[X] Close

'மில்லியன் சீதா' - கோவையில் அசத்திய அனிதா ரத்னம்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 11:50 am
  • அ+ அ-

இந்தியாவின் வரலாற்றில் தவிர்க்க முடியாதது இதிகாசமான ராமாயணம். பாடல்கள், நடனம், ஓவியங்கள், அனிமேஷன், தொலைக்காட்சித்  தொடர்கள், திரைப்படங்கள் என வெவ்வேறு  வடிவங்களில் விளக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது ராமாயணம். நாட்டின் ஆதி காவியமாகக் கருதப்படும் இந்த நூல் குறித்து,  இன்னமும் பலர் ஆய்வுகளை மேற்கொண்டுதான் வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடனக் கலைஞரும், பேச்சாளர், எழுத்தாளர், மேடைக்கலைஞர் என பன்முகத் திறன்கொண்ட வருமான முனைவர் அனிதா ரத்னம், `மில்லியன் சீதா' என்ற தலைப்பில் ராமாயண நடன நிகழ்ச்சியை தயாரித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான `பிக்கி புளோ' சார்பில் இந்த நாட்டிய நிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி. அரங்கில் நடைபெற்றது. வேறுபட்ட கருத்துள்ள இரு ஆடவர்களுக்கு இடையே நடந்த போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த காவியத்தின் மையப் புள்ளியே சீதாதான். ராமாயணக் காவியத்தில் சீதாவின் பங்கு மிகப் பெரியது. இந்த இதிகாசத்தில் நிபுணத்துவம் கொண்ட அனிதா ரத்னம், பாடல்கள், நடனம், உரைநடை மூலம்,  ராமாயணத்தின் உண்மையான கதாநாயகியான சீதாவின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தினார்.

anita ratnam 2.jpg

ஓர் இளவரசியாக வாழ்க்கையை தொடங்கிய சீதா, தந்தைக்கு மகளாக, நாட்டின் ராணியாக,  ராமரின் மனைவியாக, இரு குழந்தைகளின் தாயாக பல அவதாரங்களை எடுத்து, சாதாரண குடும்பப் பெண்கள் படும் அனைத்து துன்பங்களையும் எதிர்கொண்டு, வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை, தனது மிகச் சிறந்த நடிப்பால் விளக்கினார் அனிதா ரத்னம்.

ராமாயணத்தில் சீதாவின் பங்கை மையமாகக் கொண்டு, மகளிர் வாழ்வில் எப்படி முன்னேற வேண்டும் என்பதை மில்லியன் சீதா நாட்டியம் மூலம் எடுத்துரைத்தார்.  ராணியாக வாழ்க்கையை நடத்த வேண்டிய சீதாவின் துயரங்களை, தனது நடிப்பால் அனிதா ரத்னம் வெளிப்படுத்தியபோது பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.

கருத்து, ஆராய்ச்சி, உரை, செயல்வடிவம் என பலவும் அனிதா ரத்னத்தின் பங்களிப்புதான். அதேசமயம், ஹரிகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, சந்தியா ராமனின் ஆடை வடிவமைப்பு, சரண்யா கிருஷ்ணனின் இசை, வேதாந்த பாரத்வாஜ், விஜய் கிருஷ்ணன், என்.கே.கேசவன், பிந்து மாலினி, எல்.சுபாஸ்ரீ ஆகியோரது  ஒலி வடிவமைப்பு, விக்டர் பால்ராஜின் விளக்கு வடிவமைப்பு ஆகியவை

இந்த நிகழ்ச்சியை மெருகூட்டின. மொத்தத்தில், ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்வையாளர்களை அனிதாரத்னம் கட்டிப்போட்டிருந்தார் என்று கூறுவதில் மிகையில்லை.

அனிதா ரத்னம்; ஓர் அறிமுகம்!

கடந்த 40 ஆண்டுகளில், 27 நாடுகளில் ஆயிரம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் அனிதா ரத்னம். பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி போன்ற நடனங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர், சங்கீத நாட்டிய அகாடமியின் செயற்குழு உறுப்பினர். இந்த அகாடமிதான், வெளிநாடுகளில் நடைபெறும் நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவில் உள்ள 7 பல்கலைக்கழகங்கள் உள்பட பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராகவும் இவர்  பணியாற்றி வருகிறார்.  விஸ்வ கலா ரத்னா, சங்கீத நாட்டிய அகாடமி விருது மற்றும் பல  சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள இவர், ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளில் நடுவராகவும்  செயல்பட்டுள்ளார். அன்னை தெரசா பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close