[X] Close

கால்நடை மருத்துவப் படிப்பு ஏன், எதற்கு, எப்படி?


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 10:26 am
  • அ+ அ-

மருத்துவத் துறையில் கால்நடை மருத்துவம் ஒரு தனிப் படிப்பு. பொதுவாகக் கிராமப்புறங்களில் கால்நடை மருத்துவத்தின் தேவை இன்றுவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. காரணம் கிராமப்புறத்தில் வேளாண்மையை அடுத்து பால் உற்பத்தி, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவை முக்கியத் தொழில்களாக உள்ளன. அத்துடன் கால்நடைகளை நோய்த் தொற்று எளிதாகத் தாக்கும். அதேபோல் நகர்புறங்களில் நாய் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அயல்நாட்டு நாய் வகைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

அதனால் தொழிற்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் பொது மருத்துவத்தில் காட்டும் ஈடுபாட்டை, கால்நடை மருத்துவத்திலும் காட்டலாம். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் இந்த வேலை முடிந்துவிடுவதாக நினைக்க வேண்டாம். சிங்கம், புலி, சிறுத்தை, யானைக்குக்கூட சிகிச்சை அளிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.

அழிந்து வரும் காட்டுயிர்களைப் பேணுதல், அவற்றுக்கு ஏற்படும் புதிய நோய்களைக் கண்டறிவது என இந்தப் படிப்பின் வீச்சு பெரிது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு இதில் உண்டு. இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்கு சிறந்த வாய்ப்பு இந்தப் படிப்பு.

யாரெல்லாம் கால்நடை மருத்துவம் படிக்கலாம்?

# கால்நடைகள் மீதான பற்றும் சூழலியல் பாதுகாப்பின் மீது ஈடுபாடும் கொண்டவர்கள்

# வெயில், மழை பாராமல் உறைவிந்து குடுவையை மாட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக சுற்றிவரத் தயங்காதவர்கள்.

# கால்நடைகளையும் அவற்றை வளர்ப்பவர்களையும் நேசிப்பவர்கள்.

# கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பவர்கள்.

# ‘மாட்டு டாக்டர்' எனும் கேலி பேச்சைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.

கால்நடை மருத்துவம் படிப்பதில் உள்ள சாதகங்கள் என்ன?

நீட் (NEET) தேர்வு மதிப்பெண் தேவையில்லை. அரசு கல்லூரிகளில் மட்டுமே கால்நடை மருத்துவப் படிப்பு வழங்கப்படுவதால் கல்விக் கட்டணம் மிகக் குறைவு. மனித மருத்துவ பட்டப் படிப்புக்கு இணையாக

ஐந்தரை ஆண்டுகளைக் கொண்டது. மனித மருத்துவத்தைப் போன்றே கால்நடை மருத்துவத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன.

தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு என நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. இளநிலை பட்டப்படிப்பை முடித்ததும் முதுநிலை, முனைவர் பட்டம் போன்ற மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன.

கால்நடை மருத்துவர் ஆவதால் கிடைக்கும் சாதகங்கள் என்னென்ன?

# அரசு வேலையில் சேரலாம்.

# பெருநகரத்தில் வசிப்பவர்கள் செல்லப்பிராணி மருத்துவமனையை அமைத்துக் கொள்ளலாம்.

# சிறுநகரங்களில் வசிப்பவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று கால்நடை மருத்துவ சேவையை அளிக்கலாம்.

# அலுவலகச் சூழலில் பணிபுரிய விரும்புவர்கள் வங்கிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிலும் வேலை பெற வாய்ப்பு உள்ளது.

# கால்நடைப் பண்ணை ஆலோசகராகச் செயல்பட்டு வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம்.

# முதலீடு இட்டு கால்நடைப் பண்ணை வைத்து தொழில் முனைவோராகவும் உருவெடுக்கலாம். பல இளைஞர்களுக்கு வேலை வழங்கலாம்.

 

கால்நடை மருத்துவப் படிப்புக்கு http://www.tanuvas.ac.in/ எனும் இணையதளத்தில் விண்ணக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.06.2019, பிற்பகல் 5.45 மணி.

 

கி. ஜெகதீசன், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: jagadeesankrishnan@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close