[X] Close

அலசல்: இ-வேஸ்ட் எனும் புதிய அபாயம்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 11:07 am
  • அ+ அ-

தொழில்நுட்பம் நமது வாழ்க்கையின் அத்தியாவசியமாகி விட்டது. நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதையே அனைவரும் விரும்புகிறோம். ஸ்மார்ட்போனில் தொடங்கி, டேப்லெட் என நவீன கேட்ஜெட்களில் நாம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை நேசிக்கவே ஆரம்பித்து விட்டோம் இன்றைய நவீன உலகில் ஒன்றுக்கும் மேற்பட்ட டி.விக்கள், வீடுகளில் உள்ள அனைவருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் என வீடு முழுக்க நவீன கேட்ஜெட்களின் ஆக்கிரமிப்புதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புதிது புதிதாக சந்தைக்கு வரும் நவீன கேட்ஜெட்களை வாங்கும் போக்கும் அதிகரித்துவிட்டது. புதிதாக வாங்குவது சரி, பழைய ஸ்மார்ட்போனுக்கு, கம்ப்யூட்டருக்கு என்ன வழி?  இதை யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை.

கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் உருவான மின்னணுக் கழிவுகளின் அளவு 5 கோடி டன்.  இவை அனைத்துமே கம்ப்யூட்டர்கள், மானிட்டர்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் டிவிக்கள்தான். இவை தவிர வீட்டு உபயோகப் பொருள்களான பிரிட்ஜ் மற்றும் ஹீட்டர்கள், மைக்ரோவேவ் ஓவன்களும் இதில் அடங்கும்.

இதில் 20 சதவீதம் மண்ணில்தான் புதைக்கப்படுகின்றன. இதனால் நிலவளம் பாழாகிறது. இந்த மின்னணு கழிவுகளை (இ-வேஸ்ட்) முறையாகக் கையாளாமல் விடுவதும் அதிகரித்து வருவது சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரும் கேடாக உருவெடுத்து வருகிறது. மின்னணு கழிவுகள் அதிகம் உருவாகும் நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் அதாவது 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த அளவு 2020-ம் ஆண்டில் 50 லட்சம் டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொட்டப்படும் மின்னணுக் கழிவுகளால் ரசாயன நச்சு வாயு உருவாகி சுற்றுச் சூழல் சீர்கெடும். ஆர்செனிக், ஈயம், துத்தநாகம், நிக்கல், பேரியம், குரோமியம், பெரிலியம், காட்மியம் போன்ற உயிருக்கு உலை வைக்கும் உலோகக் கனிமங்கள் மண்ணில் கரைந்து நிலத்தை மாசுபடுத்தும். இதனால் நிலத்தடி நீரும் நஞ்சாகும்.

சீனாவில் கையூ மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு செரிமாண பிரச்சினை, நரம்பு தளர்ச்சி, மூச்சுத் திணறல், எலும்பு பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் இந்தப் பகுதியைச் சுற்றித்தான் மின்னணுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதன் பாதிப்புதான் இந்த மக்களுக்கு ஏற்பட்ட உடல் கோளாறுகளுக்குக் காரணம் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களும் பழையவற்றுக்கு மாற்றாக புதிய தயாரிப்புகளை அளிக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை தொடர்ந்து அளித்த வண்ணம் உள்ளன. இதனால் நன்கு செயல்படும் நிலையில் உள்ள எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை மாற்றும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் மலைபோல பழைய தயாரிப்புகளை குவித்து வருகின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் மின்னணு கழிவுகள் உருவாகின்றன.

இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவு உருவாக்கத்தில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அதைக் கையாள முறையான விதிமுறைகள் ஏதும் இங்கு கிடையாது.

இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து பிளாஸ்டிக் பைகளுக்கு தடை என அரசு அறிவித்தது. ஆனாலும் இன்னமும் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் இருந்து கொண்டுதான் உள்ளது. தடை விதிக்கப்பட்ட பொருளே இங்கு தாராளமாக புழங்கும்போது, உயிருக்கு உலை வைக்கும் மின்னணு கழிவுகள் குறித்து அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறதோ?

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close