[X] Close

திறந்திடு சீஸேம் 36: வாசிக்க முடியாத புத்தகம்!


36

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 09:33 am
  • அ+ அ-

-முகில்

ஒரு மர்மமான விஷயத்துக்கான விடை கண்டு பிடிக்கவே இயலவில்லை என்றால், இறுதியாக அதற்கு இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்படும். ‘இதெல்லாமே ஏலியன்களின் வேலை’ என்று. இந்த ‘வாய்னிச் புத்தகத்தின்’ விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. ‘யாராலுமே வாசிக்க முடியாத புத்தகமாக அல்லவா இருக்கிறது. இது இந்த உலகத்தில் இருந்த அல்லது இருக்கும் மொழிகளால் எழுதப்பட்ட புத்தகமே அல்ல. ஏலியன்களின் விநோத மொழியில் எழுதப்பட்ட புத்தகம். வேற்று கிரகத்திலிருந்து வந்த யாரோ ஒரு ஏலியன் இதை இங்கே விட்டுச் சென்றிருக்கலாம்.’

கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கலாம். ஆனால், ஏலியன் எழுதிய புத்தகம் என்பது உண்மை இல்லை. எனில், எது உண்மை? வாய்னிச் புத்தகத்தின் வரலாறு என்ன?

கி.பி. 1585-ல் பிறந்த, பிராக் நகரத்தைச் சேர்ந்த (இன்றைய செக் குடியரசின் தலைநகரம்) ஜார்ஜ் பரேஸ் என்பவர்தாம் இந்த வாசிக்க முடியாத புத்தகத்தை முதன் முதலில் வாங்கி வைத்திருந்ததாக வரலாறு ஆரம்பிக்கிறது. ஆனால், ஜார்ஜுக்கு முன்பு யாரிடமெல்லாம் புத்தகம் இருந்தது என்று சொல்லும் தகவல்களும் இருக்கின்றன.

ஜார்ஜ், பழமையான பொருட்களைச் சேகரிப்பதிலும், அவற்றை ஆய்வு செய்வதிலும் ஆர்வம்கொண்டவராக இருந்தார். புனித ரோமப் பேரரசில் வாழ்ந்த அதானாசியஸ் கிர்செர் என்பவர், பண்டைய மொழிகளைப் புரிந்துகொண்டு மொழிமாற்றுவதில் வல்லவர் என்பதை ஜார்ஜ் கேள்விப்பட்டார். தன்னிடமிருந்த புத்தகத்தின் சில பக்கங்களின் பிரதியை மட்டும் கிர்செருக்கு அனுப்பி வைத்தார். ‘என்னால் கண்டறிய முடியவில்லை. ஆனால், முழுப் புத்தகத்தைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று கிர்செர் பதில் அனுப்பினார். ஜார்ஜ், புத்தகத்தை அனுப்ப விரும்பவில்லை.

ஜார்ஜின் இறப்புக்குப் பிறகு, அவரது நண்பரும், சார்லஸ் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜோவன்னஸ் மார்கஸிடம் இந்தப் புத்தகம் சென்றது. கிர்செர் அவருக்கும் நண்பர்தான். எனவே மார்கஸ், கிர்செருக்குப் புத்தகத்தை அனுப்பி வைத்தார். அதில் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதம் சில செய்திகளைச் சொன்னது. இந்தப் புத்தகம் புனித ரோமப் பேரரசின் பேரரசராக இருந்த இரண்டாம் ருடால்ஃப் வசம் கொஞ்ச காலம் இருந்தது. அவர் இதனை 600 தங்க நாணயங்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

sesame 2.jpg

பதிமூன்றாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த தத்துவவியலாளரான ரோஜர் பகான் என்பவரே இந்த நூலின் ஆசிரியர் என்பது பேரரசர் ருடால்ஃபின் கணிப்பு. பின்பு இந்தப் புத்தகம், ருடால்ஃபின் மருத்துவராகவும், அவரது தோட்டங்களைக் கவனித்துக்கொண்ட தாவரவியலாளராகவும் பணியாற்றிய ஜேக்கபஸ் ஹார்கிக்கி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை மார்கெஸ் எழுதிய கடிதத்திலுள்ள செய்திகள். கடிதத்திலிருக்கும் தேதி, 19 ஆகஸ்ட், 1665.

அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு இந்தப் புத்தகம் என்ன ஆனது, யாரிடமிருந்தது என்பது குறித்த செய்திகள் கிடையாது. அது கிர்செரின் நூலகத்தில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பின்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் இத்தாலியில் சிதறிக்கிடந்த ராஜ்யங்களை ஒன்றிணைக்க, இரண்டாம் விக்டர் இமானுவேல் என்ற அரசர் போர்களை நடத்தினார். அவரால் ஏகப்பட்ட செல்வம் எடுத்துச் செல்லப்பட்டது. அதில் இந்தப் புத்தகமும் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

1912-ல் ‘சொசைட்டி ஆஃப் ஜீஸஸ்’ என்ற அமைப்பு நிதி திரட்டுவதற்காகப் பழம்பொருட்கள் சிலவற்றை ஏலம்விட்டது. வில்ஃப்ரிட் வாய்னிச் என்ற போலந்து நாட்டுக்காரர், 30 புத்தகங்களை வாங்கினார். அதில் இந்த வாசிக்க முடியாத பழைய புத்தகமும் இருந்தது. அதிலிருந்து அந்தப் புத்தகம், ‘வாய்னிச் புத்தகம்’ என்ற பெயராலேயே அடையாளப்படுத்தப்பட்டது. வாய்னிச்சின் தொழிலே, பழமையான அரிதான புத்தகங்களை உலகம் முழுவதிலுமிருந்து  சேகரிப்பதுதான்.

வாய்னிச்சும் இந்தப் புத்தகம் எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது, எதைப் பற்றிப் பேசுகிறது என்று ஆய்வில் ஈடுபட்டார். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவரது காலத்துக்குப் பின் வாய்னிச்சின் மனைவி, மகள், மகளது தோழி என்று புத்தகம் கைமாறியது. அந்தத் தோழி அன்னே, 1969-ல் வாய்னிச்சின் புத்தகத்தை, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்துவிட்டார். இப்போதும் அங்குதான் வாய்னிச் புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னமும் இந்தப் புத்தகம் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

கார்பன் டேட்டிங் வயதுக் கணிப்பின்படி வாய்னிச் புத்தகம், பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கு முன்பே எழுதப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இந்தப் புத்தகத்தின் பூர்விகம் இத்தாலியாக இருக்கலாம். இது எழுதப்பட்டிருப்பது எந்த மொழியில் என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

sesame 3.jpg

ஆங்காங்கே சில லத்தீன் வார்த்தைகள் தென்படுகின்றன. பண்டைய ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இது புழக்கத்திலிருந்த எந்த மொழியிலும் எழுதப்பட்டதில்லை. யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்ட புதிய விநோத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட, மெல்லிய விலங்கு தோலால் வாய்னிச் புத்தகத்தின் பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன. இறகில் மை தொட்டுத் தொட்டு புத்தகத்தில் எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. படங்களும் அதே போன்று வரையப்பட்டிருக்கின்றன. Iron gall ink எனப்படும் இரும்பு உப்புகள், தாவரங்களின் சாறுகள் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மையே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில படங்களில் வண்ணமானது பிற்காலத் தில் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 272 என்று நம்பப்படுகிறது. சில பக்கங்கள் தொலைந்ததுபோக, இப்போது 240 பக்கங்கள் மட்டும் இருக்கின்றன. பெரும்பாலான பக்கங்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சில பெரிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. அந்தப் பக்கங்கள் இரண்டாகவோ, மூன்றாகவோ மடிக்கப்பட்டிருக்கின்றன. இது முழுக்க கைகளாலேயே எழுதப்பட்ட, வரையப்பட்ட புத்தகம். அட்டையில் தலைப்போ, புத்தகம் எழுதியவர் பெயரோ இல்லை.

இதில் வரையப்பட்டிருக்கும் படங்களை வைத்து இந்தப் புத்தகம் என்னென்ன பிரிவுகளில் எல்லாம் பேசுகிறது என்று யூகிக்க முடிகிறது. உயிரியல், தாவரவியல், வானவியல், அண்டவியல், மருத்துவ இயல் போன்ற பிரிவுகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. எனவே சில ஆய்வாளர்கள் இது, ‘பசுமைப் புரட்சிக்கான மாபெரும் புத்தகம்’ என்று சொல்கிறார்கள்.

சிலர் ‘மாபெரும் வாழ்க்கைத் தத்துவங்களை இந்தப் புத்தகம் பேசுகிறது’ என்கிறார்கள். சிலர் மருத்துவப் புத்தகம் என்கிறார்கள். அதுவும் பெண்களின் படம் நிறைய இருக்கிறது. ஆகவே, பெண்களுக்கான மருத்துவம் குறித்த புத்தகம் என்கிறார்கள். இன்னும் சிலர், இது யாரோ பைத்தியக்காரத்தனமாகக் கிறுக்கி வைத்தது. இதில் உள்ள எதற்குமே அர்த்தம் கிடையாது. இந்தப் புத்தகமே மதிப்பற்றது. இதை ஆய்வு செய்வதே வெட்டி வேலை என்று ஒரேடியாக ஒதுக்கியும் வைக்கிறார்கள்.

இதுவரைக்கும் நூற்றுக்கணக்கானோர் இந்தப் புத்தகத்தை வைத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் களத்தில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட குறியாக்கவியலாளர்கள் (Cryptographers), வாய்னிச் புத்தகத்தை ஆராய்ந்து, எதுவும் புரிந்துகொள்ள இயலாமல் தோல்வி கண்டுள்ளனர்.

sesame 4.jpg

வாய்னிச் புத்தகத்தின் நோக்கம் இதுதான் என்று சில ஆய்வாளர்கள் தம் கருத்தை அழுத்தமாக முன் வைத்தாலும் எதுவும் முழுமையாக ஒப்புக்கொள்ளப்படவில்லை. விநோத முகம் கொண்ட மனிதர்கள், விதவிதமான தாவரங்கள், யாருமே கண்டிராத பூக்கள், அதிசய விலங்குகள், குழப்பும் வரைபடங்கள், தலைசுற்றச் செய்யும் எழுத்துகள் என்று நிரம்பிக் கிடைக்கும் இந்தப் புத்தகம் குறித்த முழு உண்மை எப்போது வெளிப்படும் என்று தெரியவில்லை. சுமார் 500 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இன்றும் பலராலும் புரிந்துகொள்ளப்படாத பொக்கிஷமாகத்தான் பார்க்கப்படுகிறது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close