[X] Close

ஹுண்டாய் வென்யு


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:58 am
  • அ+ அ-

ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி செக்மன்ட்டில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யுவி 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹோண்டா டபிள்யு ஆர்வி மற்றும் டாடா நெக்ஸான் என அனைத்து கார் நிறுவனங்களும் இந்த செக்மண்ட்டில் தங்களது கார்களை களமிறக்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்த செக்மண்ட்டில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில் தாமதமாக நுழைகிறது ஹுண்டாயின் வென்யு.

ஆனாலும், சந்தையில் உள்ள போட்டியை மனதில் வைத்து கூடுதல் அம்சங்கள், நவீன தொழில்நுட்பம், ஸ்டைலான லுக் என பல வகைகளிலும் வித்தியாசம் காட்டுகிறது இந்த வென்யு. இன்டர்நெட் கனெக்டட் கார் என்ற அம்சம் வாடிக்கையாளர்களிடையே வெகு விரைவில் சென்றடையும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது நான்கு விதமான இன்ஜின் கியர்பாக்ஸ்களைக் கொண்டுள்ளது. 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ், 1.2 லிட்டர் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆகியவற்றோடு புதிதாக 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகிறது. 

வெளித்தோற்றத்தைப் பொறுத்தவரை பார்க்க ஹுண்டாய் கிரெட்டா போலவே இருந்தாலும், தட்டையான பானட், செங்குத்தான முகப்பு மற்றும் அதிலுள்ள கேஸ்கேடிங் குரோம் லைனிங் கிரில், ஸ்பிளிட் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், வித்தியாசமான டெயில் லைட் டிசைன், மற்றும் 16 அங்குல அலாய் வீல்களின் டிசைன் ஆகியவை வென்யுவுக்கு பிரெஷ் லுக் தருவதாக உள்ளன.

வென்யு பார்ப்பதற்கு சிறியதாகத் தெரிந்தாலும் இந்த செக்மன்ட்டில் இதன் அளவுகள் சவாலாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹுண்டாய் ஐ20 பிளாட்ஃபார்மின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷனில் வென்யு வடிவமைக்கப்பட்டுள்ளது. உயரம் மிகவும் குறைவாக 1590 மிமீட்டரும், அகலம் 1770 மிமீட்டரும் நீளம் 3,995 மிமீட்டருமாக உள்ளன. கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 மிமீட்டராக உள்ளது.

ஹுண்டாய் வென்யுவைப் பொருத்தவரை வெளிப்புறத்தைக் காட்டிலும் கேபினில் தான் பல சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன. டேஷ்போர்டின் வடிவமைப்பே மிகவும் கச்சிதமாக உள்ளது. ஸ்டியரிங் பொருத்தப்பட்ட விதம் எந்த வகையிலும் சாலையின் மீதான ஓட்டுநரின் பார்வைக்குத் தடங்கலாக இல்லை.

பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல் மற்றும் அதன் ஃபினிஷிங் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன. 8.0 அங்குல தொடுதிரை டிஸ்பிளே, ஏசி வென்ட் ஆகியவையும் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுள்ளன. இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள விதம் போதுமான இடவசதியை வழங்குகிறது. பின்பக்க இருக்கை நடுவில் அமரும் மூன்றாவது நபருக்கும் போதுமான இடவசதி இருக்கும் வகையில் உள்ளது.

உயரமான நபர்களுக்கு வென்யுவில் அமர்வது சற்று சிரமத்தைத் தரலாம். மேலும் விண்டோ சிறியதாக இருப்பதாலும் விண்டோ லைனிங் உயரமாக இருப்பதாலும் எல்லோரும் வேடிக்கைப் பார்க்கும் வகையில் இல்லை. சன் ரூஃப் டாப் எண்ட் வேரியன்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. பூட் ஸ்பேஸ் 350 லிட்டர். பின் இருக்கைகள் 60:40 என்ற அளவில் மடிக்க முடிவதால் கூடுதல் ஸ்பேஸ் சாத்தியமாகிறது.

வென்யுவின் முக்கிய அம்சமே இதன் ப்ளூ லிங்க் தொழில்நுட்பம்தான். இதுதான் இந்தியாவின் முன்னணி கனெக்டட் காராகவும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடுதிரை டிஸ்பிளேவில் இன்பில்ட் சிம் வசதி  வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கார் ஓட்டுபவருக்கு பல்வேறு வேலைகளை மிகவும் எளிதாக்கியிருக்கிறது. ப்ளூலிங்க் தொழில்நுட்பத்தினால் மொபைல் மூலமாகவே கதவுகளை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம், இன்ஜினைக் கூட ஸ்டார்ட் செய்யலாம்.

hyundai 2.jpg 

இவையனைத்தையும் நெட்வொர்க் கனெக்டிவிட்டியில் இருந்தால் உலகின் எந்த மூலையிருந்தும் செய்ய முடியும். கூடவே காரின் இருப்பிடம், அது செல்லும் வேகம், டயரின் அழுத்தம் ஆகியவற்றையும்கூட துல்லியமாக அறியலாம். வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதன் டேஷ் போர்டில் உள்ளது.  

பெர்பாமென்ஸ் என்று பார்த்தால் வென்யு பக்கா சிட்டி ஃப்ரெண்ட்லி கார். இதன் காம்பேக்ட்சைஸ் நெருக்கடியான நகர சாலைகளில் நல்ல டிரைவிங் அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். மேலும் இதன் ஸ்டியரிங், கியர் பாக்ஸ் ஆகியவற்றின் செயல்பாடுகளும் ஸ்மூத்தாக உள்ளது.வென்யு அளவில் சிறியது என்பதால் பார்க்கிங் செய்வதும் மிகவும் எளிது.

வென்யுவின் இன்ஜினைப் பொருத்தவரை மிகஜென்ட்லியான பெர்பாமென்ஸைத் தருகிறது. அதிரடியாக ராஷ் டிரைவிங் செய்பவர்களுக்கு இந்தக் கார் ஏற்றதல்ல. ஆனால், ரிலாக்ஸாக அனுபவித்து ஓட்டக்கூடிய டிரைவர்களுக்கு சரியான கார். பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை டாப் வேரியன்ட்டில் 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங், ஹில்ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய அம்சங்களை வழங்குகிறது.

மேலும் இது கனெக்டட்கார் என்பதால் ரியல் டைமில் பல்வேறு அம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றன. டிராபிக் அப்டேட், மெயின்டனன்ஸ் அலர்ட், ரோட்சைட் அசிஸ்டன்ஸ், ‘எஸ்ஓஎஸ்’ எமர்ஜென்சி சர்வீசஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.  

வென்யுவில் டீசல் மாடலும், பெட்ரோல் மாடலும் அவற்றுக்கான தனித்துவ அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. எகானமி டிரைவிங்குக்கு டீசல் மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். மற்றபடி ஸ்போர்ட் மற்றும் அட்வென்சர் டிரைவிங்குக்கு பெட்ரோல் மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். வென்யு அதன் அம்சங்களைப் பொருத்து பல்வேறு வேரியண்ட்களாக வழங்கப்படுகின்றன.

இவற்றின் விலை ரூ.6.5 லட்சம் முதல் 11.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலும் வரவிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close