[X] Close

இப்படிக்கு இவர்கள்: கருவறை முதல் கல்லறை வரை நீளும் ஊழல்


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 09:20 am
  • அ+ அ-

கருவறை முதல் கல்லறை வரை நீளும் ஊழல்

மு.இராமனாதனின் ‘ஊழலை நாம் இயல்பாக்கிக் கொண்டோமா?’ கட்டுரை எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருந்தத்தக்க விஷயம். இங்கே கருவறை முதல் கல்லறை வரை ஊழல் நிறைந்திருக்கிறது.  அதை நாம் இயல்பாக்கியுமிருக்கிறோம். ஹாங்காங்கில் கடைப்பிடிக்கப்படுவதைப் போல ஊழலுக்கு எதிரான மனோபாவத்தைப் பள்ளிப் பருவம் முதலே பிள்ளைகளிடம் கற்றுத்தருவது தொடர்பாக நாம் யோசிக்க வேண்டும். அதற்கு முன்பாக, மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம்.

- வெள்ளை பாஸ்கர், அலங்காநல்லூர்.

தண்ணீர்: பதறவைக்கும் தரவுகள்

ஜூன் 4 அன்று ‘இந்து தமிழ்’ நடுப்பக்கங்களில் வெளியான ‘தண்ணீரைப் பேசுவோம்’ தலையங்கம், ‘தண்ணீர்... தண்ணீர்!’ புகைப்படத் தொகுப்பு, ‘தண்ணீர் பஞ்சம்: இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்’ கட்டுரை படித்தேன். இயற்கை வளம் நிறைந்த நாடு, இன்று தண்ணீர்ப் பஞ்சத்தில் வாடுவது ஜீரணிக்க முடியாத விஷயம்.

தலையங்கத்தில் நீர் மேலாண்மையைக் கையாள்வதில் அரசாங்கங்கள் தவறியதன் விளைவைப் பேசியதோடு, நடுப்பக்கங்களில் இனி இதைத் தொடர்ந்து பேசுவோம் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. ஒவ்வொருவரும் மானசீகமாக இந்த இயக்கத்தில் கைகோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும்கூட. சமூகம் முழுக்கவும் விழித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தப் பக்கங்கள் உணர்த்துகின்றன. தரவுகளெல்லாம் பதறவைக்கின்றன.

இதற்கு முன்பும், நம் ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடர்ந்து தண்ணீர் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. 2013 டிசம்பரில் ‘ஒரு முட்டை உற்பத்திக்குத் தேவை 196 லிட்டர் மறைநீர்’ என்ற கட்டுரைக்கும், 2016 ஜனவரியில் வெளியான ‘மறைநீரின்றி அமையாது உலகு’ என்ற கட்டுரைக்கும் தற்போதும் மறுபிரசுரம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதோ இப்போது தண்ணீர்ப் பிரச்சினையைத் தீவிரமாகப் பேசத் தொடங்கியிருக்கிறோம். எதிர்வரும் காலங்களில் இதை மறுபிரசுரம் செய்யத் தேவையில்லாத அளவுக்கு நம் சூழல் மாற உழைக்க வேண்டும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

தலைமைப் பண்புக்கான இலக்கணம்

ஜூன் 3 அன்று கருணாநிதியின் பிறந்த நாள் சிறப்புப் பக்கங்கள் வாசித்தேன். தான் இல்லாத இடத்திலும் தனக்கான நேர்த்தியோடு அவ்விடத்தைச் செயல்படச் செய்வதே தலைமையின் மிகச் சிறந்த ஆளுமைத்திறன் என்பதை இப்போதிருக்கும் கோபாலபுரம் இல்லத்தின் நிலை உணர்த்துகிறது.

கருணாநிதியின் இன்மையிலும் அதே பணியாளர்களைக் கொண்டு அலுவலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதும், அவர் வாழ்ந்தபோது இருந்த அதே சூழலைத் தற்போதும் அவரது வீட்டில் தொடரச் செய்துகொண்டிருக்கும் அவரது வழித்தோன்றல்களின் பண்பும், அவரது திராவிடக் கொள்கைகளை மக்கள் இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பதும் என இவையெல்லாம் கருணாநிதியின் தலைமைப் பண்பின் அடையாளங்களாகவே திகழ்கின்றன.

- ம.தனப்பிரியா, கோவை.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close