[X] Close

முறுக்கு முறுக்கு முறுக்கேய்... மணப்பாறை முறுக்கேய்!


manapparai-murukku

மொறுமொறு முறுக்கு... இது மணப்பாறை முறுக்கு

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Jun, 2018 15:58 pm
  • அ+ அ-

மாயவரம் ஏர் எடுத்து, மணப்பாறை மாட்டில் கட்டி விவசாயம் செய்யச் சொல்லி வலியுறுத்திய பாடல் நினைவிருக்கிறதுதானே. விஷயம்... மாயவரமோ ஏரோ, மாடோ விவசாயமோ அல்ல. மணப்பாறை. மாட்டுக்குப் பேர்போன ஊர், மொறுமொறு முறுக்குக்கும் பெயர் பெற்றுத் திகழ்கிறது.

திருச்சிக்கு அருகில் உள்ளது மணப்பாறை. திருச்சிக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவே உள்ள சின்னஞ்சிறிய ஊர்தான் இது. பேருந்தில் சென்றால், அது எந்த நேரமாக இருந்தாலும் ஒரு பஸ்சில், அந்த ஊரில் ஏறும் பயணிகளை விட, முறுக்கு விற்பவர்களே அதிகமாக ஏறுவார்கள். பாதிபேர் தூங்காமல் மணப்பாறைக்குக் காத்திருப்பார்கள், முறுக்கு வாங்குவதற்காக! மீதி பேர், ‘முறுக்கு முறுக்கேய் முறுக்கு முறுக்கு முறுக்கேய்... மணப்பாறை முறுக்கேய்...’ என்கிற கரடுமுரடான குரல்களைக் கேட்டு எழுந்துவிடுவார்கள்.

அந்த முறுக்கின் வண்ணமும் வாசமும் உங்களைச் சுண்டியிழுக்கும். ‘சரி... ஒரு ரெண்டு பாக்கெட் வீட்டுக்கு வாங்கிட்டுப் போவோம்’ என்று வாங்குவீர்கள். ஆனால் பாதி வழியிலேயே இன்னும் நாலஞ்சு பாக்கெட் வாங்கியிருக்கலாமோ என்று கைபிசைந்து தவிப்பீர்கள். பின்னே... உங்கள் கையில் இருந்த இரண்டு பாக்கெட்டில் இரண்டு முறுக்கை மட்டும் வழிக்குச் சாப்பிடுவோம் எனப் பிரித்து, அப்படியே ஒவ்வொன்றாக எடுத்து காலி செய்திருப்பீர்களே!

அதுதான் மணப்பாறை முறுக்குச் சுவையின் வெற்றி ரகசியம்.

’எனக்கு நெனைவு தெரிஞ்ச நாள்லேருந்து...’ என்று சொல்லுவோமே! அப்படித்தான், மணப்பாறை என்றதும் முறுக்கு ஞாபகத்துக்கு வருவதுடன் நம் கண்ணெதிரே வந்து, ஜாலம் காட்டும். அந்த நினைவே ஆசை மூட்டும். திண்டுக்கல், பெரியகுளம், கொடைக்கானல், குமுளி என்று அந்தப் பக்கம் போகிறவர்கள் என்ன நள்ளிரவானாலும் மணப்பாறையை நெருங்கும்போது அலாரம் வைத்தது போல் முழித்துக் கொள்வார்கள். ஒரு பத்துப்பன்னெண்டு பாக்கெட்டுகள் வாங்கினால்தான், அவர்களுக்கு அப்படியொரு நிம்மதி. நிறைவு.

கிட்டத்தட்ட, மணப்பாறை முறுக்கு, கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. மணப்பாறை சந்தை பிரபலம். சந்தையில் மாடுகள் பிரபலம். அது வாரம் ஒருமுறை. ஆனால் மணப்பாறை நகரமே முறுக்குச் சந்தை என்றும் தினந்தோறும் முறுக்குத் திருவிழாதான் என்றும்  கொண்டாடுகிறார்கள் ஊர்மக்கள்.

மணப்பாறை முறுக்கு செய்வது எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு -1 கிலோ;

உளுத்தம்பருப்பு மாவு - சிறிதளவு

இரண்டையும் நன்கு கலந்து அத்துடன் ஜீரகம், எள், பெருங்காயம் ஓமம், 10 கிராம் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அத்துடன் தண்ணீரைக் கொஞ்சமாக விடுங்கள். கலக்குங்கள். அதில் கொஞ்சம் எண்ணெயும் சேர்த்துப் பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.

இப்படி பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து முறுக்குச் சுற்றுகிற அச்சைக் கொண்டு, அதில் மாவை வைத்து அழுத்திப் பிழிந்து அவற்றை சிறிது உலரவைக்க வேண்டும். இதை உலர்ந்த பின் எண்ணெயில் பொறித்து எடுக்கலாம். பிறகு, அடுத்த செட்டு முறுக்குகளை போட்டு எடுக்க வேண்டும்.

மீண்டும் முதலில் பொறித்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இப்படியாக ஒரு தடவைக்கு இரண்டு தடவை எண்ணெயில் இட்டு எடுங்கள். அதையடுத்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து நன்றாக மூடிவிடுங்கள். தேவையெனில் கொஞ்சமாக வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல நாளிலேயே மணக்கும் முறுக்கு, இன்னும் எட்டூருக்கு மணக்கும்!

எவ்வளவுதான் நாம் பக்குவமாக செய்தாலும் மணப்பாறை மண்ணின் தண்ணீரும் அங்கே விளையும் அரிசியும் தனிச்சுவை; தனி ரகம். இந்த ஊரின் அரிசிக்கும் தண்ணீருக்கும் அப்படியொரு ருசி. இவை மொத்தமும் மாப்பிள்ளை முறுக்கு ஏதும் காட்டாமல், முறுக்குக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது என்று பூரிப்புடன் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

சுதந்திரப் போராட்டக் காலம். 1930ம் ஆண்டுகள் வாக்கில், ரயில் போக்குவரத்துதான் பிரதானம். மணப்பாரை ரயில்வே ஸ்டேஷனில் நீர் பிடிக்க ரயில் நிற்கும். நெல்லை ஜில்லாவில் இருந்து இங்கே வந்து வாழ்ந்து வந்த கிருஷ்ணய்யர், மணி அய்யர் என்பவர்கள், ரயில்வே ஸ்டேஷனில் கேண்டீன் எடுத்திருந்தார்களாம். அப்போது, விளையாட்டாக தயாரித்து விற்றதுதான் முறுக்கு வியாபாரம். ரயில் வருவதற்கும் இவர்கள் சுடச்சுட முறுக்கை சட்டியில் இருந்து எடுத்துக் கொண்டு விற்பதற்கும் சரியாக இருக்குமாம். அந்தக் காலத்திலேயே முறுக்கு வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், வலைதளம், வலையில்லாத தளம், இணையதளம் என்று எதுவுமில்லாமலேயே பிரபலமானது. இப்படித்தான், இவர்களால்தான் மணப்பாறையும் பிரபலமாகி, முறுக்கும் பிரசித்தி பெற்றதாம்!

அதுமட்டுமா? இரண்டு முறை எண்ணெயில் போட்டு எடுக்கும் புதிய முறையே, முறுக்கின் கூடுதல் சுவைக்குக் காரணம் என்று ரகசியம் சொல்லிப் பூரிக்கின்றனர்.

இந்த ஊர்மக்களுக்கும் முறுக்கு வியாபாரிகளுக்கும் மணப்பாறையும் முறுக்குமே கதி. அதுவே வாழ்க்கை. ஊரில் பலரும் முறுக்கு வியாபாரத்தையே நம்பி உள்ளனர். யாரைக் கேட்டாலும் சிலர், முறுக்கு பிஸ்னஸ்க்கு அரிசி சப்ளை என்பார். இன்னொருவர் முறுக்குக் கம்பெனி வைச்சிருக்கேன் என்பார்கள். வேறு சிலர், முறுக்குக்கு கவர், பாக்ஸ் சப்ளை பண்றோம்’ என்பார்கள். இன்னும் சிலரோ, முறுக்குக் கம்பெனியில் இருந்து மொத்தமாக வாங்கி, பாக்கெட் பாக்கெட்டாகப் போட்டு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுப்பட்டு கிராமங்கள் என்று சப்ளை செய்வதாகச் சொல்வார்கள்.

இன்னும் சொல்லப்போனால், ஊர்க்காரர்கள், ஊரைநாட்டு விட்டு பெரிதாக தாண்டியதில்லை. ஆனால் மணப்பாறையின் பேர்சொல்லும் முறுக்கு, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, அபுதாபி, லண்டன் என்று தினந்தோறும் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது.

பின்னே... மாப்பிள்ளை முறுக்கை விட, மணப்பாறை முறுக்கு ஒஸ்திதான்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close