[X] Close

தர்மேந்திர பிரதான்: ஒடிசாவிலிருந்து ஒரு அமித் ஷா


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:38 am
  • அ+ அ-

-வ.ரங்காசாரி

நரேந்திர மோடியின் அசாதாரண தொடர் வெற்றிக்குப் பிறகு, அமித் ஷாவைச் சுற்றி பெரும் கவனம் குவிந்திருக்கிறது. மத்திய அமைச்சரவைக்குள் மோடிக்கு அடுத்த இடத்தில் அமித் ஷா அமர்ந்திருக்கும் நிலையில், பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து விரைவில் அவர் விலகிவிடுவார் என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. இது பாஜகவுக்கு வெளியே இருப்பவர்கள் மத்தியில் ஒரு கேள்வியை எழுப்புகிறது: ஆட்சியை மட்டுமின்றி கட்சியையும் தம் கையில் வைத்திருக்கிறது மோடி ஷா ஜோடி. இந்நிலையில், கட்சித் தலைவர் பதவியிலிருந்து அமித் ஷா விலகுவது மோடி ஷா பிடியைத் தளரச்செய்துவிடாதா என்பதே அது. உள்ளபடி, கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒருவரைத் தங்களுக்கேற்றபடி உருவாக்கியிருக்கிறது மோடி ஷா கூட்டணி. பதவிக்கு வெளியிலிருந்தும் இனி இவர்களைக் கொண்டு கட்சியை முழுமையாக மோடி ஷாவால் இயக்க முடியும். பாஜகவுக்கு இன்னும் வசமாகிவிடாத ஒடிஷா போன்ற ஒரு சின்ன மாநிலத்தில்கூட அவர்களால் எப்படிப்பட்ட தலைவரை உருவாக்க முடிந்திருக்கிறது என்பதற்கான உதாரணம்தான் தர்மேந்திர பிரதானின் கதை.

இன்றைக்கு 49 வயதாகும் தர்மேந்திர பிரதான் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்கிற பாஜகவின் மாணவர் அமைப்பின் மூலமாக அரசியல் வாழ்க்கையை 1983-ல் தொடங்கியவர். தர்மேந்திர பிரதானின் தந்தை தேவேந்திர பிரதான் ஒடிஷா பாஜகவின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவர். மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்பதோடு, வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சர் பதவியையும் வகித்தவர் தேவேந்திர பிரதான். தர்மேந்திர பிரதான் தன்னுடைய தந்தையின் அரசியலையே காலிசெய்து உருவானவர்.

ஒடிஷாவின் பல்லால்ஹரா சட்டமன்றத் தொகுதியில் 2000-ல் போட்டியிட்டு வென்றதுதான் தர்மேந்திர பிரதானின் முதல் வெற்றி. ஒடிஷா தொடர்ந்து பிஜு ஜனதா தளத்தின் கோட்டையாக இருந்துவரும் நிலையில், மாநில அரசியலில் கவனம் செலுத்துவதன் வாயிலாகப் பெரிய வளர்ச்சியை அடைய முடியாது என்று எண்ணிய தர்மேந்திர பிரதான், டெல்லி அரசியலைக் குறிவைத்து, 2004-ல் மக்களவைத் தேர்தலில் தேவ்கர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார். அது அவருடைய தந்தை முந்தைய தேர்தலில் வென்ற தொகுதி.

தந்தை அரசியலில் தொடர்ந்தால், தனக்கு மக்களவைத் தேர்தல் வாய்ப்பு கிடைக்காது என்ற சூழலில், தந்தைக்கு அரசியல் ஓய்வு கொடுத்து, தொகுதியைத் தனதாக்கிக்கொண்டு வென்றார். டெல்லிக்குச் சென்ற வேகத்தில் கட்சியில் தன் செல்வாக்கை வேகமாக வளர்த்துக்கொண்டார்.

கட்சியில் கொடுக்கப்பட்ட வேலைகளில் பிரதான் காட்டிய உத்வேகம் அடுத்தடுத்த நிலைகளுக்கு அவரை உயர்த்தியது. ஆர்எஸ்எஸ் மூலமாகக் கட்சிக்குள் வந்து பல காலமாகக் கட்சியை வளர்க்க உழைத்துக்கொண்டிருந்த மூத்த சகாக்களை பிரதானின் வேக வளர்ச்சி எரிச்சலுக்குள்ளாக்கியது. பிரதானும் பகையை வலிய உருவாக்கிக்கொள்பவர்தான்.

தன்னுடைய வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்கள் என்று கருதும் எவரையும் கட்டம் கட்டி ஒதுக்கிவிடுவது பிரதானின் இயல்பு. 2009-ல் தேர்தலில் போட்டியிட்டபோது பிரதான் தோற்றார். இந்த முறை தோல்விக்கு அவருடைய உட்கட்சிப் பகையும் ஒரு காரணம் என்று பேசப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பின் கட்சி வேலைகளில் மும்முரமானார் பிரதான். 2010-ல் கட்சியின் பொதுச் செயலரானார்.

இடையிலேயே பிஹார், ஜார்க்கண்ட், கர்நாடக மாநிலங்களில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினார். டெல்லியில் தன் செல்வாக்கை அதிகரித்துக்கொண்டதன் வாயிலாக 2012-ல் பிஹாரிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் சூழலை உருவாக்கிக்கொண்டார்; 2014-க்குப் பின் அமித் ஷாவின் நேரடி கவனத்துக்கு வந்த பின் பிரதானின் செல்வாக்கு மேலும் மேலும் உயரலானது. 2014-ல் மோடி அமைச்சரவையில் அவர் இணை அமைச்சர் ஆனார்.

கட்சியிலும் ஆட்சியிலும்…

கட்சி வேலைகளில் துடிப்பாக ஈடுபடுவதைப் போல கட்சிக்கு நிதி திரட்டுவதிலும் சாதுரியமாகச் செயல்படுபவர் பிரதான். இன்றைக்கு பாஜகவின் நிதியாதாரத் தூண்களில் ஒருவர் பிரதான் என்று சொல்கிறார்கள். டெல்லியிலும் மும்பையிலும் எல்லா தொழிலதிபர்களுடனும் நெருக்கமான உறவை அவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

அடுத்து, 2018-ல் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடையில் 2014-ல் மோடி அரசில் இணை அமைச்சராகச் சேர்ந்தார். ஒடிஷா மாநிலக் கடலோரத்தில் ரூ.6,000 கோடியில் திரவ எரிவாயு நிரப்பு ஆலையை நிறுவும் திட்டத்தை அங்கே கொண்டுவர பிரதான் உருவாக்கிய சூழல் மோடி - ஷாவிடம் மேலும் நெருக்கமான இடத்தை பிரதானுக்குப் பெற்றுத் தந்தது. அரசு - தனியார் கூட்டுப் பங்கேற்பில் உருவாக்கப்பட்ட இந்த ஆலை, கௌதம் அதானியின் கனவுகளில் ஒன்று. பெண்களைப் பிரதான இலக்காகக் கொண்டு மோடி அரசு திட்டமிட்ட ‘உஜ்வலா யோஜனா’ எரிவாயுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயலாக்குவதிலும் தன் திறனை வெளிப்படுத்தினார் பிரதான். விளைவாக, 2017 அமைச்சரவை மாற்றத்தின்போது கேபினட் அமைச்சராக அவர் பதவி உயர்த்தப்பட்டதோடு, திறன் வளர்ப்பு - தொழில் முனைவோருக்கான துறையும் அவருக்குக் கூடுதலாக அளிக்கப்பட்டது.

ஒடிஷா முதல்வர் பதவி நோக்கி…

ஒடிஷா அரசியலில் மேல் சாதியினர் ஆதிக்கம் அதிகம். மாநிலத்தில் தலித்துகள், பழங்குடிகளின் எண்ணிக்கை மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40% என்றாலும், மாநிலத்தில் வெறும் 10% எண்ணிக்கையை மட்டுமே கொண்ட பிராமண மற்றும் கயஸ்தா சமூகத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை பெரும்பாலான காலம் முதல்வர் பதவியில் இருந்திருக்கின்றனர். அதிலும், பிஜு பட்நாயக், அவரைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் என்று இரு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களின் வரலாறே நவீன ஒடிஷாவின் வரலாறாக இருந்துவருகிறது. பிஜு ஜனதா தளத்தைப் பொறுத்த அளவில் நவீன் பட்நாயக் காலம் வரை மட்டுமே அது நீடிக்கும் சக்தி உள்ளது; பெரிய சித்தாந்த பலம் ஏதும் இல்லாத, செல்வாக்கு மிக்க தலைவரை மட்டுமே பலமாகக் கொண்ட கட்சி அது. ஆக, அடுத்த நிலையில் தன்னை அங்கே வளர்த்துக்கொண்டிருக்கும் பாஜக அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஆட்சியைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

பிரதான் ஒடிஷா முதல்வர் பதவியைக் குறிவைத்திருக்கிறார். பாஜகவின் தொடக்க காலத் தலைவர்களான ஜூவல் ஓராம் போன்றவர்கள் இன்று அங்கே மவுசு இழந்துவிட்டனர். ஒடிஷா பாஜக துணைத் தலைவர் பதவியில் இருந்தவரும், அடுத்த செல்வாக்கு மிக்க தலைவராக உருவாகிவந்தவருமான ராஜ் கிஷோர் தாஸ், மேற்கு ஒடிஷாவில் செல்வாக்கு மிக்க இன்னொரு தலைவரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெருவெற்றி அடையக் காரணமாக இருந்தவருமான சுபாஷ் சவுகான் இருவரும் சில மாதங்களுக்கு முன் பாஜகவிலிருந்து விலகிவிட்டனர். இருவருமே பிரதானின் ஆதிக்கமும் தொல்லைகளுமே கட்சியிலிருந்து விலகக் காரணம் என்றார்கள்.

பத்தாண்டுகளின் தலைவர்களில் ஒருவர்

கட்சித் தலைவராக பசந்த பாண்டா (பிராமணர்), துணைத் தலைவராக சமீர் மொஹந்தி (காயஸ்தர்) ஆகியோர் பதவி வகிக்கும் நிலையில், மாநிலத்தில் கிட்டத்தட்ட சரி பாதி மக்கள்தொகையைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவரான தனக்கே வாய்ப்பு அதிகம் என்று நம்புகிறார் பிரதான். “கட்சியில் மட்டும் இல்லை; ஊடகங்களில் யாரேனும் அவரைச் சங்கடப்படுத்தும் கேள்விக்குள்ளாக்கினாலும்கூட, அவர்களுக்குப் பதிலளிக்க மறுப்பதோடு, கேள்வி கேட்டவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர் பணிபுரியும் ஊடக நிறுவனத்திடமே பேசி அவர்களை மாற்றிவிடும் பண்பைக் கொண்டிருக்கிறார் பிரதான். இந்த ஜனநாயக விரோதப் போக்குதான் கட்சிக்குள்ளும் வெளியிலும் அவருக்குப் பெரிய எதிரி” என்கிறார்கள் பிரதானின் விமர்சகர்கள்.

ஆனால், பாஜகவைப் பொறுத்த அளவில், கட்சிக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் ஒருவர் எப்படிப்பட்ட உறவைப் பராமரிக்கிறார் என்பதைப் பொருத்தே அவரது எதிர்காலம் அமையும். பிரதான் ஆர்எஸ்எஸ்ஸுடன் நல்லுறவில் இருக்கிறார். மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் விபின் பிஹாரி நந்தாவுடன் நல்ல நெருக்கத்தை பிரதான் பராமரிக்கிறார். அதேபோல, பாஜகவின் தேசியத் தலைவரான அமித் ஷாவிடமும் நல்ல நெருக்கம் அவருக்கு இருக்கிறது. ஒடிஷா அரசியலில் மட்டும் அல்ல; தேசிய அரசியலிலும் அடுத்த பத்தாண்டுகளில் வேறொரு இடத்துக்கு பிரதான் நகர்வார்” என்கிறார்கள். சூழல்கள் பிரதானுக்குக் கனிந்திருப்பதாகவே தோன்றுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close