[X] Close

முதுமையும் சுகமே 08: தனக்கு இருப்பதே தெரியாத மறதி


08

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 10:36 am
  • அ+ அ-

-டாக்டர் சி. அசோக்

“உங்க அப்பா அம்மா இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்யலைன் னாலும் பரவாயில்லை, உபத்திரவம் பண்ணாம இருக்கச் சொல்லுங்க”, பொழுது புலர்ந்தும் புலராதது மாக இப்படிச் சொன்னார் ராகவனின் மனைவி!

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா, நடக்கறதே வேற...” பதிலுக்குச் சீறினான் ராகவன்...

“உங்க குடும்பத்துக்கு வெட்டி ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை... உங்க அப்பா பண்ணியிருக்கிற வேலையைப் பாருங்க...  ஃபிரிட்ஜில் யூரின் போயிருக்கிறார்...”

காலையில் சமைத்து, தானும் கிளம்பி, பிள்ளைகளையும் கிளப்ப வேண்டிய அவசரத்தில் இருக்கும் ராகவனின் மனைவி பதிலுக்கு வெடித்து அழுக...

நடந்தது என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் ராகவனின் தந்தையை என்னிடம் அழைத்து வந்தார்கள். பக்குவமாக விசாரித்ததில் புரிந்துகொண்டேன், பாத்ரூம் கதவு என நினைத்து அவர் திறந்தது ஃபிரிட்ஜின் கதவை. 77 வயதான அவருக்கு வந்திருப்பது ‘Dementia’ என்கிற ‘மறதி நோயின்’ முற்றிய நிலையான Alzeimers Disease என்று கண்டுபிடித்தோம்... 

5 கோடிப் பேர்

‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்பது மூத்தோர் மொழி என்றால் ‘மூத்தவர்களும் குழந்தைகளே’ என்பது இன்றைய மொழி. ஆனால், இன்று குடும்பத்தில் மூத்தவர்கள் நடத்தப்படும் விதம் எப்படி இருக்கிறது என்று மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்... ராகவனின் குடும்பத்தினருக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்கும் எதிர்காலத்தில் உதவலாம்.

டிமென்சியா என்கிற மறதி நோயும், அதைத் தொடர்ந்துவரும் AD என்கிற Alzeimers Disease இளம் தேங்காய் முற்றிய தேங்காயாக மாறுவது போன்ற முற்றின மறதி நோய். டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60 - 70 % பேர் Alzeimers Disease நோயால் பாதிக்கப்பட சாத்தியம் உண்டு.

இன்றைய தேதிக்கு உலகம் முழுவதும் 5 கோடி நோயாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே 2030-ம்  ஆண்டுக்குள் 8.2 கோடிப் பேர் மறதி நோயால் பாதிக்கப்படுவார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆய்வை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், இதனால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக இருப்பவை பொருளாதாரத்தில் வளம் குன்றிய நாடுகளும் நம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளும்தாம்.

ஏன் மறக்கிறது?

நம் மூளையின் வெளிப்பகுதி Cerebral Cortex, உட்பகுதியான Hippocampus ஆகியவை நினைவாற்றலின் மையமாக உள்ளன. சிலந்தி வலைப்பின்னலைவிட நுட்பமான வலைப்பின்னலாகப் பின்னப்பட்டிருக்கும் மூளை செல்களான நியூரான்களில் நினைவாற்றலானது படிப்பறிவு, பட்டறிவு, பழக்கவழக்கங்கள், செய்யும் தொழில் ஆகியவற்றைப் பொறுத்து ஐம்புலன்கள் மூலம் சேகரமாகும். தேவைப்படும்போது வெளிக்கொணரும்.

இதுவே வயோதிகத்தில் நினைவாற்றலானது வந்திருக்கும் நோய்கள் மற்றும் உட்கொள்ளும் மருந்துகளால் பாதிக்கப்படுகிறது.

வயதாகும்போது இயற்கையாகவே மூளை நரம்பு செல்களின் இயக்கம் குறைவதால், அதை இயக்கும் அசிட்டைல்கோலின் (Acetylcholine) போன்ற மூளை திரவங்கள் குறைவதால் மனச்சோர்வு, பல்வேறு நோய்கள், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் போன்ற பல காரணங்களால் மறதி ஏற்படத்தான் செய்யும்.  இயற்கையாக ஏற்படும் மறதியை நம்மால் புரிந்துகொள்ள முடியும், சம்பந்தப்பட்டவர்களே மருத்துவர் களிடம் சொல்லவும் செய்வார்கள். தகுந்த பயிற்சிகள், மருந்துகள் மூலம் இதைச் சரி செய்ய முடியும்.

ஆனால், டிமென்சியா  என்கிற ‘மறதி’ ஒரு நோய் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. இது பல நோய்களின் தொகுப்பால் அல்லது பல நோய் அறிகுறிகளின் தொகுப்பால் வரும் மறதி என்று சொல்லலாம்.

அறிகுறிகள்

டிமென்சியா என்கிற மறதி நோயில் தனக்கு இப்படி மறந்துபோகிறது என்பதையே நோயாளிகளால் உணர முடியாது. இந்த மறதி நோயில் கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஒன்று அல்லது இரண்டு பிரச்சினைகளாவது இருக்க வேண்டும்.

1. சரியான புரிதலுடன் பேச இயலாமை, உதாரணத்துக்கு பிறந்த ஊரான ‘பழைய பாளையம்’ போக வேண்டும் என்று சொல்ல நினைத்ததை மறந்து, ‘எங்க அப்பா பிறந்த ஊருக்குப் போகிறேன்’ என்று சொல்லலாம். அதாவது சரியான வார்த்தையைச் சரியான இடத்தில் உச்சரிக்கச் சிரமப்படுவார்கள் (Aphasia).

2. அதிக பழக்கமான வேலையையே செய்யத் தெரியாமல் தவிப்பது (Apraxia). உதாரணம்: குளிக்கறேன் பேர்வழி என்று துண்டை எடுத்துக்கொண்டு  சமையல்கட்டுக்குப் போய் வாங்கிக் கட்டிக்கொள்வது. (ஆரம்பத்தில் சொன்ன ராகவனின் அப்பா நிலையும் இதுதான்)

3 . தெரிந்த  பொருள்களையோ (அ) நபர்களின் பெயர்களையோ நினைவில் கொண்டுவர இயலாமை.

ஆக மொத்தத்தில், நாம் புரிந்து கொள்ள  வேண்டியது டிமென்சியா என்கிற மறதி நோய் படிப்படியாக நம் நினைவாற்றலைச் சேதப்படுத்தக் கூடியது என்பதையே.

இந்த டிமென்சியா மறதி நோய் ஒருவருக்கு இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கான எளிய பரிசோதனைகள் என்னென்ன? எந்த மாதிரியான உணவு, உடற்பயிற்சி, மருந்து தேவை என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

டிமென்சியாவால் ஏற்படும் பிரச்சினைகள்

# நினைவாற்றல்

# சிந்தனை வளம்

# மொழிவளம்

# முடிவெடுக்கும் ஆற்றல்

# அன்றாட வேலைகள்

# குணாதிசயங்கள்

# பிறரிடம் பழகுவது

# கற்றுக்கொள்ளும் ஆற்றல்

# ஒத்துப்போவதில் பிரச்சினை

# புரிந்துகொள்வதில் பிரச்சினை

# உடல், மனம், சமூகம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை நோயாளியும் அவரின் குடும்பத்தினரும் சந்திக்க வேண்டி வரும்.

டிமென்சியா ஏற்படக் காரணங்கள்

# மூளையில் நடக்கும் வேதி மாற்றங்கள், மூளை திரவங்களின் குறைபாடு

# மூளையில் உள்ள நினைவாற்றலுக்கான செல்கள் அழிவது, திசுக்கள் சுருங்கி போவது (Diffuse Cerebral Atrophy)

# மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டப் பாதிப்பு (Vascular Dementia)

# மூளைக் கட்டி (அ) ரத்தக்கட்டி போன்றவை

# அதிக மது, தைராய்டு சுரப்பு குறைபாடு, வைட்டமின் குறைபாடு, மூளை நடுக்கு வாதத்தைத் தொடர்ந்து தொற்றுநோய்கள், மருந்துகளால், மனச்சோர்வால் ஏற்படலாம்

டிமென்சியா: 3 நிலைகள்

நிலை 1

# பழக்கமான இடம், பெயர்கள், தொலைபேசி எண்கள் மறந்து போகலாம்.

நிலை 2

# சமீபத்திய சின்ன சின்ன நிகழ்வுகள் மறந்து போகலாம்

# பெயர்களை நினைவுகூர்ந்து அழைப்பதில், கோவையாகப் புரிதலுடன் பேசுவதில் குழப்பம் இருக்கும்

# சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல லாம்  (அ) கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கலாம்.

நிலை 3

# வாழ்க்கை அடுத்தவரை சார்ந்ததாக மாறிப்போகும்

# அன்றாட வேலையைச் செய்ய இயலாமை

# நினைவாற்றல் பேரளவு குறைந்து போவது

# எங்க இருக்கிறோம், யார் வந்தார்கள், போனார்கள் என்பதே முற்றிலும் மறந்து போகும்

# டிமென்சியா வந்தவர்களைத் துணையின்றித் தனித்து விடுவது ஆபத்து

கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர்
மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close