[X] Close

காதலில் ஏமாற்றம்: கடும் மன அழுத்தத்திலிருந்து மீண்ட பெண்ணின் நம்பிக்கை வார்த்தைகள்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 14:40 pm
  • அ+ அ-

-நந்தினி வெள்ளைச்சாமி

சமீபத்தில் எனக்கு அறிமுகமான தோழி ஒருவர், தற்போது ஐதராபாத்தில் எம்பிஏ படித்து வருகிறார். 25 வயதாகிறது. 20 வயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான காதல் அனுபவத்தால் உண்டான மன அழுத்தம் மற்றும் பதட்ட மனநிலையிலிருந்து அவர் எப்படி மீண்டார் எனக் கூறுகிறேன்.

பட்டப்படிப்பு முடிந்தவுடனேயே தனியார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில்தான் உடன் வேலை பார்க்கும் ஒருவரைக் காதலித்துள்ளார். அதிக நேரம் அலுவலகத்தில் இருப்பதால், அந்த உறவின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், பேரதிர்ச்சியாக சில நாட்களிலேயே அவர் காதலித்த நபருக்கு ஏற்கெனவே திருமணமானது தெரியவந்தது.

அந்த அதிர்ச்சியில், என் தோழியால் அந்த உறவில் இருந்து வெளியேற முடியவில்லை. அவருடனேயே இருந்துவிடலாமா என்று கூட தோன்றியிருக்கிறது. அந்த நபருக்கும் திருமண உறவில் சிக்கல்கள் இருந்துள்ளன. விவாகரத்துக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த சமயம். 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் இந்த நிலைமை சரியாகிவிடும் என தோழி நினைத்துள்ளார்.

அவர் காதலித்த நபரும் தான் காதலில் உண்மையாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால், அவர்களின் காதல் அப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. ஆனால், அந்த நபர் தோழியை வார்த்தை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். அவருடைய செல்போனைப் பிடுங்கி சோதிப்பாராம். நாளாக நாளாக அவரின் கொடுமை அதிகமாகியுள்ளது.

பின்னர் சில நாட்களில், அந்நபர், தோழியிடமிருந்து விலக ஆரம்பித்துள்ளார். இனி தான் நினைத்தது நடக்காது என தெரியவந்தபோது, தன்னையே காயப்படுத்திக் கொள்ளலாமா என தோழி நினைத்துள்ளார். அப்படிச் செய்தால், அவர் தன்னுடன் இருப்பார் என்று நினைத்துள்ளார்.ஒருகட்டத்தில், இனி இந்த உறவு தேவையில்லை என வெளியில் வந்து வேறு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார்.

அந்த சமயத்தில், தோழியின் நண்பர்கள் தெரிந்தே அவர் தவறு செய்ததாக நினைத்து விலகியுள்ளனர். அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வந்தவுடன் தான் அவருக்கு உளவியலாக பிரச்சினைகள் ஆரம்பித்துள்ளன. தன்னைப் பின் தொடர்ந்து காதலித்த நபர், ஏமாற்றியதால் அவருக்குக் கோபம் அதிகமாக வந்தது. ஏதாவது பொருளை தூக்கியெறியும் அளவுக்கு கோபமும் அழுகையுமாக இருந்துள்ளார். தன் காதலருடன் சென்ற இடங்களை நினைத்து, தினமும் அழுவார்.

தந்தையின் அரவணைப்பின்றி, தாயிடம் வளர்ந்த அவர், பெரும்பாலும் அம்மாவிடம்தான் கோபத்தை வெளிப்படுத்துவார். உறவில் இருந்து வெளியேறிய பின்பும், அந்நபரின் சமூக வலைதளங்களுக்கு அடிக்கடி சென்று பார்ப்பார். மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூட தோன்றாது. பாதி நாள் தூங்கிக்கொண்டே இருக்கலாம் என நினைப்பாராம்.

3-4 மாதங்கள் இதே மனநிலையில் தான் இருந்தார். நல்ல வேளையாக, அவரது குடும்பம் அவருக்கு உறுதுணையாக இருந்தது. மனநல மருத்துவரைச் சந்திக்க முடிவெடுத்தார்.

ஆனால், மனநல மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளால் குழந்தையின்மை உருவாகும், திருமணம் சமயத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்று சிலர் கூறியுள்ளனர். அதனைத் தாண்டி தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஒருவரை அணுகினார்.

முதலில் அவருக்கு உடல் ரீதியாக பிரச்சினைகள் உள்ளனவா என சோதிக்கப்பட்டு அவை சரிசெய்யப்பட்டன. சிறுவயதில் ஏதேனும் குழப்பமான சம்பவங்களுக்கு ஆட்பட்டால், அதனால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளை சரிசெய்ய தெரபி மேற்கொள்ளப்பட்டது. மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான மருந்துகளை எடுத்தார். 4 மாதங்கள் மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். இப்போது முழுமையாக பிரச்சினைகளிலிருந்து வெளியில் வந்துவிட்டார். இருந்தாலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்வார்.

காதலால் ஏற்பட்ட அனுபவங்களால், காதலை அவர் வெறுத்து ஒதுக்கி விடவில்லை. இப்போது அவருக்கு யாரையாவது பிடித்திருந்தால், ஏன் அவரை பிடித்திருக்கிறது என மனதில் கேள்வி கேட்டுக்கொள்கிறார்.

மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகுவது, அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ஆகியவை இன்னும் சமூக ரீதியாக தவறான பார்வையில் அணுகப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் மனநல மருத்துவ பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகின்றன.

2017-18 ஆண்டில் உலக சுகாதாரம் மையம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் 6.5 சதவீதத்தினர் தீவிரமான மனநலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இதில், கிராமம், நகரம் என எந்த வித்தியாசமும் இல்லை. இந்தியாவில் மனநல மருத்துவர்கள், ஆலோசகர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பது குறித்து மனநல மருத்துவர் அசோகன் கூறுகையில், "நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்கு எதிர்மறையாகச் செல்லும்போது, பதட்ட மனநிலை உருவாகிறது. குறிப்பிட்ட விநாடியில் அதிகமாக பதட்டமடைவதைத்தான் 'Panic' என்கிறோம். இந்த மனநிலை அடிக்கடி உருவாகி மனதில் தங்கினால், அதனை 'Obsession' என்கிறோம். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத எண்ணங்கள் திரும்பத் திரும்பத் தோன்றும்.

திகில் திரைப்படங்கள், தவறு செய்துவிட்டு மாட்டிக்கொள்ளும் போது பதட்டம் உருவாகும். இதற்கு சில மூச்சுப் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

மன அழுத்தம் ஏற்படும் போது எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். நாம் எதற்கும் பயன்படாதவர் என்ற எண்ணம் தோன்றும். மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபட முடியாது. ஒரு எறும்பைக் கொன்றால் கூட குற்ற உணர்ச்சி ஏற்படும். சில குரல்கள் கேட்கவும் வாய்ப்புண்டு. அந்தக் குரல் நாம் இறக்க வேண்டும் என்றுகூட சொல்லும். நாம் வாழ தகுதியில்லாவர் என்ற எண்ணம் தோன்றும். எதிர்காலமே இல்லை என நினைப்பார்கள்.

மன அழுத்தம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும். குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுக்கும் பெண்கள், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தோன்றும்போது மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். வயதானவர்கள் பாதுகாப்பின்மை காரணமாக இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.

குழந்தைகளுக்கு மன அழுத்தம் வரும்போது சரியாகப் படிக்க மாட்டார்கள். விளையாட மாட்டார்கள். இளம் வயதினர் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தர வயதில், பண கஷ்டத்தால் ஏற்படலாம்.

சமூகம் குறித்து கவலைப்படாமல் இத்தகைய பிரச்சினைகளுக்கு மருத்துவரை உடனேயே சந்திக்க வேண்டும். மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனைப் பேசியே தீர்த்துவிட முடியாது. இது தவறான கருத்து. கவுன்சிலிங் இரண்டாம் பட்சம் தான். முதலில் மாத்திரைகள் தான். அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகள் உள்ளன.

வீட்டில் ஒருவருக்கு இத்தகைய பாதிப்புகள் இருக்கின்றன. மற்ற நோய்களுக்கு எப்படி மாத்திரை எடுக்கிறோமோ, அதேபோன்று தயங்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சினை" என்றார் அசோகன்.

மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்வது குறித்து, அதனால் பாதிக்கப்பட்டு மீண்ட என் தோழியின் வார்த்தைகளிலிருந்தே கூறலாம் என நினைக்கிறேன்

"நான் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து இப்போது நிறைய எழுதுகிறேன். சிலர் என்னிடம் வந்து அவர்களின் பிரச்சினைகளைக் கூறி சரிசெய்ய முடியுமா என்று கேட்கின்றனர். 5 ஆண்டுகள் தெரபி எடுத்திருப்பதால், நான் மருத்துவர் ஆகிவிட முடியாது. பேராசிரியர், நண்பர், அம்மாவால் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அறிவுரைகள் தான் வழங்குவார்கள். ஆனால், மருத்துவர்கள் அதற்கான தீர்வைக் கண்டறிய உதவி செய்வார்கள்" என்கிறார்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close