[X] Close

ஒருநிமிடக் கதை:  பிச்சைக்காசு


oru-nimida-kadhai-pitchai-kasu

  • kamadenu
  • Posted: 11 Jun, 2018 11:08 am
  • அ+ அ-

லதா ரகுநாதன்

பாபு வாசலில் தயங்கி நின்றான்.

"யார் அது வாசல்லே" கம்பீரமான குரல் சற்றே தூக்கிவாரிப் போடவைத்தது.

"அய்யா..கண்ணம்மா பையன்...வேலைக்கு வரச்சொன்னீங்கன்னு ஆயா சொல்லிச்சு"

" வா....உள்ளே வா..."  - சுழல் நாற்காலியில் வெற்றிலையை கொதப்பியபடி வக்கீல் அய்யா, கைகளில் ஒரு தடிமனான புத்தகத்தை சோடாபுட்டி வழியே மேய்ந்து கொண்டிருந்தார்.

பக்கத்து அறையிலிருந்த குமாஸ்தா ரங்கன், எட்டிப்பார்த்து பின் நிதானமாக உள்ளே வந்தார்.

"இவனை எதுக்காக வரச்சொன்னேள்" பல வருடப் பழக்கம் கேள்வி கேட்கும் உரிமையைக் கொடுத்திருந்தது.  

" ரங்கா....பையன் யார் தெரியுமோ?"  - மிகப்பெரிய க்ரிமினல் வக்கீலின் சாதாரண பேச்சிலேயே சஸ்பென்ஸ் தொக்கி நின்றது.

" நல்லா தெரியுண்ணா. நம்ம வீட்ல வேலை செய்யும் கண்ணம்மாவோட பையன். நீங்க தர உதவி பணத்துலே காலேஜ் படிப்புவரை வந்திருக்கான். இன்னும் ஒரு வருஷம். ஜம்முனு பேருக்குப் பின்னாடி டிகிரி போட்டுப்பன்...." குரலில் லேசான அசூயையுடன் விவரித்தார்.

" அது சரி, இப்ப இங்க இவன் எதுக்கு...? வேற உதவி கேட்டா?" -   அடக்கமுடியாத எரிச்சல், குரலில் தொக்கி நின்றது.

" ஆமாண்டா ரங்கா....சனி ஞாயிறு இங்க வேலைப் போட்டு தர முடியுமானு கண்ணம்மா கேட்டா. நான்தான் ஆகட்டும் வரச் சொல்லுன்னு சொன்னேன். இங்க பாரு, உனக்கும் வயசாயிடுத்து. இந்த பைல் கட்டை அடுக்குறது, புஸ்தங்களை வால்யூம் பார்த்து வரிசையா வைக்கிறது, இப்படி வேலை செய்யட்டும். நம்ம கோடீஸ்வர்ராவ் கேஸ்ல கோர்ட்டிலே நீ வால்யூம் மாத்திக் கொடுத்து நான் முழிச்சது நினைவிருக்கு இல்ல...."

ரங்கன் பதில் பேசாமல் பஞ்சகச்சத்தை ஒரு இறுக்கு இறுக்கி கோபத்தைக் காட்டினார்.

"உன் பேரு என்ன சொன்னே. போ வெத்தலப்பெட்டி காலியாயிடுச்சு. ரங்கன் பணம் கொடுப்பான். நல்ல தளிர் கும்பகோணமாப் பாத்து ஒரு கவுளி வாங்கிட்டுவா. போ, சட்டுனு வா..."

பாபு வெற்றிலையோடு திரும்பினான். " அய்யா...இந்தாங்க பாக்கி சில்லறை..."

" ரங்கா, வா...வந்து இந்தப் பிச்ச காசை வாங்கு"

பாபு சற்றே அதிர்ந்தான்.

மிச்ச காசா...பிச்ச காசா....சே, வெற்றிலை வாய் நமக்குத்தான் குழறிக் கேட்கிறது. கொடுத்த வேலையைப் பார்க்கத்தொடங்கினான்.

" நம்ம கேசவன் உங்களைப் பார்க்க வந்திருக்கான். புதுசா தார் போட்ட ரஸ்தாளி , பலான்னு ஏகமா பொருளோடு நன்னி சொல்ல வந்தானாம். பின்ன இருக்காதா. எப்பேர்ப்பட்ட கேஸ். அண்ணா இல்லேன்னா கொறஞ்சது பத்து வருஷம் உள்ளே போயிருப்பான்ல...”

பாபு பக்கத்து அறைக்கு அனுப்பப்பட்டான்.

கதவு மூடப்பட்டது. சில மணி நேரங்களுக்குப்பின் கதவு திறக்கும்போது அவன் கேட்ட வார்த்தைகள்..

" ரங்கா....அந்த ஒண்ணை மாமிகிட்ட கொடுத்து சேஃப்லே வைக்கச்சொல்லு.இந்தப் பிச்ச காசைத் தனியே வை....."

இப்போது முகத்தெளிவாக அந்த வார்த்தை காதில் விழுந்தது.  அந்த வார்த்தை, பிச்சைக் காசு.

கண்ணம்மா பையிலிருந்து வெளியே எடுத்துவைக்கப்பட்ட டப்பாக்களில் இருந்து வந்த வாசம் அவன் பசியைக்கிளறியது.

" யார் வூட்டு சோறு..."

" அய்ய.. புதுசா கேக்குற. நம்ம வக்கீல் அய்யா வூட்டு சோறுதான்"

" எனக்கு பிடிக்கலை, நா அங்கே வேலைக்குப் போக மாட்டேன்.."

" அட லூசுப் பயலே...உன் படிப்பே அய்யா பிச்ச தானே...என்னா பேச்சு பேசற?"

" அதேதான்.. அதுதான் எனக்கு புடிக்கலை"

பாபு தான் கேட்டதையும் பார்த்ததையும் சொன்னதற்கு  கண்ணம்மா சிரித்தாள்.

”அய்ய...என்ன புள்ளடா...சரி இந்த வெள்ளிக்கிழமை அய்யா வூட்டாண்ட வா. அப்புறம் பேசு..."

வெள்ளிக்கிழமை வக்கீல் அய்யா வீட்டு வெளி வாசலில் பெரிதாக போடப்பட்ட கோலத்தில் ஆரம்பித்து இரட்டை வரிசையாக வீட்டுக் கதவு வரை பிச்சைக்காரர்கள்.

வக்கீல் அய்யாவின் குரல் கேட்டது...

" ரங்கா...அந்தப் பிச்சைக் காசைக் கொண்டுவா...."

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close