணக்கும் பிரியாணி நம் எதிரே ஆவி பறக்க வந்து நிற்கும் நல்வாய்ப்பு வெகு அரிதாகத்தான் வாய்க்கிறது.

எனவே, பிரியாணிக்கு எப்படி பிளான் பண்ணுகிறோமோ அதுபோல வயிற்றையும் பிளான் பண்ணித் தயார் செய்துகொள்ள வேண்டும். நாளை மதிய உணவுக்குப் பிரியாணி என்றால், இன்று மாலை வெறும் பழ உணவாக உட்கொள்ளுதல் நன்று. வெறும் பழம் மட்டும்தானே என்று கிலோக்களில் கனக்கும் தர்பூஸையோ அல்லது பன்னூறு சுளைகள் அடங்கிய பலாப் பழத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடாது. இரண்டு ஆரஞ்சு அல்லது ஒரு மாதுளை என இருநூறு கிராம் அளவுடைய பழத்தை மட்டுமே உண்டு மிதமான வயிற்றோடு படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

மறுநாள் காலையில் வயிற்றைச் சாட்டையால் சொடுக்கியது போலப் பசி தலைகாட்டும். தான் ஈன்ற குட்டியைத் தொடப்போனால் எப்படிப் பூனை நம்மைப் பிறாண்டி எடுக்குமோ, அது போலப் பசி வயிற்றைப் பிறாண்டி எடுக்கும். இதற்கு அஞ்சக் கூடாது.

இப்போது வயிற்றில் ஏற்பட்டுள்ள பசித் தீயை அணைக்கச் சூடான காபியோ டீயையோ ஊற்றி வைக்கக் கூடாது. எலுமிச்சை சாறு அல்லது கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு அரைத்து வடிகட்டிய சாறு போன்றவற்றை 200 மில்லி அளவு நீரில், மிதமான இனிப்புக்குத் தேன் கலந்து குடித்து, பசியின் தீவிரத் தன்மையைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் பதினோரு மணி சுமாருக்குப் பசி வேகம் காட்டும். இப்போதும் பழச்சாறு அருந்த வேண்டியதில்லை. வெறும் நீர் மட்டுமே குடித்து வயிற்றைச் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் பிரியாணிக்கான நேரத்தில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், வெறுமே வயிற்றை நிரப்புவதற்கு அள்ளிக் கொட்டாமல் பல்சுவை அடங்கிய பிரியாணியில் பொதிந்து கிடக்கும் ஒவ்வொரு சுவையையும் தனித்து உணரும் வண்ணம், உணவின் ஒவ்வொரு இணுக்கிலும் உமிழ் நீர் கலக்கும்படி நிதானமாக ரசித்து உண்ண வேண்டும்.

அதுவே பிரியாணிக்கும் நம் உடலுக்கும் செய்யும் மரியாதை. இப்படி உண்கிறபோது உண்ணத் தகுந்த உணவின் அளவு, நமக்கு வசப்படும். அளவறிந்து உண்கிறபோது உடலில் எந்த உபாதையும் 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close