[X] Close

மனிதர்களை வைத்து நடக்கும் மனித வணிகம்: கொத்தடிமை முறையும் மனிதக் கடத்தலும்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 20:46 pm
  • அ+ அ-

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதும் கொத்தடிமை  முறை என்ற துயரம் இன்னும் தொடர்கிறது. ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க  கருப்பு இனத்தவரை அடிமைகளாகக்  கொண்டனர்.  அமெரிக்காவில் வெள்னை இன முதலாளிகள்  கருப்பு இனத்தவரை தங்கள் தோட்டங்களிலும்  பண்ணைகளிலும் அடிமைகளாக வைத்திருந்தனர. ரோமாபுரி அடிமைகள், கிரேக்க அடிமைகள், ஐரோப்பிய  அடிமைகள் போல இந்தியாவிலும   அடிமை முறை இருந்தது.

பழமையான  இந்தியாவில் போரில் தோற்கடிக்கப்பட்டு கைதானவர்கள், அடிமையின்  மகளாகவோ, மகனாகவோ பிறந்தவர்கள்,  உயிர் வாழ்வதற்காக விலைக்கு விற்கப்பட்டார்கள். வாங்கிய கடனைத்  திருப்பித் தர முடியாதவர்கள், விதித்த தண்டனைத் தொகையை (அபராதம்) கட்ட முடியாதவர்கள் அடிமைகள் எனப்படுவர் என்று மனு தர்மம் போதித்தது.

அடிமை முறையில் இருந்தவர்கள் அடிமை, அடஞ்சி, படியாள், பண்ணையாள், குடிப்பறையன் எனப் பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர்.  கோயில்களுக்கு அடிமைகளைத் தானமாக வழங்கும் பழக்கமும் இங்கு இருந்தது. 12-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள கைலாசநாதர் நிலங்களுடன் அடிமைகளையும் தானமாகக்  கொடுத்ததாக  கல்வெட்டுச் செய்திகள் உள்ளதாக தமிழாய்வாளரகள் கூறுவதுண்டு.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அடிமைகள் அடிக்கடி மற்றவர்களுக்கு வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டதுடன், ஒரு உரிமையாளரிடமிருந்து மற்றொரு உரிமையாளருக்கு மாற்றியும் கொடுக்கப்பட்டனர். அடிமைகளை அடகு வைப்பது, விற்பது  நிலச்சுவான்தார்களின் உரிமையாக இருந்தது.

ஒரு அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருந்து தான் இறக்கும்போது,இந்த அடிமை முறையை தனது சந்ததிகளுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு பரம்பரை அடிமை முறைக்கு அவர்கள் குடும்பங்கள் இருந்தன. இந்த அடிமை முறை சென்னை மாகாணம்,  திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமணத்தின்போது, வரதட்சணையாக அடிமைகளையும் சேர்த்துக் கொடுத்ததாகவும்  (சீதனம்)  சிற்றரசர்கள் தங்கள் மனைவிமார்கள் கொண்டுவந்த அடிமைகளை வேலை செய்யப் பயன்படுத்திக் கொண்டதாகவும்  வரலாறு கூறுகிறது.

ஆடு, மாடுகளை வாங்குவதைப்போல,  நாட்டு  இளம் பெண்ணை விலைக்கு  வாங்கி அவர்களை அனுபவித்து விட்டு பணம்  உள்ள நிலச்சுவன்  தார்களுக்கு அவர்களை விற்றுவிடும் பழக்கத்தை போர்ச்சுகீசியர்கள்கையாண்டு வந்ததாகவும்  அடிமையாக வாங்கிய 7,8  பெண்களுடன் தான் நிலச்சுவான்தார்கள் உறங்கும்  பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்றும் பேராசிரியர் சிவசுப்ரமணியன்  தனது நூலில்  மேற்கோள்  காட்டுகிறார் என்ற செய்தியும் உள்ளன.

பண்ணையடிமைகளுக்கு  சவுக்கடி கொடுப்பது, சாணிப்பால்  தருவது, பெண்களின் மார்பகங்களைப் பிடித்துப் பிழிந்து ரத்தம்  வரவைத்து ரசிப்பது போன்ற  கொடூரங்கள் தஞ்சை மாவட்டத்தில் நிலவி வந்ததை விவசாய சங்கத் தலைவர்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர். மேற்சொன்ன  இவையெல்லாம் இன்றும் தொடர்கின்றனவா எனக் கேட்டால் இல்லவே இல்லை என சட்டெனச் சொல்லிவிடலாம்.

நவீன கொத்தடிமை முறை இன்றும் தொடர்கிறது  எனச் சொன்னால் காலிலும் கையிலும் விலங்கு போட்டிருக்கிறார்களா? தனியாக அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்களா? அவர்களின் குடும்பங்கள் நம்மைப் போன்ற  மனிதர்கள் வாழ்ந்து வரும் நகரங்களுக்கு வருவதேயில்லையா? வீட்டை  எழுதி வாங்கிக் கொண்டார்களா? என்ற கேள்விகளைக் கேட்கிறார்கள்.

மேற்கூறிய  வடிவங்கள் எதிலும் இப்போது கொத்தடிமைகள்  இல்லை. ஆனால்  கொத்தடிமை முறை இருக்கிறது. எப்படி?

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976-ன்படி  கடன் அல்லது உழைப்புச்  சுரண்டலுக்காக ஒருவரின் உரிமைகளையும்  சுதந்திரத்தையும்  இழப்பது  கொத்தடிமைத் தொழில் முறை எனப்படும்.  அத்துடன் கொத்தடிமைத் தொழில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சக் கூலி வழங்கப்படமாட்டாது. விருப்பப்பட்ட  வேலையைச் செய்யும் சுதந்திரம்  இருக்காது.  வேலை முடிந்தவுடன் விருப்பப்பட்ட இடங்களுக்குச்  சொல்லும் உரிமை இருக்காது.  அத்துடன் உழைப்பின் விளைவுகளை சந்தை நிலவரப்படி  விற்பனை செய்யும் உரிமையும் இருந்தது.  இதன்படி பார்ப்போமேயானால்  உழைப்புச் சுரண்டலுக்காக  மனிதர்களை வைத்து மனித வணிகம் நடந்து வருகிறது.

இந்த வணிகம்  தமிழகத்தில்   திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ஈரோடு, கோவை, கரூர், நெல்லை போன்ற  அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இதையும்  தாண்டி மனிதர்கள்  தமிழகத்தில் குஜராத்,  ஒடிசா, பிஹார் போன்ற வடமாநிலங்களிலிருந்தும் இந்த மனித வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மனித  வணிகம்

இந்திய  அரசமைப்பின் அடிப்படை உரிமைகள்  பிரிவு 23(1)  மனிதனைக் கட்டாயப்படுத்தி  வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்கிறது. அத்துடன்  இந்திய தண்டனைச் சட்டத்தின்பிரிவு  370 மனிதக் கடத்தலைத் தடுக்க  வேண்டும். அதில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை பின்வருமாறு   தரவேண்டும்  என்றும் கூறுகிறது?

* ஒரு நபரைக் கடத்தினால் : 7 முதல்  10  வருடங்கள் வரை  சிறை மற்றும்  அபராதம் 

* ஒரு குழந்தையைக் கடத்தினால் : 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை

* பொது ஊழியர் கடத்தலில் ஈடுபட்டால்: ஆயுள்  தண்டனை வரை  என்று கூறுகிறது.

பின்வரும் தொழில்களில்   கொத்தடிமை  முறை  உள்ளது.

கட்டுமானத் தொழிலில் வடமாநிலத் தொழிலாளர்களே இப்போது  அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். நமது தமிழகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் ஆகியோர்  செங்கல் சூளைகளிலும் அரிசி ஆலையிலும், கரிமூட்டம் போடுவதிலும், மாந்தோப்புகளைக் குத்தகைக்கு  எடுத்து  அதைப் பராமரித்து  சந்தைக்குக் கொண்டு வருவதிலும்  பேப்பர் பொறுக்குவதிலும், விவசாய நிலத்தில் உரங்கள் கிடைப்பதற்காக ஆடுகளைக்  கிடை போடுவதிலும் பேப்பர்  பொறுக்குவதிலும்  இந்த முறை இருக்கிறது.

அத்தோடு  தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, கரூர், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் வளரிளம் பெண்கள் சுமங்கலித் திட்டம் என்ற பெயரிலும் வேலை பழகுநீர் திட்டம் என்ற பெயரிலும் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த முறை ஒரு நவீன அடிமை முறையாகும்.  இதைப் புரிந்துகொள்வதற்காக நாம் புதிய பல பரிமாணங்களில்  யோசிக்க வேண்டும்

கொத்தடிமை  முறையிலிருந்து மீட்டல்

வட மாநிலத்திலிருந்து  வந்திருக்கும் தொழிலாளர்கள் ஒழுங்குபடுத்துவதற்கு   வெளிமாநில இடம்  பெயர்வுச் சட்டம் இருந்தாலும் அதன்படி வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பவர் எம்ப்ளாய்மென்ட் லைசென்ஸ், ரெக்ரூட்மென்ட் லைசென்ஸ், கான்ட்ராக்ட் லைசென்ஸ் என்ற  மூன்றுவித லைசென்ஸை வைத்திருக்க வேண்டும். இதன்படி   இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என்றால் ரெக்ரூட்மென்ட் லைசென்ஸ் வந்ததால் வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பதிவேட்டில் வரும்.

ஆனால்  90%  தொழிலாளர்கள் இங்கே உள்ள தொழிலாளர்களுக்கு உறவினர்கள் என்றும் அவர்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள்  என்று சொல்லப்பட்டு வருகிறது.  எனவே எந்தப் பதிவேட்டிலும் அவர்கள் வரமாட்டார்கள்  அதேபோல கம்பெனிகளில் 100 பேர்,  200 பேர் என்று வேலைக்கு  எடுக்கும்போது மட்டும் பதிவு செய்யப்படுகிறது.

ஆனால் 50க்குக் கீழ்  ஒவ்வொரு  கம்பெனிகளிலும் வேலை செய்து வருகிறார்கள்.  இவர்கள் பெயர்கள் எந்தப் பதிவேட்டிலும் இல்லை. திருப்பூர் மாவட்டத்திலுள்ள  433 ஸ்பின்னிங் மில்களிலும் இந்தி  வெளிமாநில தொழிலாளர்களை வைத்துதான் 12 மணி நேர வேலை என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு  வருகிறது.

இப்படி உழைப்புச் சுரண்டல் நடைபெற்று வருவதால்  (எந்த சட்டப் பயனையும்  கொடுக்காமல்)  இந்த முறையை மனிதக் கடத்தல் என்று  அழைக்காமல் வேறெப்படி அழைப்பது?  அத்துடன்  இத்தகைய வெளிமாநிலத் தொழிலாளர்கள்  30% மக்கள் முன்பணம் பெற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்  என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

மேற்கூறிய   தொழிலாளர்கள் அனைவரும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்துள்ளதால் இவர்களுக்கு உள்ளூரிலே வேலையளித்து வறுமையைப் போக்குவதற்குப்  பதிலாக உன் வறுமையைப் போக்குவதற்கு  வெளியூருக்குச் சென்று வேலை செய்தால் சரியாகிவிடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து, ஆசை வார்த்தையைக் காட்டி எந்தவித நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல் மொத்தமாக இப்படி அழைத்து வந்திருப்பதை குற்றம் எனவும், குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டம் 2013 கூறுகிறது.

மீட்பும் மறுவாழ்வும்

கடந்த காலங்களில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியர் மூலம் மீட்கப்பட்ட பின் ரூ.20,000 உதவித்தொகையும், போக்குவரத்துச் செலவும் உணவுப்படியும் மாநில அரசால் வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இன்றும் அவை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கின்றன.

அவையனைத்தும் இன்றோ, நாளையோ என்று சிதிலமடைந்து மக்களைப் பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது. செப்பனிட்டுத் தரக்கோரிய இம்மக்களின் குரல் பொறுப்பானவர்களின் காதுகளுக்குக் கேட்கவில்லை. இது இப்படியிருக்க இப்போது மீட்பு நடவடிக்கையில், மறுவாழ்வு நடவடிக்கையின் முழுப்பொறுப்பையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. வருவாய் கோட்டாட்சியர் மூலம் மீட்கப்பட்ட பின் அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு ரூ.20 ஆயிரம் போடப்படுகிறது. ஆண்களுக்கு ரூ. 1 லட்சமும், பெண்களுக்கு ரூ.2 லட்சமும், முன் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும் என்று விதிகளெல்லாம் இப்போது திருத்தி அமைக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் கொத்தடிமைகளாக இருந்தார்களா இல்லையா என்று சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்தபின் தான் வழங்கப்படும். இதுவும் மக்களுக்கு ஒரு கானல் நீர்தான்.

எல்லோருக்கும் தெரியும் நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்போது வரும்? எத்தனை ஆண்டுகளாகும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். ஆடு, மாடுகள் வாங்கப் பணம் கொடுக்கப்படுமாம். இதெல்லாம் எத்தனை பேருக்குக் கிடைத்துள்ளது என ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நிறைவாக, கொத்தடிமை முறையும் மனிதக் கடத்தலும் பல பரிமாணங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் தானாக வந்தாலும் பொய் சொல்லி அழைக்கப்பட்டிருந்தாலும் இந்த முறைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருப்பதால் இவர்களை விடுவித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்ய வேண்டும். இந்தியாவில் மட்டும் ஒன்றரை கோடி பேர் அடிமைகளாகவும், கடனை அடைப்பதற்கு கொத்தடிமைகளாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்ததின் விளைவாக சிவில் சமூகத்தை இணைத்து அரசு அமைப்புகள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மனிதக் கடத்தலுக்கு எதிரான குழு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 13 அரசு நிறுவனங்கள் இதில் உறுப்பினராகச் சொல்லப்பட்டிருக்கிறது. விரிந்த பரந்த பார்வையில் மனிதர்கள் கடத்தப்படுவதையும், குழந்தை உழைப்பு சுரண்டப்படுவதையும் பெண் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டலோடு பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையும் தொழிலாளர்கள் சட்டங்கள் மறுக்கப்படுவதையும் நாகரிக சமூகம் இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவு 23(1)-ன் படி கட்டாய உழைப்பில் மனிதனை ஈடுபடுத்தக்கூடாது என்பதை உண்மையாக்க கொத்தடிமை முறையைத் தடுப்போம். மனிதக் கடத்தலைத் தடுப்போம். அனைவரும் இணைந்து முழங்குவோம்.

- சுப. தென்பாண்டியன்

வழக்கறிஞர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close