[X] Close

ராஜஸ்தானில் சுட்டெரிக்கும் வெயில் 123 டிகிரி கொளுத்துகிறது: உலகின் வெப்பமான நகரம் சுரு


123

  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 09:44 am
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தில் 123 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. உலகிலேயே வெப்பமான பகுதியாக சுரு என்ற நகரம் உள்ளது.

வட மாநிலங்களில் இந்தக் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ராஜஸ்தானில் வெயில் மண்டையைப் பிளக்கிறது. மிக அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமையன்று 123 டிகிரி வெயில் சுட்டெரித்தது. கடந்த திங்கட்கிழமை 122 டிகிரியாக இருந்தது. அதிகாலை 4 மணிக்கே வெப்பம் 100 டிகிரியைத் தொடுகிறது.

அதிகாலையிலேயே மின்தடை தொடங்குவதாகவும் இதனால் மேலும் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஹவுசிங் போர்டு காலனியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ராதே ஷர்மா என்பவர் கூறினார். அன்றாடம் வீட்டுக்குத் தேவையான பொருட்களுடன் 10 கிலோ ஐஸ் கட்டிகளை வாங்கி வந்து வெப்பத்தில் இருந்து தப்பிக்க தண்ணீர் தொட்டிகள், ஏர்கூலர்களில் அவற்றைப் போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொளுத்தும் வெயிலால் உலகிலேயே அதிகம் வெப்பமான பகுதியாக சுரு நகரம் உள்ளது. மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கமே மாறியுள்ளது. வெயில் தொடங்குவதற்கு முன் அதிகாலையிலேயே தங்கள் உணவை முடித்துக் கொள்கின்றனர். எண்ணெய், அசைவ உணவுகளை தவிர்த்து பச்சைக் காய்கறிகள், வெங்காயம், மோர், தயிர், சப்பாத்தி ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுகின்றனர். காலை 10.30 மணிக்கு மேல் வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்கின்றனர். இதனால், சாலைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் இல்லை. சுருவின் அருகே உள்ள பினாசர், போதி, சதாரா, ஜஸ்ராசர் ஆகிய இடங்களிலும் வெயில் வாட்டுகிறது.

வெப்பத்தின் கடுமையால் ஏற்படும் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோல் ஒவ்வாமை போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டு சுரு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெயில் தொடர்பான நோய்களால் சுமார் 70 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கோகா ராம் தெரிவித்தார்.

டாக்டர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான வெயிலின் தாக்கத்தாலும் தண்ணீர் கிடைக்காததாலும் பறவைகள் மரங்களில் இருந்து விழுந்து உயிரிழக்கும் பரிதாபமும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது. உச்சபட்ச வெயில் காரணமாக தந்தூரி அடுப்புக்குள் இருப்பதுபோல உணர்வதாக சுரு நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close