[X] Close

ஒரு கலைஞன் கண்டறியப்பட்ட கதை


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 10:42 am
  • அ+ அ-

-த.ராஜன்

தமிழின் மகத்தான நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் ப.சிங்காரத்தின் நாவல்கள் தவிர்க்க முடியாதவை. இன்றைய தேதியில் அவரது நாவலை நான்கைந்து வெவ்வேறு பதிப்புகளில் வாங்க முடியும். அவ்வளவு மவுசு உருவாகியிருக்கிறது. அவர் காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் நாவல் பிரசுரமானது.

ஒரு பத்திரிகையாளராகத் தனியறையில் தன் வாழ்நாளைக் கழித்துவிட்டு ஆர்ப்பாட்டமில்லாமல் சென்றுவிட்டார். தன் ஆயுளில் இரண்டே நாவல்களை மட்டும் எழுதிச்சென்ற ப.சிங்காரத்தைப் போல அமெரிக்காவில் ஒரு கலைஞன் இருக்கிறான். தன் ஆயுளில் இரண்டே ஆல்பங்களை மட்டும் வெளியிட்ட ரோட்ரிகஸ்… சிக்ஸ்டோ ரோட்ரிகஸ்!

ரோட்ரிகஸைப் பற்றி எந்த விவரமும் தெரியாமல் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா, அவர் இறந்துபோய்விட்டதாக நம்பிக்கொண்டிருந்தது. ஒருநாள் நம் முன்னே உயிரோடு தோன்றி நமக்காகப் பாடுவார் என்று யாரும் கற்பனைசெய்திருக்க வாய்ப்பில்லை.

போலவே, தனது தாய்நாட்டில் ஐந்து பிரதிகள்கூட விற்பனையாகாத தனது ஆல்பம், இன்னொரு கண்டத்தில் ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகி பிரபலமாகிக்கொண்டிருக்கிறது என்று ரோட்ரிகஸும் நினைத்துப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் தனது வயிற்றுப்பாட்டுக்கு அன்றாடக்கூலியாக இருந்தார்.

இந்த விசித்திரமான கதையை 2012-ல் ‘சர்ச்சிங் ஃபார் சுகர் மேன்’ என்று ஆவணப்படமாக இயக்கினார் மாலிக். ரோட்ரிகஸ் எனும் அற்புதமான கலைஞனை அமெரிக்காவும் உலகமும் அறியச்செய்தார். இந்த ஆவணப்படத்துக்காக அடுத்த ஆண்டு ஆஸ்கர் கிடைத்தது. ஆஸ்கர் வாங்கிய அடுத்த ஆண்டு தனது 36-வது வயதில் தற்கொலைசெய்துகொண்டு மாலிக் இறந்துபோனது இன்னொரு சோகக் கதை.

கலைஞனைத் தேடும் படலம்

தென்னாப்பிரிக்கா பயங்கர கெடுபிடியில் இருந்த காலகட்டம் அது. இருண்டுகிடந்த சமூகத்துக்கு ரோட்ரிகஸின் இசை உத்வேகமூட்டுகிறது. ரோட்ரிகஸின் வரிகள் அவர்களின் மனதை இலகுவாக்குகின்றன. ரோட்ரிகஸின் சில பாடல்களை தென்னாப்பிரிக்க அரசு தடைசெய்யும் அளவுக்குப் போகிறது. அதன் பிறகு இன்னும் அங்கே பிரபலம் ஆகிறார்.

தென்னாப்பிரிக்காவில் இசைக் கடை நடத்திவரும் ஸ்டீபன் தனது கடைக்கு வந்த அமெரிக்கருக்கு ரோட்ரிகஸைத் தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. தென்னாப்பிரிக்காவின் எல்லா வீடுகளிலும் நுழைந்த ஒரு அமெரிக்கக் கலைஞனை அமெரிக்கருக்குத் தெரியவில்லை என்பது அவருக்கு வியப்பூட்டுகிறது.

ரோட்ரிகஸின் ‘சுகர் மேன்’ பாடலால் தனது பெயரும் சுகர் மேன் என்று மாறும் அளவுக்குப் புகழ்பெற்ற ஸ்டீபன், பிறகு தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறார். ரோட்ரிகஸின் ஆல்பங்கள் எதிலும் அவரது புகைப்படம் தவிர வேறு குறிப்புகள் ஏதும் இல்லை என்பது அப்போதுதான் உறைக்கிறது. ஆப்பிரிக்கர்கள் மத்தியில் ரோட்ரிகஸ் ஒரு மர்மநபராக வலம்வருகிறார்.

ஸ்டீபனோடு பத்திரிகையாளர் கிரெய்கும் தேடும் படலத்தில் இணைந்துகொள்கிறார். பாடல் வரிகளில் வரும் இடங்களைத் தேடி அலைகிறார்கள். லண்டனில் தேடுகிறார்கள். ஆம்ஸ்டர்டாம் போகிறார்கள். ‘தி கிரேட் ரோட்ரிகஸ் ஹன்ட்’ எனும் இணையதளத்தை உருவாக்குகிறார்கள். இறந்த மனிதனின் விவரங்களைத் தேடியலையும் அவர்களுக்கு, அவர் உயிரோடு இருப்பதாகத் தெரியவருகிறது. ஆவணப்படத்தில் இந்த இடம் நம்மை நெகிழச்செய்கிறது.

தென்னாப்பிரிக்காவில் ஹீரோ

தென்னாப்பிரிக்காவுக்கு அழைக்கிறார் ஸ்டீபன். ‘அடேய், மகா கலைஞா! அமெரிக்காவில் கட்டிட வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாயே. தயவுசெய்து ஒருமுறை தென்னாப்பிரிக்கா வா. வந்துபார். இங்கே உன்னை எவ்வளவு பேர் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்!’ தோளுக்கு மேல் வளர்ந்த தன் பெண் பிள்ளைகளோடு ஆப்பிரிக்கா வந்திறங்குகிறார் சுகர் மேன். பணம் கட்டிக் கச்சேரி பார்க்க வந்த பெருங்கூட்டம் நம்ப முடியாமல் ரோட்ரிகஸ் மேடையில் தோன்றுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

அரங்கம் நிரம்பி வழிகிறது. இதையெல்லாம் நம்ப முடியாமலும், தன் ஊரில் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதாலும் ஜனத்திரளை வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறாள் மகள். ரோட்ரிகஸ் மேடையேறியதும் ஆர்ப்பரிப்பில் அரங்கம் அதிர்கிறது. காட்டுத்தனமான ஆர்ப்பரிப்பு. அதை அப்படித்தான் வர்ணிக்க முடியும். ‘ஐ ஒண்டர்’ பாடலுக்கான முன்இசை தொடங்கிய பிறகும் ஆர்ப்பரிப்பு அடங்கியபாடில்லை.

கூட்டம் ஓயட்டும் என மேடை காத்திருக்கிறது. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், பத்து நிமிடம். ம்ஹூம்… ‘அவர் பாட வேண்டியதில்லை; அவரைப் பார்த்ததே போதும் என்பதாக மகிழ்ந்தார்கள்’ என்று வர்ணிக்கிறார் ரோட்ரிகஸின் மகள். கூச்சலுக்கு நடுவே ரோட்ரிகஸ் சொல்கிறார்: ‘என்னை உயிரோடு வைத்திருப்பதற்கு நன்றி!’ அவர் பாடத் தொடங்கியதும் கூட்டத்துக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. உன்மத்தத்தில் சொக்கிப்போகிறார்கள்!

ரோட்ரிகஸுடன் பணிபுரிந்தவர்களெல்லாம் அவரை உயர்வாக மதிக்கிறார்கள். எப்படியாவது இந்தக் கலைஞன் கவனம்பெற வேண்டும் எனத் துடிக்கிறார்கள். நோபல் பரிசு வென்ற பாப் டிலனெல்லாம் ரோட்ரிகஸ் முன்னால் ஒன்றுமில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால், அமெரிக்கர்களின் செவிக்கு அப்போது எதுவும் எட்டவில்லை. யாரும் கேட்டுப்பார்க்கக்கூட தயாராகயில்லை.

இப்போது ரோட்ரிகஸ் அமெரிக்காவிலும் பிரபலம். உலகம் முழுக்கவும். ரோட்ரிகஸின் மென்மையான, கூச்சம் மிகுந்த, உள்ளொடுங்கிய சுபாவம் அவரது இசையிலும் கலந்திருக்கிறது. துள்ளலிசையும்கூட ஆன்மாவைத் தொடுகிறது. ஸ்டீபனும் கிரெய்கும் தனிநபராகத் தேடியலைந்து கலைஞனுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள். ஆவணப்படத்தின் மூலம் ரோட்ரிகஸின் இசைக்கு அவர் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் கிடைக்கச்செய்திருக்கிறார் மாலிக். ஒரு கலையை இன்னொரு கலையால் மீட்டெடுத்திருக்கிறார்!

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close