[X] Close

ஆட்டம், பாட்டம், ஓட்டம்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 11:22 am
  • அ+ அ-

-எம்.ரமேஷ்

செயின் பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற செய்திகளைப் போலவே வங்கிகளில் நிதி மோசடி என்பது மிகவும் வழக்கமான செய்தியாகிவிட்டது.

கடந்த வாரம் இந்திய வங்கிகளில் 2018-19 நிதி ஆண்டில் ரூ. 71,500 கோடி நிதி மோசடி நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டது. இது ஆச்சர்யத்தைத் தரவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து கடன் வாங்கி திருப்பிச்செலுத்தாதவர்கள் பட்டியலில் ரூ. 125 கோடி கடன் வாங்கிய நிதின் ஜெயந்திலால் சன்டேஸரா, சேதன் ஜெயந்திலால் சன்டேஸரா சகோதரர்களை சேர்த்துள்ளதாக அறிவித்தது பாங்க் ஆப் இந்தியா.

என்னடா இது ரூ.125 கோடி கடனுக்கெல்லாம் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறார்களே, இந்திய வங்கிகள் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டனவா என்ற ஆச்சர்யம் ஒருபக்கம் ஏற்பட, சரி இந்த சகோதரர்களின் பின்னணியை அலசிப் பார்ப்போம் என்று பார்த்தால், கடன் வாங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருப்பதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடிகளாக சன்டேஸரா சகோதரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

யார் இந்த சன்டேஸரா சகோதரர்கள்?

இவர்கள் 1980-களில் உருவான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள். மும்பையில் இளங்கலை வர்த்தகம் பயின்றவர்கள். சார்ட்டர்ட் அக்கவுன்டன்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் நிதின். சகோதரர் சேதன் முதலில் ஆரம்பித்தது தேயிலை வர்த்தகம். இவர்களின் கனவுகளுக்கு தீனி போடும் வகையில் மிகப் பெரிய வர்த்தகமாக தேயிலை தொழில் இருக்கவில்லை.

1985-ல் மும்பையைச் சேர்ந்த புளூடோ ஏற்றுமதி மற்றும் ஆலோசனை நிறுவனத்துடன் கூட்டு. அடுத்த நான்கு ஆண்டுகளில் புளூடோ நிறுவனத்தின் தலைவரானார் நிதின். 1991-ம் ஆண்டில் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த புளூடோவின் பெயர் ஸ்டெர்லிங் தேயிலை இண்டஸ்ட்ரீஸ் என மாற்றப்பட்டது. அப்போதும் தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் இவர்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட போதுமானதாக இருக்கவில்லை.

அடுத்ததாக இவர்கள் நுழைந்தது ஜெலடின் தயாரிப்பு. (ஜெலடின் என்பது, மருந்து, மாத்திரைகள் மீது கோட்டிங் பூச உதவும் பொருள்) அந்நாளில் ஜெலடின் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிதாக இல்லாத சூழலில் இவர்கள் நிறுவனத் தயாரிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஸ்டெர்லிங் பயோடெக்கின் முதல் தொழிற்சாலை 1990-களில் வதோதராவிலிருந்து 35 கி.மீ. தொவைவில் காரகாடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,000 கோடியாக உயர்ந்தது. உள்நாட்டில் 85 சதவீத சந்தையையும், சர்வதேச அளவில் 6 சதவீத சந்தையையும் இந்நிறுவனம் பிடித்திருந்தது. சர்வதேச அளவில் ஜெலடின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஐந்து நிறுவனங்களுள் ஒன்றாக ஸ்டெர்லிங் பயோடெக் திகழ்ந்தது.

சகோதரர்களின் தொழில் தாகம் தணியவில்லை. இதற்கேற்றார்போல 2003-ம் ஆண்டு நடைபெற்ற ``வைப்ரன்ட் குஜராத்’’ முதலீட்டாளர் மாநாடு இவர்களது தொழில் தாகத்துக்கு தூபம் போட்டது. தாஹேஜ் துறைமுகம் அமைக்கவும், ஜம்புசரில் சிறப்பு பொருளதார மண்டலம் உருவாக்கவும் ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

தொழிலின் லாபத்தை, அந்த லாபத்துக்கு காரணமாவர்களோடு பகிர்வதில் ஆர்வம் காட்டாத தொழிலதிபர்கள், பணத்தை செலவழிக்கத் தேடும் எளிதான வழி ஆடம்பர வாழ்க்கை. சண்டேஸரா சகோதரர்களும் இதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை. பாலிவுட் நட்சத்திரங்களுடன் தொடர்பு, தனி விமானம், சொகுசுக் கார்கள், வார இறுதி நாள்களில் மிகப் பெரிய அளவில் பார்ட்டி என்று வரி இறைத்தனர்.

குஜராத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில் மிகப் பிரம்மாண்டமாக செலவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்கள் அம்பாட் கிராமத்தில் 60 ஆயிரம் சதுர அடியில் கொண்டாட்டத்துக்கெனவே உருவாக்கிய பண்ணை வீட்டிற்கு வராத பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அரசியல், சினிமா, காவல்துறை உட்பட இன்னபிற அரசுத் துறை அதிகாரிகள் எனப் பல துறைகளிலும் பெரிய தலைகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது இவர்களை சமூகத்தில் மிக உயர்ந்த பிரமுகர்களாக வலம் வர உதவியது.

ரூ. 130 கோடிக்கு ஜெட்

இவர்களுடைய செய்தியாளர்கள் சந்திப்பிலும் அதிரடி அறிவிப்புகளுக்குப் பஞ்சமிருக்காது. திடீரென செய்தியாளர்களை அழைத்து புதிய ஜெட் பிளேன் வாங்கியதை அறிவித்தனர். இதன் விலையை சரியாகக் கூறுபவருக்கு பரிசு என்றும் அறிவித்தனர். குஜராத்திலேயே வளர்ந்து வந்த அதானி போன்ற தொழிலதிபர்களே அப்போது சொந்த உபயோகத்துக்கு விமானம் வாங்காத சூழலில் அவர்களை அசர வைக்கும் விதமாக ரூ. 130 கோடிக்கு விமானத்தை வாங்கி ஆச்சரியமூட்டினர்.

இந்தியாவில் கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவரும் முகேஷ் அம்பானி போல வளர வேண்டும் என்பதுதான் இவர்களின் லட்சியம். அதற்காக நைஜீரியாவில் எண்ணெய் கிணறுகளை குத்தகைக்கு எடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதற்காக இந்நிறுவனம் ஸ்டெர்லிங் ஆயில் நைஜீரியா என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் பேரில் ரூ. 1,500 கோடியையும் கடன் வாங்கியுள்ளனர். ஆனால், அது பெரும் தோல்வியைத் தழுவியது.

2011-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் முதன்முறையாக வரி ஏய்ப்பு செய்ததாக வீட்டுக் கதவை தட்டியதிலிருந்து இவர்களுக்கு இறங்குமுகம் ஆரம்பமானது. 2012-ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் ஒரு காசோலை மோசடி வழக்கை ஸ்டெர்லிங் பயோடெக் மீது தொடுத்தது.

இந்நிறுவன இயக்குநர்கள் அளித்த ரூ.58 கோடி மதிப்பிலான காசோலை பணம் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதாக வழக்கு தொடுத்தது. 2012 இறுதியில் இந்நிறுவனம் லண்டனில் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான முதிர்வு தொகை ரூ. 1,000 கோடியைத் திருப்பி தர முடியாத நிலைக்கும் ஆளானது. அப்போது நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள ஆரம்பித்தது.

அடுத்ததாக சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டீஸ். ஏறக்குறைய ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டது இந்த ஆலை. இதனால் 2008 ஆகஸ்ட் மாதம் இந்நிறுவன பங்கு ரூ. 196.50 என்ற விலையில் வர்த்தகமானது. ஓராண்டில் இது ரூ. 90.20-க்கு சரிந்தது. 2012-ல் பங்குச் சந்தை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் போலியான நிறுவனங்களை தொடங்கி, தங்கள் சொத்து மதிப்பை அதிகரித்து காட்டியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய 184 நிறுவனங்களில் 180 நிறுவனங்கள் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2012-ம் ஆண்டில் இந்நிறுவனம் வங்கிகளில் பெற்று திரும்ப செலுத்தாத ரூ. 6 ஆயிரம் கோடி வாராக் கடன் பட்டியலில் சேர்ந்தது. வங்கிகளுக்கு மட்டும் இந்நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை ரூ. 8,100 கோடி. மற்ற நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்து இந்நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ. 14,938 கோடி. இது நீரவ் மோடி மோசடி செய்த தொகையை விட அதிகம்.

டைரியில் சிக்கிய பெருந்தலைகள்

2011-ம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனையின்போது ஒரு டைரி சிக்கியது. அதில், யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

 சர்ச்சைக்குரிய இந்த டைரி, சகோதரர்களின் பல மோசடிகளையும், அரசு துறைகளில் இவர்களுடைய முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த உயர் நிலை தொடர்புகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

டைரியில் இடம்பெற்றவர்களில் முக்கியமானவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானா. இவர் வதோதரா காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தபோது சன்டேஸ்வரா சகோதரர்களுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.

சகோதர்களுக்குப் பல வகையிலும் இவர் உதவியிருப்பதாகவும், அதன் மூலம் அவர் ஆதாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற அஸ்தானாவின் மகள் திருணம் சன்டேஸ்வரா சகோதர்களின் பண்ணை வீ்ட்டில்தான் நடந்துள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக்கிடமிருந்து ரூ.3.5 கோடி தொகையை அஸ்தானா பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வங்கிகள் எப்போது திருந்தப் போகின்றன?

சன்டேஸரா சகோதரர்களின் அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் வங்கிகள்தான். வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்கியது கண்கூடாகத் தெரிகிறது. வங்கி அதிகாரிகளுக்கு இந்தச் சகோதரர்கள் அதிக அளவில் சலுகைகள், லஞ்சம் அளித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆந்திரா வங்கியின் இயக்குநர் அனுப் பிரகாஷ் கார்க் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைவிட அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை ஒரு முறை செலுத்தும் (ஓடிஎஸ்) முறை மூலம் செட்டில் செய்ய வங்கிகள் ஆர்வமாக இருந்துள்ளன. இதில் மொத்த கடனில் 66 சதவீதம் வரை தள்ளுபடி ஆகிவிடும்.

மீதம் ரூ.3,100 கோடியை மட்டும் செலுத்தினால் போதும் என்ற அளவுக்கு சலுகை காட்ட வங்கி அதிகாரிகள் தயாராக இருந்துள்ளனர். செல்வம் சிலரிடம் மட்டுமே குவிவதற்கு வங்கிகளும் அது வழங்கும் கடன்களும் ஒரு காரணம் என்பது இப்போதுதான் தெரிகிறது. பின்னே ஏன் வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரிக்காது.

எளியோருக்கு கடன் கொடுக்க ஆயிரம் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டு வங்கிகள், செல்வந்தர்களுக்கு மட்டும் வரி வழங்குவதற்கான காரணமும், கடன் அளிப்பதற்கு லஞ்சம் வாங்கும் போக்கு வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிகரிக்க காரணமும் பெரும்பணக்காரர்களின் வங்கி மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும்போதுதான் புரிகிறது. இன்னும் எத்தனை சண்டேஸராக்கள், மல்லையாக்கள், நீரவ் மோடிகளை வங்கிகள் ஒளித்துவைத்திருக்கின்றன என்பது போகப்போகத்தான் தெரியும் போலிருக்கிறது?

- ramesh.m@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close