[X] Close

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்த தன்னார்வலர் கைது: மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே பரபரப்பு


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 09:16 am
  • அ+ அ-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட பெண் தன்னார்வலரை போலீஸார் கைது செய்தனர்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் திருச்சி கே.கே.நகரில் தனியாருக்குச் சொந்தமான மறுவாழ்வு மையம் செயல்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பெற்றுவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் தமிழ்ச்செல்வன் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அதுவரை தமிழக அரசே மது மறுவாழ்வு இல்லங்களை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி, சென்னை மெரினா, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு தேசிய கொடியுடன் அமர்ந்து நேற்று காலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மதுவின் காரணமான கொடூர குற்றச் சம்பவங்கள், தற்கொலைகள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இருந்து மக்களைக் காத்திட மது மறுவாழ்வு இல்லங்களை தமிழக அரசு அமைத்திட வேண்டும். மேலும் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி சிலை முன்பு, மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் வழியில் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளேன்’’ என்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மெரினா காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கலைச்செல்வியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மயக்கம் அடைந்தார். போலீஸார் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close