[X] Close

சிகிச்சை டைரி 08: கையுறை போட்டுக்கிட்டு தாலி கட்டச் சொல்லு!


08

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 10:38 am
  • அ+ அ-

-வா.ரவிக்குமார்

புத்தாயிரத்தின் செப்டம்பர் மாதத்தில் எனக்குத் திருமணம். ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இரண்டு கைகளிலும் திடீரென்று சிறுசிறு கொப்பளங்கள் தோன்றின. உடலில் வேறு எங்கும் கொப்பளங்கள் இருக்கவில்லை. கொசு கடித்ததால்கூட இப்படி ஆகும்... இல்லையில்லை ஏதோ பூச்சிக்கடியால்தான் இப்படி ஆகியிருக்கிறது...

ஊர்வன ஏதோவொன்றின் தீண்டல்தான் இதற்குக் காரணமாக இருக்கும் என்று உறவினர்கள், நண்பர்கள் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தனர். ‘எல்லாம் சரியாயிடும்’ என்று மனைவியாகப் போகிறவர் ஆறுதல் கூறினார். நிரந்தரப் பணியில்லாத எனக்குப் பெண்ணைக் கொடுப்பதில் விருப்பமில்லாமல் வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவர்களுக்கு ‘சாண்ட்விச்’ கொடுத்ததுபோல் என்னுடைய கைப்புண் அமைந்துவிட்டது.

மஞ்சள் அரைத்துப் பூசுவது, வேப்பிலை அரைத்துத் தடவுவது போன்ற கைவைத்தியங்கள் எவையுமே கைப்புண்ணின் மேல் பலனைத் தரவில்லை. சரியாகத் திருமணத்துக்கு ஒரு மாதம் இருந்தது. புரசைவாக்கம் மதார்ஷா எதிரில் இருந்த பிரபலத் தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அகஸ்டினிடம் சென்று காட்டினேன். அடுத்த மாதம் எனக்குத் திருமணம் என்பதையும் கூறினேன். ‘முதலில் பயப்படாதீர்கள். பதற்றம் அடைவதை நிறுத்துங் கள். இது சாதாரண ஃபங்கஸ் இன்ஃபெக்ஷன்தான். உங்களுடைய திருமணத்துக்குப் பத்து நாட்களுக்கு முன்பாகவே சரிசெய்துவிடலாம் கவலைப்படாதீர்கள்’ என்றார்.

வாடாத கொப்பளங்கள்

அவருடைய பேச்சு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. சிகிச்சை ஆரம்பித்தது. ரத்த மாதிரிகளில் பூஞ்சை எதுவும் பரவியதற்கான அறிகுறி இல்லை. தோலின் மேலடுக்கில் தான், அதனால் நிச்சயம் சீக்கிரமே குணமாகிவிடும் என்றார் மருத்துவர். விதவிதமான மாத்திரைகள் போடுவது, களிம்பைப் பூசுவது நடந்தாலும். கொப்பளங்கள் மட்டும் வாடவே இல்லை. நான்கு நாட்களுக்கு ஒரு முறை சென்று மருத்து வரிடம் காண்பிப்பேன். அந்த மருத்துவருக்கே இந்தப் பூஞ்சை சவால் விடுவதுபோல் சீக்கிரம் குணமாகாமல் போக்குக் காட்டியது.

திருமணப் பத்திரிகையை நீட்டும்போது கைகுலுக்க முயல்ப வர்களிடம் கையில் புண்ணாக இருக்கிறது என்று நாசுக்காகத் தவிர்த்துவிடுவேன். ‘புண்ணா இருந்தா என்ன?’ என்று வலுக் கட்டாயமாகக் கை குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர் சிறுவயதிலிருந்து உடன் இருக்கும் நண்பர்கள்.

‘கல்யாணத்துக்குள்ள எங்க சரியாகப் போவுது… பேசாம அவ னுக்கு ரெண்டு கிளவுஸ் வாங்கிக் கொடுங்க. அதைப் போட்டுக்கிட்டு தாலி கட்டட்டும்…’ என்று மறைமுகமாகப் பேசி, சிலர் சந்தோஷப் பட்டுக்கொண்டனர்.

அந்த இரண்டு களிம்பு

திருமண நாளுக்குச் சரியாக ஒருவாரம் இருந்தது. மருத்துவர் என்னுடைய கையில் இருக்கும் கொப்பளங்களைத் தீவிரமாக ஆராய்ந்து, இந்த முறை இரண்டு களிம்புகளைப் பரிந்துரைத்தார். ஒரு களிம்பைப் பூசி பத்து நிமிடம் ஆனவுடன் கையை சோப்பு போட்டுக் கழுவிட்டு, ஈரத்தைப் பருத்தித் துணியில் ஒற்றியெடுத்துவிட்டு இன்னொரு களிம்பைப் பூச வேண்டும் என்றார். அப்படியே செய்தேன்.

முதல் நாளின் மாலையிலேயே காய் போல் இருந்த கொப்பளங்கள் இளக ஆரம்பித்தன. அடுத்த நாளின் மாலையில் இளகியவை வதங்கத் தொடங்கின. இரண்டாம் நாள் மருத்துவரிடம் காண்பிக்க ஓடினேன். பரிசோதித்த மருத்துவர், “அவ்வளவுதான்... சரியாகிவிட்டது.  தைரியமாகப் போய் நலங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கையில் சந்தனம் பூசிக்கொள்...’’ என்றார்.

அவருக்கு ஏற்கெனவே திருமண அழைப்பிதழைக் கொடுத்திருந்தேன். மீண்டும் நீங்கள் அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்தினேன். உன்னுடைய திருமணத்துக்கு வாழ்த்துகள் என்றவர் முதல் முறை சந்திக்கும்போது மட்டுமே ‘கன்சல்டிங் ஃபீஸ்’ வாங்கினார். அதன்பிறகு வாங்கவே இல்லை. இன்றைக்கும் புரசைவாக்கம் நெடுஞ்சாலையைக் கடக்கும் போதெல்லாம் அவரு டைய கிளினிக்கை என்னுடைய கண்கள் நன்றியோடு பார்க்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close