[X] Close

வாசிப்பை நேசிப்போம்: 80 வயதில் கிடைத்த வாய்ப்பு


80

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 14:16 pm
  • அ+ அ-

திருமணமாகி வலங்கைமானுக்கு வந்தபோது எனக்கு 17 வயது. எட்டாவதோடு பள்ளிப் படிப்பு நின்றுவிட்டாலும் புத்தக வாசிப்பில் நாட்டம் இருந்தது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டுப் புத்தகம் படிக்க உட்கார்ந்தபோது 80 வயது. ஆமாம், வாழ்க்கையில் 65 ஆண்டுகளை அடுக்களையில் கழித்துவிட்டேன். வலங்கைமானைவிட்டு இரண்டே முறைதான் வெளியூர் சென்றிருக்கிறேன். வீட்டுக்கு மளிகைப் பொருட்கள் கட்டிவரும் பொட்டலக் காகிதங்களைப் பிரித்துப் படிப்பேன். அதையும் என் மாமியார் குறையாகச் சொல்லுவார்.

வீட்டின் ஒரு மூலையில் பெட்டி நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் படிக்க ஆசையாக இருக்கும். ஆனால், அதற்கும் மாமியார் அனுமதிக்கவில்லை. என் கணவர் வாங்கிவரும் ‘கல்கண்டு’ பத்திரிகை தவிர வாசிக்க வேறு ஏதுமில்லை. பிறகு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. கல்யாணத்துக்கு முன்னால் எங்கள் வீட்டில் நிறைய புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு இருந்தது.

‘பேசும்படம்’ போன்ற பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படித்துவிட்டு அழுதிருக்கிறேன். அதெல்லாம் கற்பனை என்று என் அண்ணன் சொல்லித்தான் தெரியும். நான்தான் என்று இல்லை. என்னைப் போலவே திருமணமாகி வந்த பெண்கள் யார் கையிலும் புத்தகத்தையே பார்த்ததில்லை.

வீட்டு விலக்கான நாட்களில்கூட புத்தகத்தை வாசித்துவிட முடியாது. கொல்லைப் பக்கம் விறகு சேகரித்துவரச் சொல்லுவார்கள். அம்மி அரைப்பது, உரல் குத்துவது, திருகையில் தானியம் திரிப்பது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது, துணி துவைப்பது, காயவைத்த துணிகளை மடித்துவைப்பது, விருந்தினர்களை உபசரிப்பது என்று ஓயாது ஒழியாது வேலை இருந்துகொண்டே இருக்கும். பெண் என்றால் வேலை செய்யப் பிறந்தவள் என்பதுதான் அந்தக் காலச் சமூகத்தின் தீர்மானம்.

இப்போது என் கணவருக்கு 94 வயதாகிறது. அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்கிறேன். வீட்டு வேலையிலிருந்து இன்னும் விடுதலை பெறாவிட்டாலும் படிக்க நேரம் கிடைக்கிறது. பக்கத்து வீட்டில் ஒரு புத்தகப் பிரியர் இருக்கிறார். அவரிடமிருந்து புத்தகங்களை இரவல் வாங்கி வாசிக்கிறேன்.

தி.ஜானகிராமன்,   லா.ச.ரா, வண்ணநிலவன், பிரபஞ்சன், ஆர்.சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் மனத்துக்கு உவப்பாக இருக்கின்றன. தி. ஜானகிராமனின் கதைகளைப் படிக்கும்போது இளவயதில் நான் வாழ்ந்த தஞ்சாவூர் நினைவுகள் வந்துவிடும். தஞ்சை ப்ரகாஷின் ‘கள்ளம்’ நாவலை சமீபத்தில் படித்தேன்.

இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஆன்மிகப் புத்தகங்களும் நிறைய வாசிக்கிறேன். ராமானுஜர் வாழ்க்கைக் கதையை விரும்பி வாசித்தேன். அதேபோல சாய் சரித்திரம், ரமணரின் வாழ்க்கை வரலாறு, ராமகிருஷ்ண பரமஹம்சர் நூல் எல்லாம் வாசித்தாகிவிட்டது.

இந்தக் காலத்துப் பெண்கள் என்னைப் போல் இல்லை. படித்து வேலைக்குப் போய் வெளியுலகில் நாலு பேரோடு சுதந்திரமாகப் பழகும் அளவு முன்னுக்கு வந்துவிட்டார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. 80 வயதிலாவது எனக்குப் புத்தக வாசிப்பு சாத்தியமாகியிருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

என் பள்ளித் தோழிகள் இப்போது எங்கே இருக்கிறார் களோ தெரியவில்லை. ஒரு முறை பாமா என்ற பள்ளித் தோழியை கும்பகோணம் பஸ் நிலையத்தில் பார்த்தேன். பேசுவதற்குள் அவள் போக வேண்டிய பஸ் வந்துவிட்டது. அதில் ஏறிப்போய்விட்டாள். இப்போது புத்தகங்களே என் தோழிகள்.

- நீலாம்பாள், வலங்கைமான்.
 

2006-ல் ஆறாம் வகுப்புப் படித்தேன். ஆசிரியர் கிடையாது. அதனால் வெளியேதான் எப்போதும் விளையாடிக்கொண்டு இருப்போம். நூலகம் பக்கத்தில்தான் இருந்தது. என் அண்ணன் தினமும் நூலகத்துக்குச் செல்வார். அப்படி என்னதான் படிப்பாய் என அவரிடமே கேட்பேன். அப்போதான் முல்லா கதைகள் புத்தகத்தைத் கொடுத்தார்.

வாசித்ததுமே பிடித்துவிட்டது. அப்படி ஆரம்பித்ததுதான் என்னோட வாசிப்பு. அக்பர் பீர்பால், தெனாலிராமன் கதை புத்தகத்தை அண்ணன் வாங்கித் தந்தார். பதி்னொன்றாம் வகுப்பு படித்தபோது எனக்காக வீட்டில் செய்தித்தாள் வாங்கினர். அதில் ஒரு வரி விடாமல் படித்துவிடுவேன். சின்னத் துணுக்குகளில் தொடங்கி கட்டுரைகள்வரை அனைத்தையும் படித்துவிடுவேன்.

ஆசிரியர் பயிற்சிக்குப் படித்தபோது என் ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தார்கள். சமையல், சினிமா எனத் தொடங்கியது இன்று சேகுவேராவைப் பற்றிப் படிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. பயிற்சிக்காகப் பள்ளிகளுக்குப் போகும்போது மாணவர்களுக்கு நிறைய கதைகள் சொல்வதுடன் பல்வேறு தகவல்களைச் சொல்லவும் வாசிப்பே எனக்கு உதவுகிறது.

என் வகுப்பறை எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். அதெற்கெல்லாம் வாசிப்புதான் காரணம்.

வேரில்லாத மரம் - சிவசங்கரி

சூரிய சூல் - பஸிரா ரசூல்

வேண்டும் விடுதலை – சேகுவேரா, தமிழில்: அஜயன் பாலா.

- இவையெல்லாம் எனக்குப் பிடித்தவை. புத்தகங்கள் வாங்குவதற்குப் பணம் சேமித்துக்கொண்டிருக்கிறேன். 24 வயதாகும் நான் வீட்டிலும் வெளியிலும் என் கருத்துகளைத் தெளிவாகச் சொல்ல வாசிப்பே வழிகாட்டியது. நான் சிறப்பான ஆசிரியராக மாற புத்தகங்கள் உதவும் எனவும் நம்புகிறேன்.

- சு.கனகராணி, விருதுநகர்.

 

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close