[X] Close

மாநிலங்கள் பிரச்சினையில் மத்திய அரசு? தவிர்க்கப்பட்டது தலையீடு!


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:31 am
  • அ+ அ-

-எஸ்.கோபு

பிஏபி திட்டத்தின் இரண்டாவது கட்டம் தொடர்பாக தமிழக-கேரள அரசுகள் விவாதம் நடத்தியபோது, தண்ணீர் பகிர்வும், மின் உற்பத்தியுமே பிரதானமாக இருந்தது.இரண்டாவது கட்ட திட்டத்தில் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் தமிழகத்துக்கு 14 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அதில் சிறிய அளவு நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது. எனினும்,  திட்டத்தை செயல்படுத்தவே இரு மாநிலங்களும் அதிகம் ஆர்வம் காட்டின.

திட்டத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தமிழக-கேரள அரசுகளிடையே உடன்பாடு ஏற்படாததால், விவகாரம் மத்திய அரசிடம் சென்றது. அப்போது  மத்திய உள்துறை அமைச்சராக இருந்த  கோவிந்த வல்லப பந்த்  தலைமையில், டெல்லியில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் சார்பில் முதல்வர் காமராஜர், சி.சுப்பிரமணியம் மற்றும் அரசுப் பொறியாளர்களும், கேரளா சார்பில் முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை, பாசனத் துறை அமைச்சர் மற்றும் பொறியாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பது எனவும்  தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, இரு மாநிலக்  குழுக்களும் டெல்லி சென்றன.

மத்திய அரசு தலையிடுவதா?

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பகிர்வில், மத்திய அரசு தலையிடுவதை தமிழகம் விரும்பவில்லை. மத்திய அரசின் தலையீடு இல்லாமலே தீர்வுகாண  தமிழகம் விரும்பியது. பேச்சுவார்த்தைக்கு முந்தைய நாள்,  டெல்லியில் கேரள அரசின் அதிகாரப்பூர்வ அலுவலகமான கொச்சின் இல்லத்தில், அம்மாநில  முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளையை சந்தித்துப் பேசினார் சி.சுப்பிரமணியம். அவர் தாணுப்பிள்ளையிடம்,  “கேரளா முதல்வராக இருந்து முடிவு எடுக்காமல், ஒரு தேசியத் தலைவராக இருந்து நீங்கள் முடிவெடுக்க வேண்டும். மேலும், சிறிய அளவி

லான தண்ணீர் பங்கீடுதான் பிரச்சினைக்கு உரியது. அதை முன்னிலைப்படுத்தி, இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும், பெரிய அளவிலான தண்ணீர் பயன்பாட்டை இரு மாநிலமும் இழந்து விடக்கூடாது” என்றார்.

பழம் கனிந்தது...

தொடர்ந்து இருவருக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், மத்திய அரசின் தலையீடு இல்லாமலேயே,  இரு மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. பரம்பிக்குளம் திட்டமும், ஆழியாறு திட்டமும் இணைக்கப்பட்டு பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் (பிஏபி) என்று அழைக்கப்பட்டது.

அதில், தமிழகத்துக்கு 30.50 டிஎம்சி நீரும்,  கேரளத்துக்கு 19.55 டிஎம்சி நீரும்,இரு மாநிலங்கள் பயனடையும் வகையில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.  மத்திய அரசின் தலையீடு இல்லாமல் உடன்பாடு எட்டப்பட்டதாக, பின்னர்  காமராஜரிடம் நேரில் தெரிவித்தார் சி.சுப்பிரமணியம்.

இதையடுத்து, திட்டத்தின்  இரண்டாம் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்றன. முதல்கட்டத்துடன் முடங்கிப் போகும் நிலையில் இருந்த இந்த திட்டம், இரு மாநில அரசுகளின் ஆளுமைத் திறனால் உருவெடுத்து, தற்போது 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பிஏபி திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் கட்டப்பட்ட அணைகள், வெட்டப்பட்ட சுரங்கப் பாதைகள்,  உருவாக்கப்பட்ட நீர் மின் உற்பத்தி நிலையங்கள், தண்ணீர் எடுத்து செல்லும் வாய்க்கால்கள் ஆகியவை பிரம்மிக்கத்தக்கவை.

ஆழி போன்ற ஆறு `ஆழியாறு’

கோவை மாவட்டத்தில் கோடைமழையும், கொங்கன் மழையும் குறை வைக்காததால்,  மேற்குத் தொடர்ச்சி மலையில், ஆனைமலை பகுதியில் உருவாகிய சிற்றோடைகள், சிறுநதிக் கூட்டங்கள் ஒன்றிணைந்து  ஆழியாறு என்னும்  பெயரில் சமவெளியில் பாய்கிறது. முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு,  கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். பிஏபி திட்டத்தில் முதலில் கட்டி முடிக்கப்பட்ட அணை ஆழியாறு அணை.  1962-ல் இந்த அணை திறக்கப்பட்டது.

தற்போது  வால்பாறை சாலை அமைந்துள்ள வில்லோனி மலைக்கும், அணையின் ‘ஜீரோ பாயிண்ட்’  அமைந்துள்ள புளியன்கண்டி மலைக்கும் இடையே ஆழியாறு அணையைக்  கட்ட  பொறியாளர்கள் முடிவு செய்தனர்.  தலைமைப் பொறியாளர் ஆனந்த ராவ்  தலைமையிலான பொறியாளர்கள் இந்த அணையைக்  கட்டும் பணியை  1957-ல்

தொடங்கினர். ஏறத்தாழ 5 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணி, 1962-ல் நிறைவு பெற்றது.இந்த அணையின் மொத்த நீளம் 10,500 அடி. உயரம் 120 அடி.  கொள்ளளவு 3.86  டிஎம்சி. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப் பகுதிக்குள் 76 சதுரமைல்கள் அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது.

மேல் ஆழியாறு, காடம்பாறை வனப் பகுதிகளில் மழை பெய்யும்போது வழிந்தோடி வரும் தண்ணீர், சித்தாறு, சின்னாறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம் ஆகியவை சேர்ந்து இந்த அணையில் 2.51 சதுர மைல் பரப்புக்கு கடல்போல தேங்கி நிற்கும். இந்த அணையின் அடித்தளம் கடல்மட்டத்திலிருந்து  930  அடி உயரத்தில் ஆரம்பித்து,  1,050 அடி உயரத்தில் முடிகிறது. ஆழியாறு அணையிலிருந்து வெளியேறும் ஆழியாறு ஆறு,  சுமார் 37 கிலோமீட்டர் பாய்ந்து,  கேரளாவில் பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. இந்த அணை ரூ.3.50 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டது.

சிங்காரத்தோப்பு கிராமம்...

ஆழியாறு  அணை கட்டியுள்ள பகுதிக்குள்  ஓடிய ஆழியாறு ஆற்றின் கிழக்கு கரையில்,  பல நூறு ஏக்கர் பரப்புக்கு வயல்வெளிகளும், மா, பலா, கொய்யா பயிரிடப்பட்ட தோப்புகளும் சூழ்ந்த  சிங்காரத்தோப்பு என்ற சிறிய கிராமம் இருந்தது.

தற்போது தண்ணீர் தேங்கி நிற்கும் அணைப் பகுதியில் இருந்த சிங்காரத்தோப்பு கிராமத்தில் வசித்து வந்தவர்கள் இரவாலர்கள். மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினரான இவர்கள், விவசாயம் மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் ஆயிரம் காணி நெல் வயல்களும் இருந்தன. இவையனைத்தும் ஆழியாறு அணை கட்டப்பட்டபோது, தண்ணீரில் மூழ்கின.

அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான தோப்பு, இக்கிராமத்தில் இருந்தது. அதில், கொய்யா,  மா, பாலா, வாழை விவசாயம் நடைபெற்றது. சுமார் 200 குடிசைகளில்  இரவாலர்கள்  வாழ்ந்தனர். இந்த ஊருக்கு மேற்கே ஆழியாறு ஆறு சென்றது. ஆழியாறு  அணையில் தண்ணீர் குறையும்போது வெளியே தெரியும் கல்பாலமும், கருங்கல் சாலையும் இந்த அணைக்குள் மறைந்த ஒரு கிராமத்தின் வரலாற்று எச்சங்களாக  இன்றும் உள்ளன.

பிஏபி பயணம் தொடரும்..

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close